டெல்லியில் துரைமுருகன்… ஜல்சக்தி அமைச்சரிடம் அடுக்கிய கோரிக்கைகள் என்னென்ன தெரியுமா?

அரசியல்

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூலை 25) டெல்லியில் மத்திய அரசின் ஜல் சக்தி துறையின் அமைச்சர் C.R. பாட்டீல், ஜல் சக்தி துறையின் இணை அமைச்சர்கள் V. சோமண்ணா, மற்றும் ராஜ் பூஷன் சௌத்திரி ஆகியோரை சந்தித்து தமிழ்நாட்டின் பன்மாநில நதிநீர் பிரச்சினைகள், நதிநீர் இணைப்பு திட்டங்களை செயல்படுத்துதல், பாசன கட்டமைப்புகளை சீரமைக்கும் திட்டங்களுக்கு நிதியுதவி பெறுதல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்கள்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

1. காவிரி பிரச்சனை

i) கர்நாடகா காவிரி நீரை தமிழ் நாட்டிற்கு மாதாந்திர அட்டவணைப் படி அளிப்பது குறித்து உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்த தீர்ப்பின்படி மாதவாரியாக பில்லிகுண்டுலுவில் நீரை அளிக்க அறிவுறுத்துமாறு கோரப்பட்டது.

ii) மேகதாது அணை திட்டம்:

கர்நாடகா உத்தேசித்துள்ள மேகதாது திட்டம் தமிழ் நாட்டிற்கு பாதிப்பை விளைவிக்கும், என்பதால் அதற்கு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் காவிரி படுகையில் நீர்பற்றாகுறை காலங்களில் விகிதாசாரத்தின் படி நீரை பங்கீடு செய்ய அறிவியல் பூர்வ விதிமுறையை (formula வை) நிர்ணயிக்க ஆணையத்தை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

வெண்ணாறு பாசன கட்டமைப்பை நவீனப்படுத்துதல் திட்டம்-2:

காவிரியின் கிளை நதியான உபபடுகையில் உள்ள வெண்ணாற்றின் பாசன கட்டமைப்பை நவீனப்படுத்தும் இரண்டாம் கட்ட திட்டத்தினை செயல்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கியின் (Asian Development Bank) நிதியுதவியை பெற தேவையான ஒன்றிய அரசின் ஒப்புதல்களை பெற மத்திய நீர்வள குழுமம் (CWC) மற்றும் ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகமும்  ஒப்புதல்களை உடனே அளிக்க வேண்டப்பட்டது.

2. கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டம்:

தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை (NWDA) தயாரித்துள்ள கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணார் – காவிரி இணைப்புக் கால்வாய் திட்டம் தென்மாநிலங்களின் நீர்வளத்தை பெருக்கும் ஒரு முக்கியமான திட்டமாகும். இத்திட்டத்தை உடன் செயல்படுத்த ஒன்றிய அரசின் நீர்வள அமைச்சகம் மற்றும் தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை (NWDA), தேவையான அனைத்து நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டப்பட்டது.

3. காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்

இத்திட்டம் தென்னிந்திய தீபகற்ப நதிகள் இணைப்பு திட்டத்தில் உள்ள 9 இணைப்பு கால்வாய்களில் ஒன்றாகும். இத்திட்டம் தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை (NWDA) தயாரித்த திட்ட அறிக்கையின் ஒரு பகுதியாகும்.

இத்திட்ட இணைப்புக் கால்வாயை உடன் செயல்படுத்தினால் வெள்ள காலங்களில் காவிரி ஆற்றில் வரும் உபரி மாயனூரிலிருந்து தெற்கு மாவட்டங்களான புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் உள்ள வறட்சிப்பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் நிலத்தடிநீர் செறிவூட்டலுக்கு பயன்படுத்துவதோடு, டெல்டா பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் கட்டுமான சேதங்களை குறைக்கவும், வெள்ள சேதத்திலிருந்து நெற்பயிர்களை காப்பாற்றவும் முடியும். அவசியம் கருதி, இத்திட்டத்தை தமிழ் நாடு அரசு 2020-லிருந்து செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டம், இந்த ஆண்டு, 2024-25, ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்தில் உள்ள கோசி மேச்சி நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு இணையானது. காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதற்கட்ட பணிகளுக்காக ரூ. 6941 கோடி செலவு செய்ய தமிழ்நாடு அனுமதி அளித்து, இதுவரையில் ரூ. 245.21 கோடி செலவு செய்துள்ளது.

