தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கைவிட வலியுறுத்தியும், தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி மாதம்தோறும் மின் கணக்கீடு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (ஆகஸ்ட் 18) சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் முன்பு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 200 யூனிட்டுகளுக்கு மேல் இரண்டு மாதங்களுக்கு பயன் படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ. 27.50, 300 யூனிட் பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50,
இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 இலட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்படவுள்ளது எனவும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
மின் கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகளான, அதிமுக, பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ம.க. தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மின் கட்டணங்களை திரும்பபெற வலியுறுத்தி கண்டன அறிக்கை வெளியிட்டனர்.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்ககூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின் கட்டணத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று சிபிஐ(எம்) மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கூட்டணி ஆட்சியிடம் முறையிடும் வகையில் போராட்டம் நடைபெறுகிறது. தேர்தல் வாக்குறுதிபடி மாதம்தோறும் மின் கணக்கீடு நடைமுறையை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, வன்முறைக்கு தொடர்பில்லாத பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தங்கள் சாதியைக் கேட்டு கைது செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு திசை மாறி செல்கிறது, உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆகஸ்ட் 13ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் விசிக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஆகஸ்ட் 16ஆம் தேதி தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில், கோட்டையை முற்றுகையிடுவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன் அறிவித்துள்ளார். கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது முதல்வர் ஸ்டாலினுக்கு கூடுதல் அழுத்தமாகவே அமைகிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மனோரமா நியூஸ் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய போது, “திமுக கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கொள்கைக்கான கூட்டணி. இந்த கூட்டணி ஆரோக்கியமான முறையில் தொடரும்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
மோடிக்கு எதிராக மார்க்சிஸ்ட் 10 நாள் தொடர் பிரச்சாரம்!