“மேகதாது அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது” – துரைமுருகன்

அரசியல்

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டிகே சிவகுமார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க வலியுறுத்தியுள்ளார். அவரது இந்த நடவடிக்கைக்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தநிலையில், கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஜூலை 3) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி டெல்டா விவசாயிகளின்‌ நலன்‌ கருதி இவ்வாண்டும்‌ ஜுன்‌ 12 அன்று குறுவை சாகுபடிக்காக மேட்டூர்‌ அணை திறக்கப்பட்டு, தொடர்ந்து தேவைக்கேற்ப நீர்‌ வழங்கப்பட்டு வருகிறது. மேலும்‌ குறுவை சாகுபடியின்‌ முக்கியத்துவத்தை கருத்தில்‌ கொண்டு, இவ்வாண்டு ரூ.6109 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்புத்‌ திட்டத்தை முதல்வர்‌ அறிவித்துள்ளார்‌.

மேலும்‌, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்‌ படி கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கப்பெற வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு தேவையான முயற்சிகளை அனைத்து மட்டங்களிலும்‌ தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரினை அளிக்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிடுமாறு காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையத்தின்‌ தலைவரை தமிழ்நாடு உறுப்பினர்‌ மற்றும்‌ அரசின் நீர்வளத்துறை‌ கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ 16.6.2023 அன்று நடந்த 21-ஆம்‌ கூட்டத்தில்‌ வலியுறுத்தினார்‌.

கர்நாடகாவிலிருந்து ஜூன்‌ மாதத்தில்‌ குறைவாக வழங்கப்பட்ட நீர்‌ குறித்தும்‌, ஜூன்‌ 30 அன்று நடைபெற்ற காவிரி நீர்‌ முறைப்படுத்தும்‌ குழுவின்‌ கவனத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின்‌ கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌, நீர்வளத்துறை, காவிரி நீர்‌ மேலாண்மை ஆணையத்தின்‌ தலைவர்‌ ஜூலை 3 அன்று எழுதிய கடிதத்தில்‌, குறைபாட்டை நிவர்த்திக்கவும்‌, ஜூலை மாதத்தில்‌ அட்டவணைப்படி கர்நாடகா நீர்‌ அளிக்க அறிவுறுத்தவும்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்கள்‌.

இவ்வாறு தமிழக அரசு விவசாயிகளின்‌ பாசனத்திற்கேற்ப நீர்‌ அளிக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும்‌ எடுத்து வருகிறது.

கர்நாடக அரசு அவ்வப்போது மேகதாது பிரச்சனையை எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளது. அது அரசியல்‌ நிர்ப்பந்தத்தினாலோ என்னவோ தெரியவில்லை. எவ்வாறு இருப்பினும்‌ தமிழ்நாடு அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும்‌ அனுமதிக்காது.

கர்நாடக துணை முதல்வர்‌ சிவகுமார்‌ பதவி ஏற்றவுடன்‌ மேகதாது அணை கட்டுவது குறித்து பேசிய செய்திக்கு உடனடியாக நான்‌ மறுப்புத்‌ தெரிவித்திருந்தேன்‌. அண்மையில்‌ (30.6.2023 அன்று), கர்நாடக துணை முதல்வர்‌ மத்திய அரசின்‌ நீர்வளத்துறை அமைச்சரை நேரில்‌ சந்தித்தபோது மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி குறித்து பேசியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இது வருந்தத்தக்கது. கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டம்‌ உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது.

இத்திட்டம்‌ குறித்து, எற்கனவே முதலமைச்சர்‌ ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில்‌ சந்தித்தபோது (17.6.2021, 31.3.2022 மற்றும்‌ 26.5.2022) மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒருபோதும்‌ அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார்கள்‌.

நானும்‌, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கும்போதெல்லாம்‌. (6.7.2021, 16.7.2021 மற்றும்‌ 22.6.2022) இக்கருத்தை வலியுறுத்தியுள்ளேன்‌.

மத்திய நீர்வளத்துறை அமைச்சரும்‌ தமிழ்நாட்டின்‌ இசைவில்லாமல்‌ மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது எனக்‌ கூறியுள்ளார்கள். கர்நாடகாவின் அணை கட்டும்‌ முயற்சிகளை தமிழ்நாடு அரசு முறியடிக்கும்‌.

இவ்வாறு தமிழ்நாட்டின்‌ உரிமைகளைக்‌ காக்கவும்‌, காவிரி விவசாயப்‌ பெருங்குடி மக்களின்‌ நலன்‌ கருதியும்‌, இவ்வாண்டு விவசாயத்திற்கு தடையின்றி நீர்‌ வழங்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும்‌ தமிழ்நாடு அரசு எடுக்கும்‌.

மேகதாது அணை பிரச்சனை குறித்தும்‌ தக்க நடவடிக்கைகளை இவ்வரசு எடுக்கும்‌ என்பது உறுதி. இப்பிரச்சனையில்‌ நாம்‌ அனைவரும்‌ ஒற்றுமையாக செயல்படுவோம்‌” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் தேதி மாற்றம்: காரணம் என்ன?

சரத் பவாருடன் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *