பொருளாதார நிபுணரும், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு துணைத்தலைவருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், திராவிட மாடல், இலவசங்கள், தமிழகத்தின் கடன் சுமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
அந்த காணொலி பேட்டியின் வரி வடிவம் இங்கே…
திராவிட மாடல் என்ற வார்த்தையை புழக்கத்திற்கு கொண்டு வந்தது நீங்கள்தான். திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம், பெண்கள் முன்னேற்றம் என்று முதலமைச்சர் முன் வைக்கிறார். இந்த ஒன்றரை வருடங்களில் திராவிட மாடல் சாதித்தது என்ன?
திராவிட மாடல் என்பதை நான் உருவாக்கவில்லை. அதைப்பற்றி நிறைய பேசியிருக்கிறேன். முதலமைச்சர் மேடைதோறும் திராவிட மாடல் என்று பேசும்போது அதை நான் தான் உருவாக்கினேன் என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திராவிடத்தைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்து எழுதப்பட்ட திராவிட மாடல் என்ற புத்தகத்தில் இருந்த கருத்துகளைப் பற்றி அடிக்கடி பேசுவேன். இந்த திராவிட மாடல் என்ற விஷயத்தை முதலமைச்சர் அரசியல் ஆயுதமாக கையில் எடுத்தவுடன், அது பல பேருக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. பல பேருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. அப்படிதான் அந்த வார்த்தை வந்து சேர்ந்தது.

திராவிட மாடல் பற்றி எளிமையாக சொல்லவேண்டும் என்றால் எல்லோருக்கும் எல்லாம். இது கொடுத்தல் வாங்கல் பற்றிய விஷயம் இல்லை. அரசு கஜானாவில் இருந்து எடுத்துக் கொடுக்கிறது, மக்கள் வாங்கிச் செல்கிறார்கள் என்ற விஷயம் இல்லை. இந்த திராவிட மாடலின் 100 ஆண்டு வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஆட்சி செய்த முறை, செயல்படுத்திய திட்டங்கள் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
திராவிட மாடல் என்பதில் அதிமுகவும் அடங்குமா?
நிச்சயம் இதில் அதிமுகவும் உள்ளடங்கும். தமிழ்நாட்டின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அதில் ஒரு தொடர்ச்சி இருக்கும். உதாரணத்துக்கு பொது விநியோகத் திட்டத்தை எடுத்துக் கொண்டால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்று கலைஞர் ஆரம்பித்தார். இதை அரசு தான் நடத்தவேண்டும் என்று கருதி தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களையும் கண்டறிந்து குடும்ப அட்டை என்பதை அவர்தான் வழங்கினார். கலைஞர் ஆட்சியை இழக்கும்போது 500 கடைகள் தான் இருந்தன. ஆனால் இன்று 32,000 கடைகள் இருக்கின்றன. இதை திமுக, அதிமுக இரண்டும்தான் இணைந்து உருவாக்கியிருக்கின்றன.
இதேபோன்று, இட ஒதுக்கீடு, சத்துணவுத்திட்டம் போன்ற பலத் திட்டங்களை செம்மைப்படுத்துவது, விரிவுப்படுத்துவது என இரண்டுக் கட்சிகளுமே மாறி மாறி செய்து வருகின்றன. ஆனால் எல்லாத் திட்டத்துக்குமான சட்டகத்தை உருவாக்கியது என்றால் அது கலைஞர் தான். 1969 – 1976க்குள் அனைத்து சட்டகத்தையும் உருவாக்கி வைத்துவிட்டார். நியாய விலைக்கடைகளில் அரிசியை 1 ரூபாய்க்கு வழங்கினார். அதன்பிறகு ஜெயலலிதா அதை இலவசமாகக் கொடுத்தார். 1970 களில் கலைஞர் கண்ட கனவு உணவை எல்லோருக்கும் கொண்டு போய் சேர்த்துவிட வேண்டும் என்பது தான்.

