இசிஐ திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார்!
இசிஐ திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் (86) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று (செப்டம்பர் 22) காலமானார்.
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், ECI பேராயருமான எஸ்றா சற்குணம், கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பேராயர் எஸ்றா சற்குணம் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது உடலானது பொதுமக்கள் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது மகள்கள் வெளிநாட்டில் இருப்பதால், அவர்கள் வந்தவுடன் இறுதி சடங்கானது வரும் 26ஆம் தேதி நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் மூன்று முறை மாநில சிறுபான்மை ஆணையத் தலைவராக எஸ்றா சற்குணம் இருந்துள்ளார். மேலும் இந்திய சுவிசேஷ திருச்சபைகளில் முக்கிய பேராயராகவும் விளங்கி வந்தார்.
அவரின் கீழ் இந்தியா முழுவதும் 8436 திருச்சபைகளும், தமிழ்நாட்டில் 720 திருச்சபைகளும், ஐந்து பேராயர்களும், 540 ஆயர்களும், தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசுவாசிகளும் கொண்ட பேராயமாக ECI திருச்சபை இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
118 ஏக்கர் பரப்பளவில்… பசுமை பூங்கவாக மாறும் சென்னை கிண்டி ரேஸ் கிளப்!
செஸ் ஒலிம்பியாட் : முதல்முறையாக இந்தியா தங்கம் வென்று அசத்தல்!