தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், திமுக பொதுச் செயலாளாரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்தார்.
அமைச்சர் துரைமுருகனின் சிங்கப்பூர் பயணம் பற்றிய பின்னணித் தகவல்களை செப்டம்பர் 1 ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணை பகுதியில், ‘அமெரிக்காவில் முதல்வர்… துரைமுருகன் திடீர் சிங்கப்பூர் பயணம்’ என்ற தலைப்பில் விரிவாக வெளியிட்டிருந்தோம்.
துரைமுருகன் தனது உடல் நலம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளுக்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறார் என்று அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
செட்பம்பர் 1 ஆம் தேதி சிங்கப்பூருக்கு சென்ற அமைச்சர் துரைமுருகன், தனக்கு நெருக்கமான இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயராமனை சந்தித்தார். அவரின் அழைப்பின் பேரில்தான் சிங்கப்பூர் சென்றார் துரைமுருகன்.
இதுபற்றி துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, “திமுகவின் பொதுச் செயலாளராக ஏற்கனவே பதவி வகித்த மறைந்த பேராசிரியர் அன்பழகன், பொதுவாகவே ஆங்கில மருத்துவத்தை விட, தமிழ் பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர். தனது உடல் நலத்துக்கு நாட்டு மருந்துகளையே அவர் பயன்படுத்தியும் வந்தார்.
அவர் கலைஞரிடமும், துரைமுருகனிடமும் கூட நாட்டு மருந்துகளின் நல்ல அம்சங்கள் பற்றி அவ்வப்போது சொல்லுவார்.
ஆனால், துரைமுருகன் ஆங்கில மருத்துவத்தைதான் முழுதாக நம்புபவர். உடம்பில் சிறு மாற்றத்தை உணர்ந்தாலும் உடனடியாக அது தொடர்பான ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை சந்தித்து விடுவார் துரைமுருகன்.
கலைஞர் இருக்கும்போது தனக்கு நடந்த இதய அறுவை சிகிச்சை பற்றியும், அப்போது கலைஞர் எப்படியெல்லாம் உணர்வு பூர்வமாக நடந்துகொண்டார் என்பது பற்றியும் பல்வேறு சந்தர்ப்பங்களில் விளக்கியிருக்கிறார் துரைமுருகன்.
தனக்கு இதய அறுவை சிகிச்சை நடந்ததில் இருந்து மேலும் கவனமாக இருந்து வருகிறார் துரைமுருகன். சென்னையில் அடிக்கடி அப்பல்லோ, ரேலா மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்துகொள்வார்.
இந்நிலையில்தான் சிங்கப்பூரில் இருக்கும் துரைமுருகனுக்கு நெருக்கமான இதய நிபுணர் டாக்டர் ஜெயராமன், ‘வருடத்துக்கு ஒரு முறை சிங்கப்பூர் வந்து முழுமையாக செக்கப் செய்துகொள்ளுங்க’ என்று அறிவுறுத்தியதையடுத்து, சிங்கப்பூர் சென்றார் துரைமுருகன்.
அங்கே சிங்கப்பூர் அரசின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் சண்முகத்தை சந்தித்து உரையாடினார் அமைச்சர் துரைமுருகன்.
இதையடுத்து டாக்டர் ஜெயராமனை சந்தித்து மருத்துவ பரிசோதனை செய்துகொண்டார். அதில் இதயம் மிகவும் சீரான நிலையில் இருப்பதாக சொன்ன டாக்டர் ஜெயராமன், மருத்துவ ரீதியான சில அறிவுரைகளையும் துரைமுருகனுக்கு கூறியிருக்கிறார். இதையடுத்து உற்சாகமாக சென்னைக்கு புறப்படத் தயாரானார் துரைமுருகன்” என்கிறார்கள்.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…