திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் வேலூர் மாவட்டம் காட்பாடி வீட்டிலும், அவரது குடும்பத்தினர் நிர்வகிக்கும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் மேலும் இரு இடங்களிலும் நேற்று ஜனவரி 3 காலை அமலாக்க துறை என்ட்ரி ஆனது.
துரைமுருகன் வீட்டில் யாரும் இல்லாததால் அங்கே நிர்வாக நடைமுறைகளை பின்பற்றி விட்டு சோதனைகளை தொடங்குவதற்கு நேற்று பிற்பகல் 2:30 மணி ஆகிவிட்டது. இதுகுறித்து நேற்று இரவு மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் விரிவாக பதிவு செய்திருந்தோம்.
கதிர் ஆனந்தால் அமலாக்கத் துறையிடம் தெரிவிக்கப்பட்ட மூன்று நபர்களின் முன்னிலையில் துரைமுருகன் வீட்டில் சோதனை நடந்தது. இரண்டு அறைகளில் இருக்கும் பூட்டுகளுக்கு சாவி இல்லாததால், துரைமுருகனின் வீட்டில் வேலை செய்யும் பெரியவரை கடப்பாரை எடுத்துவர சொன்னார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். அவரும் எடுத்து வந்தார். அதன் பிறகு பூட்டை மட்டும் உடைக்கும் முடிவுக்கு வந்து இரண்டு அறைகளிலும் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினார்கள்.
துரைமுருகன் வீட்டில் நேற்று இரவு 10 மணி வரை அமலாக்கத்துறை சோதனை நடந்தது. திமுக நிர்வாகியான வன்னியராஜாதான், இரவு 10 மணிக்கு மேல் துரைமுருகனின் சென்னை வீட்டுக்குத் தொடர்புகொண்டு, ‘ரெய்டு முடிஞ்சிடுச்சு… ஆனால் அவங்க இன்னும் கெளம்பல…யார் யார் கூடயோ பேசிக்கிட்டிருக்காங்க’ என்று தகவல் கொடுத்துள்ளார். பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஃபார்மாலிடீஸ் முடித்துக் கொண்டு இரவு 1. 35 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டனர். இந்தத் தகவலும் துரைமுருகனுக்கு தெரிவிக்கப்பட்டது. அதேபோல துபாயில் இருக்கும் கதிர் ஆனந்துக்கும் இது குறித்த தகவல்கள் அனுப்பப்பட்டன.
பொதுவாகவே துரைமுருகன் மதிய நேரம் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் தூங்குவார். அதனால் இரவு அவர் தூங்க சற்று நேரம் ஆகும். ஆனால் நேற்று தனது வீட்டுக்குள் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால், மதியமும் அவர் தூங்கவில்லை. இரவும் அவர் தூங்க தாமதமானது என்கிறார்கள் அவ்வப்போது சென்னையைத் தொடர்புகொண்ட காட்பாடி திமுக நிர்வாகிகள்.
துரைமுருகன் வீட்டில் இரவு ரெய்டு முடிந்து விட்டாலும் இன்னொரு டீம் கிங்ஸ்டன் கல்லூரியில் நேற்று இரவு விடிய விடிய சோதனை நடத்தி வருகிறது. இன்று காலையும் அங்கே சோதனை தொடர்கிறது என்கிறார்கள் வேலூர் பத்திரிக்கையாளர்கள்.
–வேந்தன்
இளைஞர்களுக்கு எந்தமாதிரி ஊக்கம் தேவை?
டாப் 10 நியூஸ் : தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு முதல் டெல்லி விவசாயிகள் போராட்டம் வரை!