bail ED claims jailed Senthilbalaji is hale and healthy

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

அரசியல்

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 19) மறுத்துவிட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் அக்டோபர் 9 ஆம் தேதி திடீர் உடல் நலக் குறைவால் அவர் புழல் சிறையில் இருந்து அதிகாலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவரது கால் மரத்துப் போனதால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின் மீண்டும் புழல் சிறைக்குத் திரும்பினார்.

இந்த நிலையில் அக்டோபர் 10 ஆம் தேதி செந்தில்பாலாஜியின் உடல் நிலையை மட்டுமே கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை கால அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை அக்டோபர் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அன்று, “செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

எனவே அவருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று அவர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதை எதிர்த்து அமலாக்கத்துறை கடுமையாக வாதிட்டது. “செந்தில் பாலாஜி ஆரோக்கியமாக தான் இருக்கிறார். உடல்நலம் என்ற காரணத்தைக் காட்டி ஜாமீன் பெறுவதற்கு தந்திரம் செய்கிறார்.

இப்போது சிறையில் இருக்கும்போது கூட அவர் துறையில்லாத அமைச்சராக தான் இருக்கிறார். எனவே ஜாமினில் சென்றால் அவர் வழக்கு விசாரணையை சீர்குலைக்க முயற்சிப்பார்” என்று ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 19 தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

50 நாளில் 50 இலட்சம்: நீட் தேர்வு ரத்து கையெழுத்து இயக்கம் தொடர்பாக உதயநிதி ஆலோசனை!

இந்தியாவை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்த நியூசிலாந்து!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
3