வட இந்தியர்கள் வருகை- தமிழர்கள் சோம்பேறிகளா? பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய்- நிபந்தனைகள் என்ன? பொருளாதார அறிஞர் ஜெ. ஜெயரஞ்சன் சிறப்புப் பேட்டி!

அரசியல் தமிழகம்

பொருளாதார  அறிஞரும் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு துணைத் தலைவருமான ஜெ.ஜெயரஞ்சன் மின்னம்பலத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், புலம்பெயர் தொழிலாளர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சி, மகளிர் உரிமைத் தொகை  உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

“சமீப காலங்களாக வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு கொடுக்கும் பங்களிப்பு உழைப்பு குறித்து சமீபத்தில் நீங்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தீர்கள் , வட இந்தியர்களால் பொருளாதாரம் அதிகரிக்கிறது என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் இன்னொரு புறம் வட இந்தியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்தும் நிலவிவருகிறது இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?”

”பல தொழில்கள் நடக்கிறது அது கட்டிட தொழிலாக இருக்கலாம், உற்பத்தி தொழிலாக இருக்கலாம் அல்லது சேவைத்தொழிலாக இருக்கலாம் எல்லாத்துறைகளிலும்  வேலை செய்வதற்கு நம்மிடம் போதுமான ஆட்கள் இல்லை. நாம் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக இருக்கிறோம்.

மிகவும் வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறோம் . இந்தியாவில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இவ்வளவு வேகமாக வளர்கிறோம் என்றால் அதற்கு உண்டான ஆட்கள் நமக்கு வேண்டும். ஆனால் அதற்கு போதுமான ஆட்கள் நம்மிடம் இல்லை. ஆட்கள் பற்றாக்குறையால் நாம் அவர்களை சார்ந்து இருக்க வேண்டியது இருக்கிறது.

தமிழ்நாட்டில் தனிநபர்  வருமானம் அதிகமாக இருப்பதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது . எடுத்துக்காட்டாக உத்தரபிரதேசம் , பிகார் போன்ற மாநிலங்களின்  தனிநபர் வருமானத்தை  விட தமிழ்நாட்டில் இருக்க கூடிய ஒருவரின் வருமானம் நாலரை மடங்கு அதிகம். சராசரியாக அந்த மாநிலங்களில் உள்ளவர்கள் ஐம்பதாயிரம் வருமானம் ஈட்டினால்  இங்கு உள்ளவர்கள் சராசரியாக இரண்டு லட்சம் வரை சம்பாதித்து கொண்டிருக்கிறர்கள்.

சமூக நீதி திட்டங்களால் தமிழ்நாட்டில் பல்வேறு மாணவர்கள் டாக்டர்களாக , பொறியாளர்களாக ஆகியிருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் 22 கோடி பேர் இருக்கிறார்கள் அவர்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரியை விட 8 கோடி மக்கள் உள்ள தமிழ்நாடு செலுத்தும் வரி அதிகம் . அதற்கு என்ன காரணம் என்றால்  நாம் அதிகமாக சம்பாதிப்பதாலும் , நிறைய செலவு செய்வதும்தான்.   வட மாநில தொழிலாளர்கள் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்க கூடிய தென் மாநிலங்களுக்கும், மேற்கு மாநிலங்களுக்கும் செல்கிறார்கள்.

எங்கு வளர்ச்சி இருக்கிறதோ அங்கு தான் வாய்ப்பு இருக்கும். வட இந்திய மாநிலங்களில், கிழக்கிந்திய மாநிலங்களில் வளர்ச்சியே இல்லை. ஆனால் அங்கு மக்கள் தொகை அதிகம். ஆனால் நாம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்கிறோம்”

தமிழர்கள் உழைக்கவில்லை,  வட இந்தியர்கள் கடினமாக உழைக்கிறார்கள் என்று சொல்லப்படுவது குறித்து…

“வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லக் கூடாது. புள்ளிவிவரம் தெரியாமல் முட்டாள்கள் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. அதனால் கடந்த மூன்று தலைமுறைகளாக படிப்படியாக நம் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது.

என்னை என் அப்பா வளர்த்ததை விட, நான் என் பிள்ளையை நன்றாக வளர்க்கிறேன். வசதியாக வளர்க்கிறேன். இதுதான் தமிழ்நாட்டின் நிலை.  கல்லூரியில் படித்துவிட்டு, பொறியியல் படித்துவிட்டு  ஹோட்டலில் வேலை செய்ய எப்படி வருவான் தமிழன்? இதைச் சொன்னால் தமிழன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று சொல்வதா?  தமிழ்நாட்டில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களை கூட அவர்கள் வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

அப்படி சொல்பவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால் பழைய மாதிரியே படிக்காமல் , சோற்றிற்கு வழியில்லாமல் அவர்களிடம் வந்து தட்டை எடுத்து கொண்டு நின்றால் தான் உழைக்கிறார்கள் என்று சொல்வார்கள். பொருளாதாரம் இயங்குவதற்கு வட மாநிலத்தவர்கள் பெரிய உந்து சக்தியாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நம்பி இருக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம். அதற்கு காரணம் என்னவென்றால் நம் மாநிலம் வளர்ந்திருக்கிறது.

 “இதை அரசியல் ரீதியாக  கையில் எடுப்பதன் நோக்கம் என்ன? 

“வேறு அரசியலை கையில் எடுக்க முடியாதவர்கள் தான் இந்த அரசியலை கையில் எடுக்கிறார்கள். பிகாரில் இருப்பவர்கள் தமிழர்கள் நம்மை தாக்குகிறார்கள் நாங்கள் உங்களை காப்பாற்றுகிறோம் என்று சொல்லி அவர்கள் அங்கு ஒரு அரசியலை செய்கிறார்கள். இங்கு உள்ளவர்கள் வட மாநிலத்தவர்கள் நம்வேலையை பறிக்கிறார்கள் என்று அரசியல் செய்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை சீர்குலைப்பதற்காகத்தான்  அவர்கள் இரு தரப்புமே  இப்படி செய்கிறார்கள்”

தமிழ்நாடு பட்ஜெட் வரவிருக்கிறது அதில் எதிர்பார்ப்புகள் நிறைய உள்ளது.  குறிப்பாக பெண்களுக்கான உரிமைத்தொகை…அதில் கட்டுப்பாடுகள் இருக்குமா?

இருக்கும். வருமான வரி கட்டுபவர்களுக்கு கிடையாது. வருமான வரி கட்டுபவர்களுக்கும், அரசாங்கத்திடம் சம்பளம் வாங்குபவர்களுக்கும் எதற்கு? இதுமாதிரியான கட்டுப்பாடுகள் எல்லாம் இருக்கும்.

இந்த பேட்டியின் முழு தொகுப்பை நமது மின்னம்பலம் யூ டியூப் பக்கத்தில் பார்க்கலாம்

சந்திப்பு : பெலிக்ஸ் இன்ப ஒளி

தொகுப்பு: மு.வா.ஜெகதீஸ் குமார்

எடப்பாடியுடன் இணைந்த ஓபிஎஸ் வேட்பாளர்!

நாடாளுமன்றத்தில் காதல் காட்சி!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
3
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *