பதினெட்டாவது நாடாளுமன்றம் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களோடு தனது முதல் கூட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.
கடந்த முறை போல் ஒரு தரப்பினருக்கு உரியதாக இல்லாமல் எதிர்க்கட்சியினரும் வலுவாக இருப்பது ஒரு புதுமை.
அதிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்நாட்டின் மலைக்கோட்டையில் இருந்து செங்கோட்டைக்கு சென்றிருக்கும் மதிமுக உறுப்பினர் துரை வைகோவின் செயல்பாடுகள் தொடக்கமே புதியதாக இருக்கின்றன.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் (ஜூன் 24, 25தேதிகளில்) பதவியேற்றுக் கொண்டார்கள்.
இவர்களில் கணிசமானோர் புதிய உறுப்பினர்கள். சிலர் மீண்டும் எம்.பி.க்களாக ஆகியிருக்கிறார்கள். இன்னும் சிலர் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று மூன்றாவது, நான்காவது,. ஐந்தாவது முறையாகக் கூட நாடாளுமன்றம் ஏறியிருக்கிறார்கள்.
ஆனபோதும் அவர்களில் பலர் செய்யாத ஒரு புதுமையை தமிழ்நாட்டில் இருந்து துரை வைகோ செய்திருக்கிறார்.
தேர்தலில் வெற்றி பெற்று முதன் முறையாக நாடாளுமன்றம்.. என்னப்பா புதுமை என்று கேட்கிறீர்களா?
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியேற்கும் விழாவிற்கு தன்னுடன் நான்கு பேரை பார்வையாளர்களாக உடன் அழைத்துச் செல்லலாம். அந்த நான்கு பேரும் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த உறுப்பினரின் குடும்ப உறுப்பினர்களாக இருக்கலாம், அந்த உறுப்பினர் ஜெயித்த கட்சியின் உறுப்பினர்களாக இருக்கலாம், அந்த உறுப்பினரின் பால்ய நண்பர்களாக இருக்கலாம், அந்த உறுப்பினரின் நன்றிக்கு உரிய யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
அன்று புதிதாய் பதவியேற்ற பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னுடைய குடும்பத்தினரையும், உறவினர்களையும் அழைத்து வந்தார்கள். சில உறுப்பினர்கள் கடந்த முறை பதவியேற்றபோதும் அழைத்து வந்த தம் மனைவி, மக்களை மீண்டும் இந்த முறையும் அழைத்து வந்தார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது தலைவர்களிடம் சென்று தங்கள் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி வைத்துக் கொண்டாடினார்கள். அந்த புதிய உறுப்பினரின் குடும்பத்தினரும் அந்த போட்டோவை தங்களது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்துக் கொண்டார்கள்.
இப்படியானவர்கள் நடுவில் துரை வைகோவும் நான்கு பேரை அழைத்துச் சென்றார். அவரது மனைவி, பிள்ளைகளையா?
இல்லை. இதற்கு துரை வைகோவே பதில் சொல்கிறார்.
“ஆனால், நான்.. தேர்தலில் என் வெற்றிக்காகப் பணியாற்றியவர்களில் ஒரு நான்கு பேரை அழைத்து வர வேண்டும் என எண்ணி, மதுரை சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், கழக துணைப் பொதுச்செயலாளர்கள் ஆடுதுறை இரா.முருகன், மருத்துவர் ரொஹையா, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோரை நாடாளுமன்றம் அழைந்து வந்தேன்.
என்னிடம் பலர் கேட்டார்கள். குடும்ப உறுப்பினர்களை அழைத்து வந்திருக்கலாமே..! அவர்கள் இந்தத் தருணத்தில் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்று சொன்னார்கள்.
நான் அவர்களிடம், ‘ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு நான்கு பேரைத்தான் உடன் அழைத்துவர அனுமதித்து இருக்கிறார்கள். ஒருவேளை இன்னும் சிலரை அழைத்துவர வாய்ப்பு தந்திருந்தாலும் என் வெற்றிக்காக உழைத்த ம.தி.மு.க தோழர்களைத்தான் இங்கே அழைத்து வந்திருப்பேன். என் குடும்ப உறுப்பினர்களை அல்ல’ என்றேன்.
கட்சியில் உண்மையாகவும், விசுவாசமாகவும் பணி ஆற்றுபவர்களுக்குத்தான் இனி முன்னுரிமை. அவர்களுக்குத் தான் எல்லா வாய்ப்புகளும் தரப்படும் என்பதை உணர்த்தும் விதமாகவும் தான் இவர்களை அழைத்து வந்தேன்.
நான் அரசியலுக்கு வரும்போதே ‘கட்சி தான் என் குடும்பம்’ என்ற உறுதியை எடுத்துக்கொண்டேன்” என்று தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் துரை வைகோ.
சரி…நாடாளுமன்றம் பார்த்துவிட்டீர்களா என்று கேட்ட பின் அந்த நால்வருக்கும் வேறு என்ன செய்தார் துரை வைகோ?
தான் பதவியேற்பதை பார்க்க டெல்லிக்கு சென்றிருந்த கழகத் தோழர்கள் நால்வருக்கும் ஒரு விடுதியில் இரவு விருந்தை ஏற்பாடு செய்து மகிழ்வுடன் அவர்களை வழியனுப்பி வைத்திருக்கிறார் துரை வைகோ.
மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளரான டாக்டர் ரொஹையா இதுகுறித்து தனது பதிவில்.
“பெரும்பாலான எம்பிகள் தங்களுடைய குடும்ப உறவுகளை வரவைத்து இருந்தார்கள்.
ஆனால் அண்ணன் துரைவைகோ திருச்சி தேர்தல் களத்தில் பணியாற்றிய தோழர்களுக்கு முன் உரிமை கொடுத்து இயக்கத் தோழர்களை உடன் அழைத்துசென்றது மற்ற எம்பிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
செல்வகணபதி எம்பி, அண்ணனிடம்… ’அரசியல் பொதுவாழ்க்கையில் மாறுபட்ட மனிதராக நீங்கள் இருக்கின்றீர்கள்’ என பாராட்டினார்கள். இன்னும் பல சிகரங்களை தொட ஒரு சகோதரியாக வாழ்த்துகிறேன் அண்ணா” என்கிறார்.
துரை வைகோவின் இந்த புதிய, ‘குடும்ப அரசியல்’ தொடரட்டும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
ராகவா லாரன்ஸ் இத்தனை படங்களில் கமிட் ஆகி உள்ளாரா?
கள்ளச்சாராய மரண வழக்கு : உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!