“நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என ED கேட்டது” : செந்தில் பாலாஜி தரப்பு!

அரசியல்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது அவரது தரப்பு பரபரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நேற்றுடன் மூன்று மாதம் நிறைவடைந்துவிட்டது.

தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 15) நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

“செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது. இந்த 9 ஆண்டுகளில் செந்தில் பாலாஜி வருமான வரியை தாக்கல் செய்துள்ளார்.

சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும். வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆண்டில் இருந்து தற்போது வரை  செலுத்தப்பட்ட வருமான வரி ஏற்கப்பட்டிக்கிறது.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டிருக்கிறது.

ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா? இல்லையா? என்பதை விசாரணை அமைப்புதான் நிரூபிக்க வேண்டும்.

வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத் துறையிடம் தான் இருக்கிறது. எனவே செந்தில் பாலாஜியால் சாட்சிகளை கலைக்க முடியாது. அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் நிலையில் எங்கும் தப்பிச் செல்லவும் முடியாது.

30 நிமிடங்களுக்கு மேல் நிற்க முடியாத அளவுக்குத்தான் தற்போது செந்தில் பாலாஜியின் உடல்நிலை இருக்கிறது. செந்தில் பாலாஜி எங்கும் தப்பி செல்லாமல் விசாரணையை எதிர்கொள்வார்.

3,000 கோடி, 20,000 கோடி ஊழல் செய்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் இது அல்ல. அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் கணினியில் வைக்கப்பட்டுள்ளதால் அவற்றை கலைக்க முடியாது” என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.

மேலும் அமலாக்கத் துறை மீது முக்கிய குற்றச்சாட்டை செந்தில் பாலாஜி தரப்பு முன்வைத்துள்ளது.

அதில், இந்த வழக்கின் மின்னணு ஆதாரங்களை ஏற்கனவே அமலாக்கத் துறை திருத்திவிட்டது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

“வழக்கில் கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் இருந்த 284 பைல்களில் 222 பைல்கள் அழிக்கப்பட்டுள்ளன. புதிதாக 441 பைல்கள் குறிப்பிட்ட பென்டிரைவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பென்டிரைவுகளை 6 நாட்கள் சட்டவிரோதமாக அமலாக்கத் துறை வைத்திருந்தது” என்றும் செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

அமலாக்கத் துறை தரப்பில், “ஐபிசி போன்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தால் அவருக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்யலாம். ஆனால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது.

ஜாமீன் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் அல்ல. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 20ஆம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பிரியா

இரண்டு அணியும் ஒரே ஸ்கோர்… ஆனால் பாகிஸ்தான் தோற்றது எப்படி?

“தமிழகத்தின் திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகிறார்கள்” – ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *