கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் நேற்று பெங்களூரில் நீர்வளத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியபோது, “கர்நாடகா அரசின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி பெற முயற்சிக்க வேண்டும்.
கர்நாடகா மாநிலத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மேகதாது மற்றும் மகதாயி அணை திட்டங்களை விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேகதாது திட்டத்திற்கு அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கியது. அதை நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தாதது ஏன்?
மேகதாது அணை திட்டத்தை விரைவில் செயல்படுத்த டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம்” என்று பேசியிருந்தார்.
கர்நாடகா அரசின் மேகதாது அணை கட்டும் முடிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் இன்று (மே 31) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெரும் போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றிருக்கிற டிகே சிவக்குமார் மக்களின் வாழ்த்துக்களை பெறுவதில் பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பதால், கொஞ்சம் நிதானித்து நேரில் வந்து வாழ்த்து கூறலாம் என்று நினைத்திருந்தேன்.
இருப்பினும் இந்த அறிக்கையின் வாயிலாக முதற்கண் என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
சிவக்குமார் அவர்கள் பதவிப் பிரமாணம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கிற காரியத்தை செய்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது, பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்கு சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன்.
காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி, நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை. மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும்.
தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்பிடிப்புப் பகுதியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும். விரைவில் தங்களை நேரில் சந்திக்கின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கும். அப்போது இந்த பிரச்சினையை பற்றி விரிவாக பேசலாம் என்று கருதுகிறேன். சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
செல்வம்
“ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறார்” – அமைச்சர் பொன்முடி மீண்டும் குற்றச்சாட்டு!