மீண்டும் எஸ்.ஆர்… ஓரங்கட்டப்பட்ட ராஜப்பா… புதுமுகம் பொன்னர்-சங்கர்… முடிவுக்கு வரும் மணல் பஞ்சாயத்து!
சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகள் விரைவில் செயல்பட இருப்பதாக திமுக மேலிட வட்டாரங்களில் பேச்சு அதிகமாகி இருக்கிறது.
கடந்த 2023 செப்டம்பரில், தமிழகத்தில் இருக்கும் அரசு மணல் குவாரிகளில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை ஆரம்பித்தது. சுமார் ஒரு வார காலத்துக்கு மேல் நீண்ட இந்த சோதனையில், தமிழ்நாட்டில் இருக்கும் அரசு மணல் குவாரிகளில் முறைகேடுகள் அதிகம் நடப்பதாகவும், மத்திய அரசுக்கு இதனால் கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பிலிருந்து தகவல்கள் கசிந்தன.
மேலும் அடுத்தடுத்து நீர்வளத்துறை அதிகாரிகள் ஐந்து மாவட்ட கலெக்டர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீவிரமானது. நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இதையடுத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனையும் அமலாக்கத்துறை விசாரிக்கும் என்ற பரபரப்பு அதிகாரிகள் வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் ஏற்பட்டது.
அமலாக்கத்துறை நடவடிக்கைகள் தொடர்ந்ததால் அரசு மணல் குவாரிகளின் செயல்பாடுகள் முடங்கின. இதனால் மணல் விற்பனை பெருமளவு நின்று போனது. மணல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடந்த ஒரு வருட காலமாக தமிழகத்தில் கட்டுமான பணிக்கு எம் சாண்ட் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் விலையும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில் அமலாக்க துறையின் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் கடிவாளம் போட்ட நிலையில், மீண்டும் அரசு மணல் குவாரிகளை இயக்குவதற்கு முடிவெடுத்திருக்கிறது என்று மணல் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
இதுபற்றி நீர்வளத் துறை வட்டாரத்தில் விசாரித்த போது, “மணல் குவாரிகளை அரசே நடத்தி வந்தாலும்… இந்தத் தொழிலில் முக்கியமான தனியார்கள் தான் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ் ஆர் எனப்படும் எஸ் ராமச்சந்திரனின் கைதான் மணல் பிசினஸில் ஓங்கியிருந்தது. இவர் மற்றும் ரத்தினம் உள்ளிட்டோர் மணல் பிசினஸில் பெரிதும் பேசப்பட்டனர்.
இவர்கள் மீது அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அமலாக்கத்துறையின் அதிகார வரம்பில் மணல் குவாரிகள் வராது என்று சொல்லி தொழிலதிபர்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்தது நீதிமன்றம். மேலும் அவர்களின் சொத்து முடக்கத்தையும் ரத்து செய்தது.
இந்நிலையில் இப்போது மீண்டும் மணல் பிசினஸ் பற்றிய பேச்சு வந்ததும், பல்வேறு புள்ளிகள் அதிகார மையங்களில் இருக்கும் தங்களது தொடர்புகளை வைத்து மணல் பிசினசை கைப்பற்றுவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த ராஜப்பா அங்கே சீர்காழி லோக்கல் திமுக பிரமுகர் தேவேந்திரன் மூலமாக சென்னையில் தங்கி தீவிரமாக காய்களை நகரத்தினார்.
அதேபோல நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சேர்ந்த இரட்டையர்கள் பொன்னர்- சங்கர் ஆகியோர் ஆன்மீக திருப்பணிகளுக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் திருச்சி சமயபுரம் கோவிலுக்கு பெரிய அளவில் திருப்பணி செய்தவர்கள். சமயபுரம் மாரியம்மனின் தீவிர பக்தையான முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினிடம் நற்பெயரையும் இவர்கள் பெற்றார்கள். இந்த அடிப்படையில் இவர்களும் மணல் பிசினஸில் ஆர்வமாகி சில முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பல்வேறு புள்ளிகளின் முயற்சிக்கிடையே மாநிலம் முழுதும், மீண்டும் மணல் பிசினஸை ஏற்கனவே கவனித்து வந்த புதுக்கோட்டை எஸ் ஆர் என்கிற எஸ். ராமச்சந்திரனிடமே அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பழையபடி இதில் ஈடுபடுவாரா, அல்லது தனக்கு நெருக்கமானவர்களை வைத்து செய்யப் போகிறாரா என்றும் பேச்சுகள் உள்ளன.
மேலும், கரூர் மாவட்டத்தில் மட்டும் பொன்னர் -சங்கர் இரட்டையர்கள் மணல் பிசினஸை கவனித்துக் கொள்வார்கள் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மழை சீசன் முடிவுற்றதும் மீண்டும் மணல் பிசினஸ் கொடிகட்டி பறக்கப் போகிறது” என்கிறார்கள் நீர்வளத் துறை வட்டாரங்களில்.
–வேந்தன்
மீண்டும் திமுகவில் இணைந்தார் வழக்கறிஞர் ஜோதி
டிஜிட்டல் திண்ணை: உதயநிதி பிறந்தநாள்… காத்திருந்த அமைச்சர்கள்… பறந்து வந்த திருமா