பினராயி விஜயன் மகள் மீது வழக்கு பதிந்த அமலாக்கத்துறை..கொதிக்கும் கேரள சிபிஎம்!

Published On:

| By vivekanandhan

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மீது அமலாக்கத்துறை PMLA (Prevention of Money Laundering) சட்டத்தின் கீழ் பண முறைகேடு வழக்கைப் பதிந்திருக்கிறது.

அமலாக்கத்துறை பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில் வீணா விஜயன் நடத்தி வரும் ஐ.டி நிறுவனமான Exalogic Solutions Private Limited பெயரும், கொச்சினைச் சேர்ந்த Cochin Minerals And Rutile Ltd (CMRL) நிறுவனத்தின் பெயரும், கேரள அரசின் மாநில தொழிற்சாலை மேம்பாட்டுக் கழகத்தின் (KSIDC) பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த வழக்கு ஏற்கனவே மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள விசாரணை அலுவலகத்தினால் விசாரிக்கப்பட்டு வந்தது. இதனை தற்போது அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. சமீபத்தில் பாஜகவில் இணைந்த பி.சி.ஜார்ஜின் மகனான ஷோன் ஜார்ஜ் என்பவரின் புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு அமலாக்கத்துறையால் பதியப்பட்டுள்ளது.

கொச்சின் மினரல் நிறுவனமான CMRL, வீணா விஜயனின் ஐடி நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு துவங்கி மூன்று ஆண்டு காலத்தில் 1.72 கோடி ரூபாயை அளித்திருப்பதாகவும், இந்த பணத்திற்காக எந்த சேவையையும் வீணா விஜயனின் நிறுவனம் CMRL-க்கு அளிக்கவில்லை என்றும், இது ஒரு சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்றும் ஆகஸ்ட் 2023 இல் வெளியான வருமான வரித்துறை அறிக்கை குற்றம் சாட்டியிருந்தது.

2019 ஆம் ஆண்டு CMRL நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் இதுபோல் பலருக்கு நிதி அளித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. கேரள அரசு நிறுவனமான KSIDC இந்த CMRL நிறுவனத்தின் 13% பங்குகளை வைத்திருக்கிறது.

இந்த வழக்கு கேரள முதலமைச்சரைக் குறிவைத்து பதியப்பட்டுள்ளதா என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தனிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, ”நீங்கள் யாரை வேண்டுமானாலும் அரசியல் ரீதியாகக் குறிவைக்க முடியும். ஆனால் குறிவைப்பது யார் என்பதுதான் முக்கியம். அமலாக்கத்துறை பாஜகவிற்கு ஒரு தினக் கூலியைப் போன்று வேலை செய்து வருகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வராய் இருந்த ஹேமந்த் சோரென், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது எதிர்கட்சிகளால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகளும் அமலாக்கத்துறையின் ரேடாரின் கீழ் வந்திருக்கிறார்.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜக கூட்டணி மற்ற மாநிலங்களில் எப்படி இருக்கிறது?

கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!

செந்தில் பாலாஜியின் புதிய மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.