”இப்போதெல்லாம் கவர்னர் தான் நம்மிடம் சண்டைக்கு வருகிறார். அதை கூட புன்னகையோடு சமாளிக்கிறார் ஸ்டாலின். அதற்கு ஒரு சபாஷ்.” என்று துரைமுருகன் பேசியுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று (ஜூன் 7) இரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், ”தமிழையும், தமிழகத்தையும் உயர்த்தி வளர்த்தவர் கலைஞர்.
தமிழிருக்கும் வரையில் தமிழுக்கு செம்மொழி இருக்கும். செம்மொழி இருக்கும் வரையில் கலைஞரின் பெயர் இருக்கும்.
பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு இந்த இயக்கத்தில் மகத்தான இளைஞர்களை ஈர்த்த பெருமை கலைஞருக்கு மட்டும்தான் உண்டு.
ஆகஸ்ட் 15, ஜனவரி 26 என இரண்டிலும் மாநிலத்திற்கு நியமிக்கப்பட்ட கவர்னரே கொடியேற்றி வந்தனர். மாநிலத்திற்கு சொந்தமில்லாதவன் இரண்டு முறை கொடியேற்றும் நிலையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் ஏன் கொடி ஏற்றக்கூடாது என்று முதல்முதலாக கேள்வி எழுப்பியவர் கலைஞர்.
அதற்கான உரிமையை இந்திரா காந்தி கொடுத்தார். எம்ஜிஆர் கொடியேற்றும்போது கூட இந்த கொடியை ஏற்றக் காரணம் கலைஞர் அவர்கள்தான் என்று சொன்னார்.
முற்பட்ட சாதியே இருந்த குடியரசுத் தலைவர்கள் பட்டியலில் முற்படாத சாதியை சேர்ந்தவர் இடம்பெற காரணமானவர் கலைஞர்.
கருணாநிதி ஒரு வரலாற்று மனிதர். இலக்கியம், நாடகம், அரசியல் போராட்டம் என பன்முகத்தன்மை கொண்ட அவர், தமிழ்நாட்டின் வரலாற்றில் நிறைந்து நிற்கிறார். இதனை எந்த கொம்பனாலும் எடுத்து விட முடியாது.
உலகத்தில் எந்த நாட்டிலும் எந்த கட்சி தலைவரும் ஐம்பது ஆண்டுகாலம் ஒரு கட்சிக்கு தலைவராக இருந்தது கிடையாது. அது தலைவர் கலைஞர் மட்டும்தான்.
அப்படிப்பட்ட தலைவருக்கு இந்தாண்டு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.
கருணாநிதியோடு பல ஆண்டுகாலம் பழகி இருக்கிறேன். அவரது செயல்பாடுகளில் இருந்து ஒரு இஞ்ச் கூட நகராமல் அவர் விட்ட இடத்தில் இருந்து கட்சியை மேலும் உயர்த்தி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.
தந்தையும், மகனும் இருந்து ஒரு சேர புகழ் சேர்த்த ராஜராஜனும், ராஜேந்திர சோழனையும் போல் அப்பாவும் பிள்ளையும் ஒன்றாக இருந்து ஒரே நேரத்தில் புகழ் எய்தியவர்கள் கலைஞரும், ஸ்டாலினும் தான்.
முன்பெல்லாம் நாம் தான் கவர்னர் பற்றி குறை சொல்வோம். ஆனால் இப்போதெல்லாம் கவர்னர் தான் நம்மிடம் சண்டைக்கு வருகிறார்.
அதை கூட புன்னகையோடு சமாளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்கு ஒரு பெரிய சல்யூட்டே போடலாம்.” என்று துரைமுருகன் பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
திருமணம் குறித்து ரசிகர்களுக்கு வாக்குறுதி அளித்த பிரபாஸ்