விரைவில் செயல்படுத்த ஏதுவாக தேவைப்படும் ஒன்றிய அரசின் கொள்கை அளவு ஒப்புதலையும், நிதியையும் அளிக்க ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தை கேட்டுக்கொள்ளப்பட்டது.

4. முல்லைப்பெரியாறு பலப்படுத்தும் எஞ்சிய  பணிகளை முயற்சிகளை மேற்கொள்ளுதல்: – 

முல்லைப்பெரியாறு அணையிலுள்ள சிற்றணை மற்றும் மண் அணைகளை, 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதியிட்ட உச்சநீதி மன்ற ஆணைகளின்படி வலுப்படுத்தவும், பிரதான அணையில் கிரவுட்டிங் (Grouting) செய்யவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் கேரள அரசு இதுவரை ஒத்துழைக்கவில்லை.

15 மரங்களை அகற்றவும் தேவையான அனுமதிகளை வழங்கவில்லை. மேலும், இந்த பணிகளை செய்ய தேவையான கட்டுமான பொருள்களை வனப்பகுதியிலுள்ள சாலை வழியாக எடுத்துச் செல்லவும், அந்த சாலையை சீரமைக்கவும் கேரள அரசு ஒத்துழைக்கவில்லை.

அதற்கு, தேவையான அனுமதிகளை வழங்குமாறு கேரள அரசை அறிவுறுத்த ஒன்றிய நீர்வள அமைச்சரை கேட்டுக் கொள்ளப்பட்டது.

5.பெண்ணையாறு பன்மாநில நீர் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைத்தல்

கர்நாடக அரசு தன்னிச்சையாக பன்மாநில நதியான பெண்ணையாற்றின் உபநதியாகிய மார்கண்டேய நதியில், தேவை என்ற போர்வையில் ஒரு பெரிய குடிநீர் தடுப்பு அணையைக் கட்டியுள்ளது. இச்செயல் 1892 ஆம் ஆண்டு மைசூர் ஒப்பந்தத்தை மீறுவதாகும்.

இது தமிழ்  நாட்டிற்கு மிக பாதிப்பை ஏற்படுத்துவதாகும். மேலும், பெண்ணையாற்றின் நீரை நேரடியாக இறைத்து பாசனத்திற்கு பயன்படுத்துகிறது. இச்செயல்களை எதிர்த்து, தமிழ் நாடு தொடர்ந்த வழக்கில் உச்சநீதி மன்றம் 14.11.2019-ல் இப்பிரச்சனைக்கு நடுவர் மன்றத்தை நாட தமிழ் நாட்டை அறிவுறுத்தியது.

ஆனால், ஒன்றிய அரசு, இரு மாநிலங்களுக்கிடையே பேச்சு வார்த்தை நடத்த 2020-ல், ஒரு குழு அமைத்தது. எந்த தீர்வும் காணமுடியவில்லை. ஒன்றிய அரசு நடுவர் மன்றம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதற்கிடையே, மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த ஒரு குழுவை, உச்சநீதி மன்றம் 24.01.2024 அன்று அளித்த ஆணையின்படி, ஒன்றிய அரசு அமைத்தது. இந்த குழு இன்னும் அதன் அறிக்கையை அளிக்கவில்லை. ஆகையால் இக்குழுவின் அறிக்கையை விரைவில் பெற்று, இப்பிரச்சனைக்கு தீர்வு காண உடன் ஒரு நடுவர் மன்றம் ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்தை அமைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

6. குளங்கள் சீரமைப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்கு நிதியில் உள்ள நிலுவை தொகையை விரைவில் வழங்க கோருதல்.

ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் பங்கீட்டுடன் தமிழ் நாட்டிலுள்ள 14,306 குளங்கள் பல கட்டங்களில், 2015 முதல், சீரமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் பங்கில் நிலுவையில் உள்ள ரூ. 212 கோடியை உடனடியாக தமிழ் நாடு அரசிற்கு அளிக்க வலியுறுத்தப்பட்டது”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மாசம் ஒரு வாட்ஸப் குரூப் – அப்டேட் குமாரு

டிரம்ப்புக்கு டஃப் கொடுக்கும் கமலா… அதிபர் ரேஸில் முந்துவது யார்? அதிரடி சர்வே ரிப்போர்ட்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *