“பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புக்கு தமிழர்கள் தான் காரணம்” என்று பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலேஜே மீது கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 20) உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே, “பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம்” என்று நேற்று பேசியது இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனைதொடர்ந்து, தனது பேச்சுக்கு ஷோபா மன்னிப்பு கேட்டார். இந்தநிலையில், மதுரையை சேர்ந்த தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் மதுரை காவல்நிலையத்தில் ஷோபா மீது இன்று நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளையில், தமிழக மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று புகாரளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், தேர்தல் நன்னடத்தை விதிமீறலில் ஈடுபட்ட ஷோபா மீது உரிய நடவடிக்கை எடுக்க கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புகார் அறிக்கையை 48 மணி நேரத்திற்குள் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தேர்தல்: ஸ்டாலின் பிரச்சார பயண திட்டம் முழு விவரம் இதோ!
மூளையில் ஆபத்தான ரத்தக் கசிவு..அப்பல்லோவில் நடந்த அறுவை சிகிச்சை..குணமாகி வரும் சத்குரு