ஆம் ஆத்மி எம்.பி. சங்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிஆர்எஸ் கட்சி எம்.எல்.சி கவிதா ஆகியோர் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு சங்சய் சிங் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த டிசம்பர் 22ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு பிப்ரவரி 9ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார் சஞ்சய் சிங்
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா மற்றும் பிரசன்னா பி வரலே ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஏப்ரல் 2) விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜுவிடம், சஞ்சய் சிங்கை இன்னும் காவலில் வைத்திருக்க வேண்டுமா என்பது தொடர்பாகப் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதாவது இந்த வழக்கில் சஞ்சய் சிங்கிடம் இருந்து பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை . அவர் 6 மாதங்களாக சிறையில் இருக்கிறார். அவருக்கு கஸ்டடி தேவைதானா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து இந்த மனு மதியம் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஜாமீன் வழங்க மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து சஞ்சய் சிங்கிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீன் காலத்தில் சஞ்சய் சிங் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட உரிமை உண்டு என்று தெளிவுப்படுத்திய நீதிபதிகள், இந்த உத்தரவை வேறு வழக்குக்கு முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
”கச்சத்தீவு விவகாரத்தில் பொய் பிரச்சாரம்” : திமுக, காங்கிரஸை விமர்சித்த நிர்மலா சீதாராமன்
கச்சத்தீவு விவகாரம் : அண்ணாமலை பேச்சுக்கு இலங்கை அமைச்சர் மறுப்பு!