தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் தரப்புக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் நேற்று (பிப்ரவரி 6) அறிவித்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து, சிவசேனா. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடந்து வந்தது.
2022 ஆம் ஆண்டு சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டது. சிவசேனா கட்சியில் இருந்து எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்று பாஜக ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றினார் ஏக்நாத் ஷிண்டே.
அதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மகாராஷ்டிராவில் மற்றொரு அரசியல் திருப்பம் ஏற்பட்டது.
சரத்பவார் தலைமையில் செயல்பட்டு வந்த தேசியவாத காங்கிரஸிலிருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து எம்.எல்.ஏக்களுடன் சென்று பாஜகவில் சேர்ந்தார்.
தேசியவாத காங்கிரஸில் இருந்த 53 எம்எல்ஏக்களில் 40 பேர் அஜித் பவார் உடன் சென்றனர். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்ற நிலையில் அவருடன் சென்ற 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவ்வாறு தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்ட நிலையில் அஜித் பவார் மற்றும் சரத்பவார் என இரு தரப்பினருமே கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரி வந்தனர்.
இந்த சூழலில் நேற்று தேர்தல் ஆணையத்தால் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் பவார் தரப்பே, அசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்றும். கட்சியின் பெயரும் கடிகார சின்னமும் அவரது தரப்புக்கு வழங்கப்படுகிறது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
நாட்டில் அரசியல் கட்சிகளின் வெளிப்படைத்தன்மை அற்ற செயல்பாடுகளால் பிரச்சனைகள் ஏற்படுவதாக கருத்து தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், இரு அணிகளும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டு உள்ளன. இந்த சூழலில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள அணிக்கு கட்சியின் சின்னம், பெயர் வழங்கப்படுகிறது என்றும் கூறியுள்ளது.
அதேசமயம் சரத்பவார் தரப்பு இன்று மதியம் 3 மணிக்குள் புதிய கட்சி பெயர் குறித்த மூன்று விருப்பங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்குமாறும் கூறியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு, சரத் பவார் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
“தேர்தல் ஆணையத்தின் முடிவு கண்ணுக்கு தெரியாத வெற்றி. இது மகாராஷ்டிரா மற்றும் மராத்தி மக்களுக்கு எதிரான மிகப்பெரிய சதி. இந்த முடிவால் நான் ஆச்சரியப்பட போவதில்லை” என்று சரத் பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் மும்பையில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமையகத்தை அஜித் பவார் உரிமை கோர வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விசா இல்லாமல் சுற்றுலா : ஈரான் அறிவிப்பு!
ஹெல்த் டிப்ஸ்: திடீரென தலை சுற்றுகிறதா… காரணம் என்ன? தீர்வு உண்டா?
குடும்ப அட்டையில் பெயரை உறுதி செய்யாவிட்டால் நீக்கம்!
வேலைவாய்ப்பு: தெற்கு ரயில்வேயில் பணி!
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!