டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் நேற்று (மார்ச் 15) கைது செய்யப்பட்ட பாரத ராஷ்டிரிய சமிதி மூத்த தலைவர் கவிதாவை மார்ச் 23-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் இன்று (மார்ச் 16) உத்தரவிட்டுள்ளது.
டெல்லி புதிய மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக ஹைதராபாத்தில் கவிதாவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. இதனை தொடர்ந்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து நேற்று இரவே டெல்லிக்கு அழைத்து சென்றனர்.
இதனையடுத்து அவரை 10 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்தது.
முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, ”சட்டவிரோதமாக அமலாக்கத்துறையினர் என்னை கைது செய்துள்ளனர். சட்டபோராட்டம் நடத்தி வெளியே வருவேன்” என்று தெரிவித்திருந்தார்.
டெல்லி அவென்யூ நீதிமன்றத்தில் கவிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் விக்ரம் செளத்ரி ஆஜராகி, ”அமலாக்கத்துறையால் கவிதா கைது செய்யப்பட்டது அதிகார துஷ்பிரோயகம். அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
அப்போது அடுத்த விசாரணை வரும் வரை கவிதாவுக்கு சம்மன் அனுப்ப மாட்டோம் என்று அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாய்மொழியாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் தங்கள் உத்தரவாதத்தை பின்பற்றவில்லை” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அமலாக்கத்துறை தரப்பில் சோகப் ஹோசைன் ஆஜராகி, “கவிதா வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றம் உள்பட எந்த நீதிமன்றத்திலும் நாங்கள் எந்தவித உத்தரவாதமும் அளிக்கவில்லை.
மதுபான ஊழல் வழக்கில் கவிதாவின் பங்கை நிரூபிக்க நம்பத்தகுந்த ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது. எனவே அவரை 10 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும்” என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கவிதாவை மார்ச் 23-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சித்திரைத் திருவிழா… அக்னி நட்சத்திரம்… தேர்தல் தேதிக்குள் இருக்கும் சுவாரஸ்யங்கள்!
ஆந்திரா, அருணாச்சல், சிக்கிம், ஒடிசா சட்டமன்ற தேர்தல்கள் முழு விவரம் இதோ!