தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் உடல்நலக்குறைவால் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 24 ஆம் தேதி கலைஞர் மு.கருணாநிதி வரலாறு, திராவிடமும் சமூக மாற்றமும் ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்துகொண்டு முதல் பிரதியினை பெற்றுக்கொண்ட அமைச்சர் துரைமுருகனுக்கு அன்றிரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 நாள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
அதன்பிறகு சட்டமன்றம் கூடிய முதல்நாளில் மட்டும் துரைமுருகன் கலந்து கொண்டார். எப்போதுமே சட்டமன்றத்தில் கலகலப்பாக காணப்படும் அவர் சோர்வாகவே காணப்பட்டார். அதன்பிறகும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து 2 நாள் சிகிச்சைக்கு பிறகு துரைமுருகன் வீடு திரும்பினார்.
இந்தநிலையில் மீண்டும் துரைமுருகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
84 வயதான துரைமுருகன் கடந்த இரண்டு வாரங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 3 ஆவது முறையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கலை.ரா
எது இருந்தால் சிறப்பு… தன்னம்பிக்கையா? தெளிவா?
அரசியல் தலைவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இளம்பெண்கள் சப்ளை: பாலியல் தொழில் மன்னன் கைது!