மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளரும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ சில நாட்களுக்கு முன் கோவில்பட்டியில், ‘வயதானவர்கள் கட்சியில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும்’ என்ற ரீதியில் பேசியதற்கு எதிரொலியாக…
மதிமுகவின் காஞ்சி மாவட்டச் செயலாளர் வளையாபதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரைத் தொடர்ந்து காஞ்சி நகர செயலாளர், மாவட்டத்திலுள்ள ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து காஞ்சி மாவட்ட மதிமுக கூண்டோடு கலைக்கப்பட்டது.
இதுகுறித்து துரை வைகோ இன்று (அக்டோபர் 2) பதிலளித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில், கடந்த இரு நாட்களில் கட்சியினருக்கு செய்த உதவிகளை பட்டியலிட்டுள்ள அவர் தொடர்ந்து,
“கட்சியில் பொறுப்பில் இருந்தாலும், பொறுப்பில் இல்லாவிட்டாலும் இயக்கத் தோழர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன்.
இவற்றை எல்லாம் நான் வெளியில் சொல்வதும் இல்லை. இப்படி பதிவிடுவதும் இல்லை. சொல்ல வேண்டிய நிலை என்பதால் இதைப் பதிவிடுகிறேன்.
எந்த உழைப்பையும் கொடுக்காமல் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இல்லாமல் இடையூறு மட்டுமே செய்து கொண்டு இருப்பவர்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது. தாராளமாக வெளியே போகலாம் என்று கோவில்பட்டியில் பேசினேன்.
இது தவறு என்றால், இந்தத் தவறை ஆயிரம் முறை செய்வேன். என் பேச்சை திரித்து பத்திரிக்கைகளிலும், சமூக வலைதளங்களிலும் எழுதுவதற்கு காரணமாக இருந்து வரும் துரோகிக்கு, என் கழகப் பணிகளையே பதிலாகத் தருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
–வேந்தன்
காஞ்சி மதிமுக கூண்டோடு கலைப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய வீரர்கள் அறிவிப்பு!