விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்ததற்கு, முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 11) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேர்தலை சந்திக்கும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின் படி, குறைந்தபட்ச தகுதிகளை பூர்த்தி செய்தால் மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்படும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், விசிக இரண்டு தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. நாம் தமிழர் கட்சி தனித்து நின்று 8.16 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இதனால் இரண்டு கட்சிகளையும் மாநில கட்சிகளாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

இதற்கான கடிதத்தை விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. விசிகவுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பானை சின்னத்தை அதிகாரப்பூர்வமான சின்னமாக ஒதுக்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சி தரப்பில், நிலத்தை உழும் விவசாயி, புலி ஆகிய இரண்டு சின்னங்கள் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த இரண்டு சின்னங்களும் மற்ற அரசியல் கட்சிகளின் சின்னங்களுடம் ஒத்துப்போவதால் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய சின்னம் பெற விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை அடையாறில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் இதுகுறித்து கூறும்போது,
“இந்திய தேர்தல் ஆணையம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்து ‘பானை’ சின்னத்தை ஒதுக்கீடு செய்திருக்கிறது.
இந்த மகத்தான அங்கீகாரத்தை வழங்கியுள்ள தமிழக மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். தோழமை கட்சிகளுக்கு குறிப்பாக திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
தமிழக மக்களின் நலன்களுக்காக வாழ்வுரிமைகளுக்காக தொடர்ந்து விசிக போராடும். தமிழ்நாட்டு மக்களின் பேரன்பை பெற்ற ஒரு பேரியக்கமாக விசிக வளரும்.

விசிக அங்கீகாரம் பெறுவதற்கு இயக்கத் தோழர்கள் செய்த தியாகம் அளப்பரியது. முதன் முதலில் 1999-இல் விசிக தேர்தலில் போட்டியிடும் போது வன்முறையாளர்களின் தாக்குதலில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், ரத்தம் சிந்தினர். பாதிக்கப்பட்ட எமது தொகுதி வாக்காளர்களுக்கு இந்த வெற்றியை, அங்கீகாரத்தை சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
மேலும், விசிக மாநில அங்கீகாரம் பெற்றதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“இந்தப் பஞ்ச் டயலாகுலாம் இங்க எடுபடாது” : விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் தமிழர்கள்… உதயநிதி பெருமிதம்!