Durai dayanidhi taken to us for treatment?
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை அமெரிக்கா அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் ஆலோசித்து வருகிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரியின் மகனான துரை தயாநிதி டிசம்பர் 6 ஆம் தேதி தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார்.
அன்றிரவு நண்பரின் வீட்டிலேயே தங்கிய அவரை விடிந்து நண்பர்கள் எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் துரை தயாநிதி எழுந்திருக்கவில்லை. துரையின் மனைவிக்கு போன் செய்து தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
அருகில்தான் வீடு என்பதால் அவரது மனைவியும் அங்கு சென்று தனது கணவரை எழுப்பியபோது மயக்கத்திலிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனது கணவரின் சித்தப்பாவான முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொடர்புகொண்டு துரை தயாநிதி பற்றிய தகவலைச் சொல்லியிருக்கிறார்.
உடனடியாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் துரை தயாநிதி. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ‘துரை தயாநிதிக்கு அதிகாலை 3 மணியளவில் மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் கசிவு ஏற்பட்டிருக்கிறது. அவரை 6 மணி நேரத்துக்குள் அழைத்து வந்திருந்தால் ஊசி மூலமே சரி செய்திருக்கலாம். இப்போது அறுவைசிகிச்சை செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், மருத்துவர்களிடம் துரையின் உடல்நிலை குறித்து விசாரித்தார். தொடர்ந்து மருத்துவர்களிடம் போன் மூலம் விசாரித்தும் வருகிறார்.
துரை தயாநிதிக்கு மேஜர் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதனால் உடலின் மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளில் ஏற்படும் தாக்கத்தை நுட்பமாகக் கவனிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
ஆபரேஷனுக்கு பிறகான அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு சப்போர்ட் ஆக வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பிலிருந்து வருகிறார் துரை தயாநிதி.
இதுகுறித்து மின்னம்பலத்தில் டிசம்பர் 10ஆம் தேதி வெளியிட்ட டிஜிட்டல் திண்ணை செய்தியில், “அப்பல்லோவில் குவிந்த கலைஞர் குடும்பம்! ஆபரேஷன்… வெண்டிலேட்டர்… துரை தயாநிதியின் ஹெல்த் கண்டிஷன்!” என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள மு.க.அழகிரியின் மகள், “தம்பியை அழைத்துக்கொண்டு அமெரிக்கா வாருங்கள். இங்கு வைத்து சிகிச்சை அளித்துக் கொள்ளலாம்” என்று அழகிரியிடம் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ஆலோசித்து வரும் மு.க.அழகிரி குடும்பத்தினர், அப்பல்லோ மருத்துவர்களிடமும் பேசியிருக்கிறார்கள்.
இதற்கு அப்பல்லோ மருத்துவர்கள் தரப்பில், ‘இங்கு பலதுறை சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உலகத் தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கிறோம். நீங்கள் விருப்பப்பட்டால் அமெரிக்கா அழைத்துச் செல்லலாம்” என்று கூறியுள்ளனர்.
தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் துரை தயாநிதி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பெயரை மாற்றிய பீலா ராஜேஷ்: என்ன காரணம்?
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா… பேசாம அவர எடுத்துருக்கலாம்!
Durai dayanidhi taken to us for treatment?
Comments are closed.