தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு விருப்பம் கிடையாது என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் பெரியாரின் சிலைக்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் கழக குமார், டி சி ராஜேந்திரன்,பாபு,மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சிக்கந்தர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் முதன்மைச் செயலாளர் துரை வைகோ உறுதிமொழி வாசிக்க நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, “சனாதனம் மூலமாக மதவாதத்தையும் சாதியத்தையும் திணித்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறார்கள். இதனை எதிர்கொள்ள பெரியார் போன்ற தலைவர்கள் இப்போது அதிகம் தேவை.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள்.தேர்தல் அரசியலில் போட்டியிடுவதில் எனக்கு விருப்பம் கிடையாது. சட்டமன்ற தேர்தலின் போது கூட சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வந்தபோது நான் போட்டியிடவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் கட்சி நிர்வாகிகள்,கட்சித் தலைமை எடுக்கும் முடிவை பொறுத்து செயல்படுவேன்.
சித்தாந்தங்களையும்,வரலாற்றையும் தவறாக சொல்லி திசை திருப்பும் நோக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் செயல்படுகின்றனர்.
காவிரியில் தண்ணீர் இல்லை பற்றாக்குறை என்று மிகப்பெரிய பொய்யை கர்நாடகா அரசு சொல்லி வருகிறது. தமிழக முதல்வர் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.மத்திய பாஜக அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
லோகேஷ் படம் எப்படி சார் இருக்கும்? – ரஜினி சொன்ன நச் பதில்!
சரியும் மேட்டூர் அணை நீர் இருப்பு: கேள்விக்குறியில் சம்பா, தாளடி சாகுபடி!