கலைஞர் கண்ட வளர்ச்சி முழுமையான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா?
பசிக்காக ஒருவரிடம் போய் நிற்பது தான் நமது சமுதாயத்தின் மிகப்பெரிய ஆயுதம். பசியை வைத்தே ஒருவரை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள். கிராமப்புறங்களில் உள்ள அதிகார வர்க்கம் இதை அதிகம் செய்யும். அரசு இதை எப்போது கையில் எடுக்கிறதோ, அப்போது அந்த அதிகாரம் குலைந்துபோகும்.
தமிழர்களின் முக்கிய பண்டிகை பொங்கல். அந்தப் பண்டிகையை கொண்டாடுவதற்கு கூட அரசு மக்களை கையேந்த வைக்க வேண்டுமா?
யாரும் கையேந்தவில்லை. ஆயிரம் ரூபாயை எதிர்பார்த்து யாரும் இல்லை. நிறுவனங்களில் போனஸ் கொடுக்கிறார்கள். அதற்கு பேர் கையேந்துவது என்று அர்த்தமா?. கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் பண்டிகையை இன்னும் சிறப்பாக கொண்டாட வைப்பதற்காக தான் பணம் கொடுக்கிறார்கள்.

இலவசங்கள் கொடுப்பது தேசிய அவமானம்தானே?
இலவசம் தேசிய அவமானம் என்று யார் சொன்னார்களோ, அவர்கள்தான் இப்போது நாடு முழுவதும் இலவசமாக அரிசி கொடுக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
வறுமை ஒழிப்பு என்ற துறை புதிதாக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை சிலர் வரவேற்றாலும், அனுபவம் இல்லாத ஒருவருக்கு இந்தத் துறையை கொடுத்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொருளாதார நிபுணராக உங்கள் கருத்து என்ன?
அரசு இயந்திரம் எப்படி செயல்படுகிறது என்றால், சினிமாவில் காட்டுவது போன்று மேஜிக் அல்ல. எவ்வளவு பெரிய அமைப்பு, அனுபவம் வாய்ந்தவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். முன் நிற்பவர்கள் கடுமையாக வேலை செய்யும்போது, அந்தத்துறையில் இருக்கும் அனைவரும் வேலை செய்ய வேண்டிய சூழல் வரும். அனுபவங்கள் ஏற்கனவே பொதிந்து இருக்கிறது. இளையவர்கள் வருவார்கள், முதியவர்கள் ஏற்கனவே இருப்பார்கள். 40 ஆண்டுகால அனுபவசாலிகள் இருக்கிறார்கள். அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கும்போது, அதிகாரிகளும் சில ஆலோசனைகளை சொல்லுவார்கள். அப்போது பணி சிறப்பாக நடைபெறும்.

வெளியில் இருந்து பார்க்கும்போது தனி மனிதன் செய்யக்கூடிய வேலையாக தோன்றினாலும், இது ஒரு பெரிய கூட்டு முயற்சிதான். இந்த நிறுவனத்துக்கு நான் துணைத் தலைவராக இருந்தாலும், நான் மட்டுமே எல்லா வேலையையும் செய்தேன் என்று சொல்ல முடியாது. முதல்வரிடம் ஒரு அறிக்கை கொடுக்கவேண்டும் என்றால் எனக்கு கீழ் உள்ள அனைவரும் வேலை செய்தால்தான் முடியும்.
வேலைக்கான ஊதியம் வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்களே?
தமிழ்நாட்டில் 8 கோடி பேர் இருக்கிறார்கள். அனைவரிடம் இருந்தும் வரி வசூலிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஊதியத்தில் மாறுபாடு இருக்கிறது. அரசு ஊழியர்களும் நல்ல சம்பளம் வாங்குகிறார்கள். அதையும் தாண்டி அவர்களுக்கு தேவை இருந்தால் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசி தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆசிரியர்களோ, மக்களோ போராடி தான் தீர்வைப் பெற்றுக் கொள்ளவேண்டுமா?
ஜனநாயகம் என்றால் என்ன. தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டேயிருக்கும். ஆனால் நம்மிடம் இருக்கும் நிதி ஆதாரத்தை பொறுத்தே முடிவு செய்ய முடியும். அரசிடம் இருக்கும் நிதி எல்லையற்றது அல்ல. அதற்கு வரையறை உண்டு. மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரியிலிருந்தே அரசு நிதியை வழங்க முடியும். அரசு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கவேண்டும் என்று மக்களை கஷ்டப்படுத்த முடியாது. அதிலும் அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம், ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் போன்றவற்றை கொடுக்கவேண்டும்.

