முதல்வர் என்னதான் அதட்டி வைத்தாலும் அறிவுரை சொன்னாலும் அவரது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டேதான் இருக்கின்றன.
கடந்த அதிமுக ஆட்சியிலாவது செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி போன்ற அமைச்சர்கள் காமெடி செய்கிறார்கள் என்ற விமர்சனத்தோடு மக்களால் ரசிக்கப்பட்டார்கள்.
ஆனால் இப்போது திமுக அமைச்சர்கள் சீரியசாக சொல்லும், செய்யும் விஷயங்களால் மக்கள் மனதில் அதிருப்தியும் கோபமும் ஏற்பட்டிருக்கிறது.
லேட்டஸ்டாக மூத்த அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
துரைமுருகனின் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட பொன்னை கிராமத்தில் கடந்த 4ம் தேதி அவர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் துணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆய்வு செய்யச் சென்றனர்.
அப்போது இங்கே மருந்துப் பற்றாக்குறை இருப்பதாக சொல்ல, அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்குள்ள டாக்டரை அழைத்து, ‘போய் பாம்புக் கடி மருந்து எடுத்துட்டு வாங்க’ என்று சொன்னார்.
அப்போது பாம்புக்கடி மருந்து ஸ்டாக் இல்லை சார் என்று டாக்டர் சொல்ல, ‘எந்தூரும்மா நீ… பொன்னைதானே…. உள்ளூர்லயே வேலை பாக்குறீங்களா? தூக்கியடிங்க தூக்கியடிங்க கன்னியாகுமரிக்கு தூக்கியடி’ என்று ஆக்ரோஷமாக கூறினார் அமைச்சர் துரைமுருகன்.
அதன்படியே அங்கே வேலை பார்க்கும் மருத்துவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
பின்பு ஊடகங்களிடம் துரைமுருகனும், மா.சுப்பிரமணியனும் பேசினார்கள். அப்போது தன் சொந்தத் தொகுதியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் குறித்து அடுக்கடுக்கான புகார்களை ஏதோ எதிர்க்கட்சிக்காரர் போல அடுக்கினார் துரைமுருகன்.
இந்த நிலையில் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ஆகிய அமைச்சர்கள் ஆய்வு நடத்திய வீடியோ காட்சி சமூக தளங்களில் வைரலானது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கும், தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்டோருக்கும் அச்சங்கத்தின் நிர்வாகிகள் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்கள்.
“வேலூர் சுகாதார மாவட்டம் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் நடத்திய ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலரையும் மருத்துவ அலுவலரையும் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டிருப்பதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தனது வருத்தத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்கிறது.
எந்தவித விசாரணை இன்றி கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பதாலும், பாம்புக்கடி மருந்து ( Anti Snake Venom) இல்லாததாலும், எக்ஸ்ரே மெஷின் உரிய கட்டிடத்தில் நிறுவப்படாதலாலும், மருத்துவர்களை இடமாற்றம் செய்திருப்பது ஒரு தவறான நடவடிக்கை ஆகும்.
அண்மை காலமாக சுகாதாரத்துறையில் நடந்து வரும் நிர்வாக குளறுபடிகள், எந்தவித வரைமுறையுமின்றி துக்ளக் தர்பார் போல நடைபெற்று வருகிறது.
இடமாற்ற சம்பவத்தில் முக்கிய உண்மைகளை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாகும். அங்கு 5 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
இரண்டு மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது இருப்பினும் மூன்று மருத்துவர்கள் மட்டுமே வைத்து அங்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் 50 வருடங்களுக்கு மேலான கட்டிடங்கள் ஆகும். அந்தக் கட்டிடங்களை புனரமைப்பதற்காகவும் புது கட்டிடங்கள் வேண்டியும் பலமுறை வட்டார மருத்துவ அலுவலரால் துணை இயக்குனருக்கும் பொதுப்பணி துறைக்கும் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது.
