சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதற்கு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 2011 – 2016 அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம் . இந்த காலகட்டத்தில் பெருங்களத்தூர் பகுதியில் ஸ்ரீராம் குழுமம் வீடுகள் கட்ட அனுமதி வழங்குவதற்காக வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு ஆகியோர் ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கடந்த 2022-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், “கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி 24 குடியிருப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளைக் கட்டுவதற்கு ஸ்ரீராம் குழுமம் சிஎம்டிஏ-விடம் கட்டிட திட்ட ஒப்புதலுக்கு விண்ணப்பித்திருந்தது. கட்டிடம் கட்ட 2016 டிசம்பர் 24-ஆம் தேதி சிஎம்டிஏ அனுமதி அளித்தது.
இதற்காக 2015-16-ம் ஆண்டில் ஸ்ரீராம் குழுமங்களின் ஒரு பகுதியாக உள்ள பாரத் நிலக்கரி கெமிக்கல் லிமிடெட் 27.9 கோடி ரூபாய் தொகையை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மகன் பிரபுவுக்குச் சொந்தமான முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவாதமில்லாத கடனாக அளித்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு, ஸ்ரீராம் குழும இயக்குனர் ரமேஷ் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமிதாப் பச்சன் Vs ரஜினி: தெறிக்கும் தோட்டா… மிரட்டும் ‘வேட்டையன்’ டிரைலர்!
டாப் 10 நியூஸ்: மோடி அமெரிக்க பயணம் முதல் இலங்கை அதிபர் தேர்தல் வரை!