தமிழ்நாட்டின் கடன் சுமை குறையுமா?
கடன் சுமை குறைய வாய்ப்பே இல்லை. எப்படி குறைக்க முடியும். கடன் வாங்கக்கூடாது என்று யாருமே சொல்லவில்லை. ஆனால் வாங்கிய கடனை எதற்கு செலவு செய்கிறோம் என்பதே முக்கியம். கடன் வாங்கி மக்கள் முன்னேற்றத்திற்காக செலவு செய்தால் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாது. ஆனால் அதை செய்யாமல் உங்கள் கஜானாவுக்கு போகும்படி செய்தால் பொருளாதாரத்தில் தீங்கு விளைவிக்கும். அதுதான் அதிமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.
முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் ஒன்றிய அரசின் கொள்கைக்கும், மாநில அரசின் கொள்கைக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?
ஒன்றியத்திற்கு என்று தனி இடம் இருக்கிறதா. முதலீட்டாளர்களை ஈர்த்து எங்கு வைக்க முடியும். ஏதோ ஒரு மாநிலத்தில்தான் வைக்க முடியும். தொழில் தொடங்க மாநில அரசு தான் நிலம் கொடுத்தாக வேண்டும். அதனால் தான் ஒன்றிய அரசு சலுகைகளை அறிவிக்கிறது.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் முதலீட்டாளர் மாநாடு நடத்துகிறது. பல ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்ததாக சொல்கிறார்கள். ஆனால் செயல்பாட்டில் என்ன இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்பு கார் தொழிற்சாலை தொடங்கவேண்டும் என்றால் 15,000 பேர் தேவைப்படுவார்கள். தற்போது ஆயிரம் பேர் இருந்தாலே போதும். தொழில்நுட்பம் அந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

மெஷினே பெரும்பாலான வேலையை செய்துவிடுகிறது. ஆனால் அதுவே காலணி தொழிற்சாலையை எடுத்துக் கொண்டால் அதில் மனிதர்கள் தான் அதிகம் தேவைப்படுவார்கள். பெரம்பலூரில் காலணி தொழிற்சாலை தொடங்கிய உடனே 15,000 பேருக்கு வேலை கொடுத்திருக்கிறோம். விரிவுப்படுத்தினால் 30,000 பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள். எனவே இயந்திர மயமாகாத தொழிற்சாலை வேலை வாய்ப்பை அதிகம் தரும். ஆனால் மக்கள் பெரும்பாலும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்வதை விரும்புவதில்லை. நிறைய பேர் படித்தவர்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு உண்டான வேலையை உருவாக்கவேண்டும்.
நம்ம ஸ்கூல் போன்று அரசு திட்டத்தின் பெயரை ஏன் ஆங்கிலம் கலந்து வைத்திருக்கிறீர்கள்?
தற்போது பெரும்பாலான மக்கள் ஆங்கிலம் கலந்த தமிழையே பயன்படுத்துகிறார்கள். மக்களிடம் எளிதாக கொண்டு செல்வதற்காக அப்படி வைத்திருக்கிறோம்.
சந்திப்பு: பெலிக்ஸ் இன்ப ஒளி
தொகுப்பு: கலை.ரா
நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான்: தமிழகத்தில் பதுங்கலா?
தமிழகம், புதுவையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!