டிஜிட்டல் திண்ணை: என்னய்யா இவ்வளவு கூட்டம்? துரைமுருகனை டென்ஷன் ஆகிய தென் மாவட்ட  திமுக!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் அறிவாலய வாசலில் அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு கீழே 40, 50 பேர் நின்று எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

என்ன ஏது என்று சோர்ஸ்களிடம் விசாரித்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கின்றன. அதுவும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பூச்சாண்டி வேறு காட்டப்படும் நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கும் தயாராகவே இருக்குமாறு சமீபத்தில்தான் வேலூரில் முப்பெரும் விழா ஆயத்த கூட்டத்தில் பேசும்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கட்சியினருக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் திமுகவின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்ட செயலாளர்கள் மீது அறிவாலயத்திற்கு புகார்கள் சென்று கொண்டே இருக்கின்றன.

இந்த வகையில் கொஞ்சம் வித்தியாசமாக கடந்த 7,8,9 தேதிகளில் அறிவாலயத்திற்கு சுமார் 40 முதல் 50 நிர்வாகிகள் திரண்டு சென்று தங்கள் மாவட்ட செயலாளரை மாற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.

கடந்த வாரம் உதயநிதி விசிட் அடித்து வந்த தென்காசி வடக்கு மாவட்டத்தில் இருந்து தான் இந்த திடீர் போர்க்கொடி.

தென்காசி என்றாலே திமுகவுக்கு பஞ்சாயத்து என்று பொருள்படும்படி ஆகிவிட்டது. கடந்த வருடம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கான செயலாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தென்காசி வடக்கு மாவட்டம் மட்டும் தேங்கி நின்றது.

அங்கே வெடித்த உட்கட்சிப் பூசலால், ’வேண்டும் வேண்டும் செல்லத்துரை வேண்டும்’ என்று அறிவாலயத்திலேயே தொண்டர்கள் நிர்வாகிகள் திரண்டு குரல் எழுப்பினார்கள். அதுமட்டுமல்ல தென்காசி வடக்கு மாவட்ட உட்கட்சி தேர்தலை எதிர்த்து நீதிமன்றத்திற்கும் சென்றனர். இந்தப் பஞ்சாயத்தை எல்லாம் தீர்த்து ஒரு மாதம் கழித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா அறிவிக்கப்பட்டார்.

இப்படி பஞ்சாயத்துக்கள் இடையே அறிவிக்கப்பட்ட ராஜாவை மையமாக வைத்து தான் இப்போது மீண்டும் பஞ்சாயத்து கிளம்பி இருக்கிறது. தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா மாவட்ட அணி நிர்வாகிகளை நியமிப்பதில் பிற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கே முன்னுரிமை அளித்திருக்கிறார், கட்சி நிர்வாகக் கூட்டங்களில் பெண் நிர்வாகிகளை அவமரியாதையாக பேசுகிறார், கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பாட்டில் அளவுக்கு மீறி தலையிடுகிறார் என்பது உட்பட பல்வேறு புகார்களை அடுக்கி இருக்கிறார்கள் திரண்டு வந்த தென்காசி வடக்கு நிர்வாகிகள்.

செப்டம்பர் 7ஆம் தேதி காலை அறிவாலயத்தில் துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையை சந்தித்து இந்த புகார்களை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு தென்காசி மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரனிடமும் சென்றிருக்கிறார்கள்.

அப்போது அவர், ‘திருப்பதி போயிட்டு வந்துடறேன். வந்து பேசிக்கலாம்’ என்று நிர்வாகிகளை அனுப்பி வைத்திருக்கிறார். அதையடுத்து இளைஞரணி செயலாளர் உதயநிதியை சந்திக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அன்று சந்திக்க முடியவில்லை.

தனக்கு எதிராக நிர்வாகிகள் திரண்டு வந்து தலைமையில் புகார் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா நேற்று செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 10:30 மணி வாக்கில் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் பொதுச் செயலாளர் துரைமுருகன் வீட்டுக்கு முன்கூட்டியே விளக்கம் சொல்ல சென்று இருக்கிறார். அந்த நேரம் பார்த்து 40 முதல் 50 நிர்வாகிகள் துரைமுருகன் வீட்டுக்கு சென்று இருக்கிறார்கள்.

அவர்களில் சிலரை மட்டும் அழைத்த துரைமுருகன், மாவட்டச் செயலாளர் ராஜாவை வைத்துக்கொண்டே விசாரணை நடத்தி இருக்கிறார். அப்போது சில பெண் நிர்வாகிகளும் துரைமுருகன் வீட்டுக்குள் சென்று ராஜா மீது தங்களின் புகார்களை கூறியிருக்கிறார்கள். அப்போது ராஜா தன் தரப்பு விளக்கத்தை சொல்லியிருக்கிறார்.

மேலும் வந்தவர்களில் பலர் நிர்வாகிகள் இல்லை என்றும் துரைமுருகனிடம் தெரிவித்திருக்கிறார். அப்போது தன் வீட்டை விட்டு வெளியே வந்த துரைமுருகன் திரண்டு நின்ற கூட்டத்தை பார்த்து, ’என்னய்யா இவ்வளவு பேர் வந்திருக்கீங்க?” என்று கேட்க அனைவரும் தத்தமது பதவியை சொல்லி இருக்கிறார்கள்.

மாவட்டச் செயலாளர் ராஜாவை கடிந்து கொண்ட துரைமுருகன் புகார் மனுவை அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் இன்று செப்டம்பர் 9ஆம் தேதி பொறுப்பு அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரனையும் தூத்துக்குடி எம். பி. யும் திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழியையும் சந்தித்து ராஜா மீதான புகார்களை வலியுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில்தான் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த சிவ பத்மநாபன் மணிப்பூர் விவகாரத்துக்காக மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் நடந்த சலசலப்பு காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் இப்போது தென்காசி வடக்கு மாவட்டத்திலும் பஞ்சாயத்து புயலாக வீசிக்கொண்டிருக்கிறது.

இதே போல திருவள்ளூர் தொடங்கி பல்வேறு மாவட்டங்களிலும் திமுக உட் கட்சி மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதற்குள் இவற்றை திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் சரி செய்வாரா என்று எதிர்பார்ப்பு கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ளது” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

“ஜி20 மாநாடு பிரகடனத்தில் பெருமைப்பட ஒன்றுமில்லை” – உக்ரைன்

டிஎன்பிஎஸ்சி செயலாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel