சென்னையில் ஜாபர் சாதிக் வீடு மற்றும் இயக்குனர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 9) சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் கடந்த மார்ச் 9-ஆம் தேதி கைது செய்தனர்.
ஜாபர் சாதிக் தயாரித்த இறைவன் மிகப்பெரியவன் படத்தை அமீர் இயக்கியிருந்தார். இதனையடுத்து போதைப்பொருள் வழக்கில் ஆஜராக இயக்குனர் அமீருக்கு என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்தநிலையில், ஏப்ரல் 2-ஆம் தேதி டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அமீர் ஆஜரானார். அப்போது, ஜாபர் சாதிக்குடன் அமீருக்கு உள்ள தொடர்பு குறித்து, என்சிபி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், சென்னை மயிலாப்பூர் அருளானந்தம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீடு மற்றும் அவரது தொழில் கூட்டாளிகள் வீடு மற்றும் அலுவலகங்கள், தியாகராய நகரில் உள்ள இயக்குனர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வர உள்ள நிலையில், ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தலைவர் 171 : ரஜினிக்கு ஜோடி இவங்களா?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!