அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட சோதனையில், ரூ.26 லட்சம் பணம், ரூ. 1.2 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள், 1.680 கிலோ தங்க நகைகள் உள்பட பல கோடி மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நாமக்கல் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில், நேற்று கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவருக்கு நெருங்கிய உறவினர்கள் நண்பர்களுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணம் பற்றிய விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ரூ.26,52,660 பணம், ரூ.1,20,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள், 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கி கணக்குகள், 1.680 கிலோ எடையுள்ள தங்க நகைகள் , 6.625 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினி பதிவுகள் ஆகியவை கண்டறியப்பட்டன.
வழக்கிற்கு தொடர்புடைய பணம் ரூ. 14,96,900 மற்றும் 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
செல்வம்
ஸ்டாலின் போட்ட ஊழல் பட்டியல்: சிக்கிய பாஸ்கர் – சூடான பின்னணி!