ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைச்சர் வேலுவின் கலைஞர் என்னும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், “திமுகவில் அசாத்தியமான சீனியர்களை சாதுரியமாக ஸ்டாலின் கையாண்டு வருகிறார்” என்று பாராட்டிப் பேசினார்.
அதில் குறிப்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரை குறிப்பிட்ட ரஜினிகாந்த் அவர் கலைஞர் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டியவர் என்றும் கூறினார். கலைஞர் பற்றி மிக உருக்கமாக தனது அனுபவங்களையும் பேசினார் ரஜினி,.
இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி இதுகுறித்து வேலூரில் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது ரஜினிகாந்தை மிகக் கடுமையாக விமர்சித்து பதில் அளித்தார்.
“மூத்த வயதான நடிகர்கள் பல் விழுந்து தாடி நரைத்த பின்னரும் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்று சினிமாவில் ரஜினி ஒரு பழைய ஸ்டூடன்ட் என்ற அர்த்தத்தில் பேசினார் துரைமுருகன்.
அமெரிக்கா புறப்படுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வேலூரில் ரஜினியை கண்டித்து துரைமுருகன் கொடுத்த இந்த பேட்டியை பார்த்து கடுமையான கோபமடைந்து விட்டார்.
இன்று மாலை எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு போன் செய்து, “என்ன துரைமுருகன் இப்படி பண்ணிட்டாரு? கடந்த வாரம் கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் வந்து பேசியது எவ்வளவு நிறைவாக இருந்துச்சோ…. அதைவிட நேத்திக்கு ரஜினிகாந்த் தலைவர் கலைஞரைப் பற்றி பேசி நம்மை ஹானர் பண்ணிருக்காரு.
ஆனா துரைமுருகன் நம்ம விழாவுக்கு கெஸ்ட்டா வந்தவரை இவ்வளவு அவமரியாதையா பேசி இருக்காரு. அவர் என்ன நினைச்சுட்டு இருக்காருன்னு கேளுங்க? மந்திரி பதவியில் இருக்கணுமா வேணாமா கேளுங்க?” என்று கடுமையான கோபத்தை கொட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதையடுத்து ஜெகத்ரட்சகன் உடனடியாக துரைமுருகனுக்கு போன் செய்து விஷயத்தைக் கூறியுள்ளார்.
கோபம் தாளாத ஸ்டாலின், தானே துரைமுருகனிடம் போன் செய்து பேசியிருக்கிறார். அப்போது துரைமுருகன் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தனது தரப்பு விளக்கத்தையும் வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறார்.
‘நீங்க உடனே ரஜினி கிட்ட போன் பண்ணி பேசுங்க’ என்று ஸ்டாலின் சொல்ல… ரஜினிக்கு போன் செய்து பேசியிருக்கிறார் துரைமுருகன்.
’இன்னிக்கு வேலூரில் செய்தியாளர்கள் கேட்டதற்கு ஏதோ உணர்ச்சிவசப்பட்டு அப்படி பேசிட்டேன். மனசுல வச்சுக்காதீங்க’ என்று துரைமுருகன் ரஜினியிடம் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து ரஜினி முதலமைச்சரிடமும் பேசியிருக்கிறார்.
மீண்டும் தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் துரைமுருகனைப் பற்றி வருத்தப்பட்டிருக்கிறார் ஸ்டாலின்.
‘நம்மை மதிச்சு வந்து மரியாதை செஞ்சவரை இப்படி செய்யலாமா? நிம்மதியா அமெரிக்கா போகலாம்னு நினைச்சா இப்படி பண்ணிட்டாரே’ என்று முதல்வர் தொடர்ந்து வருத்தப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் திமுக தலைமையில் நடப்பதை அறிந்தவர்கள்.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அந்த ஊருக்கு ஏன் போகல? – அப்டேட் குமாரு
“முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி” – அமைச்சர் சேகர்பாபு