திமுக பொதுக்குழுவில் ஏற்புரை ஆற்றிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு ஒரு ஜோடி புதிய montblanc பேனாக்களை அன்பளிப்பாக வழங்கினார்.
திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை அமைந்தகரையில் இன்று (அக்டோபர் 9) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், “கலைஞரோடு 53 ஆண்டுகள் உடன் பயணித்திருக்கிறேன். என்னை ஒரு பிள்ளையாகவே கலைஞர் வளர்த்தார்.
அப்பா எங்களோடு இருந்து பேசியதை விட உங்களோடு தான் அதிக நேரங்களை செலவிட்டிருக்கிறார் என்று தளபதி என்னிடம் அடிக்கடி கூறுவார்.

அண்ணா மறைவிற்கு பிறகு இந்திய துணைக் கண்டத்தை ஆட்டிப்படைக்கக்கூடிய முதல்வராக கலைஞர் திகழ்ந்தார். அவர் நினைத்தவர்கள் தான் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் வர முடிந்தது.
கலைஞர் கூட முதல்வரான பிறகு டெல்லிக்கு போய் அவரது அறிவாற்றலை காட்டிய பிறகு தான் இந்திய அளவில் பிரபலமானார்.
ஆனால் தளபதி ஸ்டாலின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்கு போகாமலே இந்தியா முழுவதும் பிரபலமானார்” என்று தெரிவித்தார்.

துரைமுருகன் தன்னுடைய உரையை முடித்தவுடன், “ஸ்டாலின் போடுகின்ற திட்டங்கள் நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் அவர் கையெழுத்திட ஒரு ஜோடி montblanc பேனாவை அவருக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன்.
இதில் தான் அவர் கையெழுத்திட்டு வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை வெளியிட வேண்டும். மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய montblanc பேனாவை முதல்வருக்கு வழங்குகிறேன்.” என்றார்.
ஸ்டாலின் சட்டைப் பையில் வைத்திருந்த பேனாவை கீழே போட்டுவிட்டு, புதிய பேனாவை அவரது பையில் வைத்தார் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
செல்வம்
அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்துப் பார்க்கிறேன்: கனிமொழி
ஸ்டாலினை பார்த்து கலைஞரும் பேராசிரியரும் சொன்னது இதுதான் : எ.வ.வேலு