கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி.
2015-2018 காலகட்டத்தில் தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு 500 கோடி இழப்பு ஏற்படுத்தியாகவும், தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதனடிப்படையில், எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (செப்டம்பர் 13) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 10 இடங்கள், கோவையில் 9 இடங்கள், தாம்பரம், ஆவடி, திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்கள் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று (செப்டம்பர் 12) சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை தற்போதைய சபாநாயகர் அப்பாவு அளித்த புகாரின் அடிப்படையில், தெரு விளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் எல்.இ.டி விளக்குகளை சந்தை விலையை விட அதிக விலைக்கு வாங்கியதாகவும், இதனால் அரசுக்கு 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மின்துறை வியாபாரத்தில் அனுபவமில்லாத நிறுவனங்களுக்கு, எஸ்.பி வேலுமணி டெண்டர் ஒதுக்கியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாரளித்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் எஸ்.பி வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், “2015-ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள 8 லட்சம் தெரு விளக்குகள் எல்.இ.டி விளக்குகளாக ரூ.300 கோடி செலவில் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

2016 -17 மற்றும் 2017 -18 நிதி ஆண்டில் எல்.இ.டி விளக்குகள் மாற்றுவதற்கு, ரூ.875,70,06,076 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி, எல்.இ.டி விளக்குகள் மாற்றும் திட்டத்தில் தனக்கு நெருங்கிய நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கியுள்ளார். டெண்டர் விதிகள் 1998,2000-ஐ மீறி ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

சந்தை விலைக்கும் டெண்டர் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட எல்.இ.டி பல்புகள் விலைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. சந்தை விலையை விட அதிக விலைக்கு எல்.இ.டி பல்புகள் வாங்கப்பட்டுள்ளது.
சந்தை விலையுடன் ஒப்பிடும் போது, சேலம், தர்மபுரி, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, மாவட்டங்களில் வாங்கப்பட்ட எல்.இ.டி விளக்குகளால் அரசுக்கு ரூ.74,00,58,700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
டெண்டர் வழங்கிய கே.சி.பி இன்ஜினியர்ஸ் நிறுவன இயக்குனர் சந்திரசேகர், எஸ்.பி. வேலுமணிக்கு 20 ஆண்டுகள் பழக்கமானவர்.
கே.சி.பி. இன்ஜினியர்ஸ் நிறுவனத்திற்கு அதிக அளவில் டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழ்நாடு அரசு வியாபார விதி மற்றும் தலைமைச் செயலக விதி 23-ஐ மீறியுள்ளார்.
அரசு பணத்தை மோசடி செய்து அரசுக்கு நஷ்டம் விளைவித்ததால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கே.சி.பி இன்ஜினியர்ஸ் நிர்வாக இயக்குனர்கள் சந்திர பிரகாஷ், சந்திரசேகர், வடவள்ளியைச் சேர்ந்த சீனிவாசன், சித்தார்த்தன், கோவையைச் சேர்ந்த ராஜன் உள்ளிட்ட 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்