ரெய்டு மூலம் அமலாக்கத் துறை திமுகவுக்கு தேர்தல் பரப்புரை செய்வதாக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று (ஜூலை 17) அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு புறப்பட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே பாட்னாவில் கூட்டத்தை கூட்டி முடிவுகளை எடுத்தோம். தொடர்ந்து கர்நாடகாவில் இன்றும் நாளையும் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 24 கட்சிகள் பங்கேற்கின்றன.
இப்படி தொடர்ந்து கூட்டம் நடத்தப்படுவதால் பாஜக ஆட்சிக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் அமலாக்கத் துறையை ஏவிவிட்டுள்ளனர். ஏற்கனவே வட மாநிலங்களில் இந்த பணிகளை செய்து கொண்டிருந்தனர். தற்போது தமிழ்நாட்டிலும் செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் திமுக கவலைப்படவில்லை.
இன்று பொன்முடி இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது பொய்யாக போடப்பட்ட வழக்கு. கடந்த 10 ஆண்டு காலம் அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் இதுபோன்று நடவடிக்கை இல்லை.
அண்மையில் பொன்முடி இரண்டு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கையும் அவர் சட்ட ரீதியாக சந்திப்பார். வரக் கூடிய தேர்தலில் இதற்கெல்லாம் மக்கள் பதில் வழங்க தயாராக இருக்கிறார்கள்.
பாட்னா, பெங்களூரைத் தொடர்ந்து பல மாநிலங்களில் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்புவதற்காக பாஜக செய்யும் தந்திரம் தான். இதற்கெல்லாம் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஏற்கனவே ஆளுநர் எங்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தை செய்துகொண்டிருக்கிறார். தற்போது அமலாக்கத் துறை செய்து கொண்டிருக்கிறது. எனவே எங்களுக்கு தேர்தல் வேலை சுலபமாக இருக்கும் என்று கருதுகிறேன்” என்று கூறினார்.
பிரியா