தற்பொழுது கூட அங்கு பொதுப்பணித்துறை மூலமாக புனரமைப்பு பணி நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பதற்காக மருத்துவ அலுவலர்களை இடமாற்றம் செய்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
எக்ஸ்ரே உபகரணம் உபயோகத்தில் இல்லை என்று குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எக்ஸ்ரே உபகரணம் இருந்தாலும் அதனை நிறுவுவதற்கு ஏதுவான கட்டிடம் இல்லாததால் தான் அதனை உபயோகத்திற்கு கொண்டு வர முடியவில்லை.
மேலும் எக்ஸ்ரே உபகரணம் நிறுவுவதற்கு முறையான கட்டிடம் வேண்டி வட்டார மருத்துவ அலுவலரால் துணை இயக்குனருக்கும் பொதுப்பணித் துறைக்கும் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.
பாம்புக்கடி (ANTI SNAKE VENOM )மருந்து இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. தற்பொழுது TNMSC யில் ANTI SNAKE VENOM இருப்பு இல்லை என்பதே உண்மை. Anti snake venom மருந்து செலுத்துவதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உகந்த இடம் இல்லை என்பது தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தின் கருத்து.
ஏனெனில் அம்மருந்து மூலம் ஏற்படும் பக்க விளைவுகளை சமாளிப்பதற்கு போதிய வசதிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இல்லை. மிக ஆபத்தான ஒரு மணி நேரத்திற்குள் Anti snake venom செலுத்தப்பட வேண்டிய Neurotoxic வகைகளுக்கு மட்டும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்கப்படலாம்.
Haemotoxic எனும் ரத்தத்தை உறையவிடாமல் செய்யும் விஷக்கடிக்கு ஆறு மணி நேரத்திற்குள் Anti snake venom செலுத்தினால் போதுமானது. அவ்வாறான விஷக்கடிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கோ, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கோ பரிந்துரைப்பதே சரியான முறையாகும்.
பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் இருக்கும் மருத்துவர் மற்றும் ஊழியர்களுக்கு சமூக விரோதிகளால் தொடர்ச்சியாக தொந்தரவு இருந்து வருகிறது. இதற்காக மருத்துவ அலுவலரால் காவல்துறையில் பாதுகாப்பு வேண்டி புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திருக்கும் கிராமத்திலேயே தங்கி 24 மணி நேரமும் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்” என்ற அந்த கடிதத்தில் மேலும்,
“பாழடைந்த பழைய கட்டிடங்களை புதுப்பிப்பது யாருடைய கடமை? துறை உயர் அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம், அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகளின் (துரைமுருகன் இங்கே 50 வருடத்துக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினர் பொதுப்பணித்துறை அமைச்சர்) கடமை அல்லவா? 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒரு வட்டாரத்திற்கு ஒன்று என இயங்கி வருகிறது.
இந்நிலையில் ஒரே வட்டாரத்தில் இரண்டு மேம்படுத்தப்பட்ட (24 மணி நேர) ஆரம்ப சுகாதார நிலையங்கள் அந்தந்த பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளின் வற்புறுத்தலால் இயங்கி வருகின்றன. ஒரே வட்டாரத்தில் இரண்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பின் அவற்றில் ஆள் பற்றாக்குறை ஏற்படுவது இயற்கை. இது யாருடைய தவறு?.
பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அக்டோபர் 4 அன்று நடைபெற்ற நிகழ்வுகளை, முதல்வர் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று, அரசு மருத்துவ அலுவலர் மற்றும் ஊழியர்கள் அரசாங்கத்தின் ஒரு முக்கிய அங்கம் என்பதனையும், அவர்களை மூத்த அமைச்சர் கண்ணியம் குறைவாக நடத்துவது மொத்த அரசு பணியாளர்களையுமே demoralise செய்து ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தை பாதிக்கும் என்றும் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் முதல்வர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டு…. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களால் ஊடகத்தினருக்கு பகிரப்பட்டு வருகிறது.
–வேந்தன்
விக்ரம் சாதனையை வென்ற பொன்னியின் செல்வன்: கமல் மகிழ்ச்சி!
சிலைகளை ஆற்றில் கரைக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளம்.. 8 பேர் பலி!
Comments are closed.