ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று (நவம்பர் 18) நடைபெற்று வருகிறது.
இதில் முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது அனைத்துக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏன் சிறப்பு கூட்டம்?
அப்போது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ”ஏற்கெனவே நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே கூட்டவேண்டும்? வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்தால் சிறப்பு கூட்டம் கூட்டுவதற்கு அவசியம் இல்லாமல் போய்விடுமே என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் துரைமுருகன், “தற்போது சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டவில்லையென்றால், ஆளுநர் தரப்பில், ‘என்னிடம் மசோதாக்கள் எதுவும் நிலுவையில் இல்லை’ என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்பார்கள்.
அதற்கு இடம் அளிக்க கூடாது என்பதற்காகவும், சட்டமன்ற மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த சிறப்பு சட்டப்பேரவை கூட்டப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
அப்போது எதிர்ப்பு… இப்போது ஆதரவா?
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “1994ஆம் ஆண்டு ஜெயலலிதா இருந்தபோது, வேந்தராக ஆகும் அல்லது வேந்தரை முதலமைச்சர் தான் நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதனை அப்போதிருந்த அமைச்சர் அன்பழகன், கடந்த கால அரசு முதலமைச்சரே எல்லா பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் என்று சட்ட முன்வடிவு கொண்டுவந்தார்கள். அந்த நோக்கம் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள கூடிய சட்டமல்ல. இதனால் பல்கலைக்கழகத்தின் தனியுரிமை பறிக்கப்படுவதாக உள்ளது. ஆகவே இந்த அரசு பல்கலைக்கழகங்கள் தனித்து சுயமாக செயல்படுகிற வாய்ப்பை கெடுக்கக்கூடாது என்பதற்காகவே, அந்த சட்டத்தை பின்வாங்குவதாக அறிவிக்கப்படுகிறது. அப்போது இதே மசோதாவை எதிர்த்த திமுக.. இப்போது ஆதரிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
கடைந்தெடுத்த சர்வாதிகாரத்தனம்!
அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ”அப்போது துணைவேந்தர் நியமனத்தில் 3 பேர் அடங்கிய குழு அமைத்து, அவர்கள் பரிந்துரைக்கும் நபர்களை முதலமைச்சருடன் கலந்து பேசி, அதனடிப்படையில் தேர்வு செய்யப்படும் ஒருவரை ஆளுநர் நியமிப்பார். இதுதான் அப்போது இருந்த நடைமுறை.
ஆனால் இன்றைய சூழ்நிலையில், சிண்டிகேட், செனட் இருவரும் சேர்ந்து தீர்மானம் போட்டாலும், ஆளுநர் அதற்கு சம்மதம் தெரிவிப்பதில்லை.
சமீபத்தில் மறைந்த மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு நான் டாக்டர் பட்டம் கொடுக்க மாட்டேன் என்று ஆளுநர் கூறுவதெல்லாம் கடைந்தெடுத்த சர்வாதிகாரத்தனம்” என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வேந்தர் நியமன தீர்மானம்: பாஜக எம்.எல்.ஏ எதிர்ப்பு… முதல்வர் பதில்!
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியது இவர் தான்!