டிஜிட்டல் திண்ணை: வருத்தம், வைராக்கியம்… துரைமுருகன்- ஸ்டாலின் முற்றுகிறது மோதல்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் ஜூலை 10 ஆம் தேதி இரவு சென்னை மெரினாவில் கலைஞருக்கான பேனா நினைவு சின்ன ஆய்வுப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்ட வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“ஜூலை 10 இரவு 8.30 மணிக்கு மேல் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் கலைஞருக்கு எழுப்பப்பட்டு வரும் பேனா நினைவுச் சின்னப் பணிகளை பார்வையிடச் சென்றார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு முதலமைச்சர் வருவதற்கு முன்பே அங்கே இருந்தார். ஸ்டாலினை அவர்தான் வரவேற்றார்.

ஸ்டாலினோடு முரசொலி செல்வமும், கலாநிதிமாறனும் வந்திருந்தார்கள். அவ்வளவாக ஸ்டாலினுடன் வெளியே வராத கலாநிதிமாறன் தனது தாத்தாவின் நினைவாக கட்டப்பட்டு வரும் பேனா நினைவுச் சின்னப் பணிகளை பார்ப்பதற்காக ஆர்வமாய் வந்திருக்கிறார்.

முதல்வர் மெரினா போகிறார் என்ற தகவல் அறிந்து மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் அங்கே வந்துவிட்டனர். அமைச்சர் சேகர்பாபுவும் விரைந்து வந்துவிட்டார். மறுநாள் (ஜூலை 11) அழகுமுத்துக்கோன் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக எழும்பூர் சென்றிருந்த அமைச்சர் பெரியகருப்பன் தகவல் கிடைத்ததும் அவரும் மெரினா வந்துவிட்டார்.

ஸ்டாலினிடம் பேனா நினைவுச் சின்னத்தின் தற்போதைய கட்டுமானப் பணிகள் பற்றி விளக்கினார் அமைச்சர் எ.வ.வேலு. சில சந்தேகங்களை ஸ்டாலின் கேட்க, அதற்கான பதில்களையும் சொன்னார் வேலு. அப்போது சுற்றியிருந்த அமைச்சர்கள் மத்தியில், ‘எங்கே பொதுச் செயலாளர் வரலையா?’ என்று பேச்சு எழுந்திருக்கிறது. ‘தலைவரோட கார்லதான் வருவாரு… காணலையே?’ என்றும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

ஜூலை 10 ஆம் தேதி வேலூரில் சிப்பாய் கலக நினைவு தினத்தை ஒட்டி போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் துரைமுருகன் மாலை சென்னை திரும்பிவிட்டார். ஆனபோதும் மெரினாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்லும் தகவல் கிடைத்த நிலையிலும் அவர் வரவில்லை.

duraimurugan stalin conflict dmk party clash

இதுகுறித்து திமுகவின் வேலூர் வட்டாரங்களில் விசாரித்தபோது, ’அமைச்சர் துரைமுருகன் சமீப நாட்களாக முதல்வர் ஸ்டாலின் மீது கடுமையான வருத்தத்தில் இருக்கிறார். அவ்வப்போது இவ்விருவருக்கும் வருத்தங்கள் வருவதும் பின் மறைவதும் தொடர்ந்து நடப்பதுதான். ஆனால் இம்முறை துரைமுருகன் அதிகமாகவே ஃபீல் பண்ணி வருகிறார்.

துரைமுருகனிடம் இருக்கும் கனிமவளத்துறையை அவரிடம் இருந்து பறிக்கும் தீர்மானத்தோடு இருக்கிறார் முதலமைச்சர். பிடிஆர் இலாகா மாறியபோது நடந்த அமைச்சரவை மாற்றத்தில் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத்துறையை பறித்து நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட தங்கம் தென்னரசுவிடம் கொடுக்க முடிவு செய்தார் ஸ்டாலின்.

இதுகுறித்து அவர் துரைமுருகனிடமே பேசியபோது, ‘இப்போது என்னிடமிருந்து துறையை பறித்தால் பிடிஆர் போல நானும் ஏதோ தவறு செய்ததால் என் துறையை மாற்றுகிறீர்கள் என்ற தோற்றமே ஏற்படும்’ என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார் துரைமுருகன். அதனால் அப்போது முதலமைச்சர் அப்படியே விட்டுவிட்டார்.

ஆனால் அப்போதில் இருந்தே துரைமுருகன் கனிமவளத்துறை ரீதியாக தனக்கு தொடர்ந்து இடையூறுகள் இருப்பதாக உணர்கிறார். அத்துறையின் செயலாளராக இருந்த ஜெயகாந்தன் அமைச்சர் துரைமுருகனோடு சுமுகமான முறையில் செயல்படுகிறார் என்பதற்காகவே அவர் மாற்றப்பட்டு நிர்மல் ராஜ் கனிமவளத்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.

துரைமுருகனின் துறையில் நடந்த மாற்றம் அவருக்கே தெரியப்படுத்தப்படவில்லை. அதுமட்டுமல்ல… புதிய செயலாளராக வந்த அதிகாரி துரைமுருகனை சென்று மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்கே இரண்டு நாட்கள் ஆகியிருக்கின்றன. இதெல்லாம் தனக்கு மரியாதை குறைவாக இருப்பதாகக் கருதுகிறார் துரைமுருகன்.

வேலூரில் தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிக் கொண்டிருந்த துரைமுருகன், ‘கலைஞர் எனக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தாரு தெரியுமா? துரை துரைன்னு என்னை அப்படி நடத்துவாரு. ஆனா இப்ப என் துறையில என்ன நடக்குதுன்னே எனக்கு தெரியமாட்டேங்குது. மந்திரி பதவியெல்லாம் வேணாம்னு சொல்லிட்டு பொதுச் செயலாளரா அறிவாலயத்துலயே இருக்கலாம் கூட தோணுது’ என்றெல்லாம் ஆதங்கத்திலும் வேதனையிலும் கூறியிருக்கிறார்.

இந்த கோபத்திலும் வேதனையில் இருந்த நிலையில்தான்… ஸ்டாலினை அவசியம் ஏற்படும் சூழல் தவிர மற்ற வகைகளில் சந்திக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார் துரைமுருகன். அதனால்தான் ஜூலை 10 இரவு மெரினாவுக்கு முதலமைச்சர் செல்லும்போது கூட அவருடன் செல்லவில்லை’ என்கிறார்கள்.

அறிவாலயத் தரப்பில் விசாரித்தபோது… தலைவருக்கும் பொதுச் செயலாளருக்கும் இருவர் மீதும் இருவருக்கும் வருத்தங்கள், கோபங்கள் இருப்பது உண்மைதான். அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதும் உண்மைதான். ஆனால் இருவருக்கும் இடையில் சிலர் சமரசம் பேசிவருகிறார்கள்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

மாவீரன் படத்தில் விஜய்சேதுபதி குரல்!

மன்னிப்பு கேட்டால் மீண்டும் சேரலாம்! எடப்பாடியின் ’கெத்து’ அறிவிப்பு!

+1
1
+1
3
+1
0
+1
6
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *