தமிழக அரசு பேருந்துகளில் இந்த ஆண்டுக்குள் இ டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இன்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
அதுவரை பள்ளி மாணவர்கள் தற்போது பயன்படுத்தும் பேருந்து பயண அட்டையை பயன்படுத்தலாம். அதுபோன்று பள்ளி வாகனங்களில் முன்புறமும் பின்புறமும் கேமராக்கள் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
பேருந்து பணிமனைகளில் பணிகளில் இருக்கும் பணியாளர்கள் தொடர் விடுப்பில் இருப்பதால் தான் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்த அவர், இந்த பிரச்சினையை சரி செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும, அரசு பேருந்துகளில் பயண சீட்டு முறைக்கு பதிலாக இந்த ஆண்டுக்குள் இ டிக்கெட் முறை கொண்டு வரப்படும் என்றும், ஜி பே உள்ளிட்ட ஸ்கேனிங் முறைகளை பயன்படுத்தி இந்த டிகெட்டுகளை பெறலாம் என்றும் குறிப்பிட்டார் அமைச்சர் சிவசங்கர்.
– பிரியா