“நீட் தேர்ச்சி குறைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே காரணம்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 9) அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நீட் தேர்வில் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்குக் காரணம், திமுகவின் சுயலாப சிந்தனைகளும் இயலாமையின் மறுவுருவமாக திகழும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரே ஆவார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த E-Box எனப்படும் பயிற்சி முறையை திமுக ஏன் கைவிட்டது என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறுவது திமுக அமைச்சர்களின் கண்களை உறுத்துகிறது.
சென்ற ஆண்டு பெரிதளவு அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி மாணவிகளின் எதிர்காலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக விளையாடிய திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும்.
முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் முந்தைய திமுக ஆட்சியில் Fixing முறையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எவ்வாறு மருத்துவச் சேர்க்கை நடைபெற்றது என்பதை ஒரு நேர்காணலில் ஒப்புக்கொண்டார்.
அந்த நடைமுறையை மீண்டும் கொண்டுவந்து ஊழலில் கொழிக்க நீட் தேர்வை எதிர்த்து வருகிறது திமுக. ஓர் அரசின் கடமை மாணவர்களை தயார்படுத்தி அவர்களை எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள செய்வதுதானே தவிர, அவர்களைப் பலவீனப்படுத்துவது ஓர் அரசுக்கு அழகல்ல.
திமுக தொடர்ச்சியாக மாணவர்களைப் பலவீனப்படுத்தி வருவதை இனிமேலாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். அதனுடன் கைவிடப்பட்ட E-Box முறையை உடனடியாக செயல்படுத்திட வேண்டும்.
மேலும், சமூக நீதி மற்றும் சம உரிமைக்கு எதிராகச் செயல்பட்டு அரசுப்பள்ளி மாணவர்களை வஞ்சிப்பதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
கண்ணியமாகத்தான் பேசவேண்டுமெனில் பாஜக தலைவர் பொறுப்பே வேண்டாம்: அண்ணாமலை