தமிழகத்தில் தீபாவளி சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இத்தோடு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டையும் ஆரம்பித்து விட்டது.
நேற்று (அக்டோபர் 23) ஒரே நேரத்தில் சார்பதிவாளர், வருவாய்த்துறை, டாஸ்மாக் டிஎம் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக விடிய விடிய சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, தீபாவளி பண்டிக்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட பட்டாசு, ஸ்வீட் பாக்ஸ் மற்றும் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம்…
“தீபாவளி பண்டிகையை ஒட்டி லோக்கல் அரசியல்வாதிகள், செல்வாக்குமிக்க நபர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு சென்று ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு மற்றும் கவர் கொடுப்பது வழக்கம்.
இதேபோல தான் ஆர்டிஓ அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் புரோக்கர்கள், ரியல் எஸ்டேட் தொழிதிபர்கள் ஸ்வீட் பாக்ஸ் கொடுக்கப்போவதாக புகார்கள் வந்தது.
இதனால் இந்த அலுவலகங்களில் மாஸ் ரெய்டு நடத்தி வருகிறோம். நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் சார்பதிவாளர், ஆர்டிஓ, வருவாய்துறை, டாஸ்மாக் டிஎம் அலுவலகங்களில் ரெய்டு நடத்தினோம்.
இந்த ரெய்டில் தீபாவளிக்காக அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாசு, ஸ்வீட் பாக்ஸ் மற்றும் கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினோம். தீபாவளி முடியும் வரை இந்த ரெய்டு தொடரும்” என்கிறார்கள்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சோதனையைத் தொடர்ந்து காவல்நிலையங்களில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்களிடம் ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு மற்றும் கவர் வாங்கக்கூடாது என்று மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக சொல்கிறார்கள்.
இதனால் மாநிலம் முழுவதும் உள்ள காவல் நிலைய அதிகாரிகள் புகார்கள் சம்பந்தமாக மட்டுமே காவல்நிலையத்திற்குள் வர வேண்டும். தீபாவளி கிஃப்ட் என்று ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு பாக்ஸ், கவர் போன்றவை எடுத்து வரக்கூடாது என்று கவனமாக இருக்கிறார்கள்.
அதேபோல, முக்கிய துறை சார்ந்த வட்ட, மாவட்ட, மாநில அதிகாரிகள், தங்களது வீட்டிற்கு யாரும் வரவேண்டாம் அலுவலகத்திற்கும் காரணமில்லாமல் வரவேண்டாம் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். சிலர் ஒரேடியாக பயந்து வீடுகளை பூட்டிவிட்டு வெளியில் இருந்து வருகிறார்கள் என்கிறார்கள் வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள்.
அந்தந்த துறையின் மாநில உயர் அதிகாரிகள் மாவட்ட அதிகாரிகளுக்கு அன்பான அறிவுரையும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். அதாவது “அரசு அலுவலகங்களை குறிவைத்து சந்தர்ப்பத்தை தேடி வருகிறார்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள். அதனால் நீங்கள் அலர்ட்டாக இருந்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்” என்று எச்சரித்துள்ளனர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மாட்டிய மருத்துவமனை… மாயமான இர்பான்!
ஒரு பேக்கின் விலை ரூ.8 லட்சம் முதல் 4 கோடி … ஹமாஸ் தலைவர் மனைவியின் கையில் பிர்கின் ரக பேக்?