போதைப்பொருள் கடத்தல் : திமுக நிர்வாகி நீக்கம்!

அரசியல்

போதை பொருளான மெத்தபட்டமைனை கடத்திய விவகாரத்தில் திமுக நிர்வாகி ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு மெத்தபட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசல் ரகுமான் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து சுமார் 6 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும்  சென்னை, செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் மற்றும் செய்யது இப்ராஹிம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு சொந்தமான குடோனில் இருந்து 92 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தமாக 6.92 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 70 கோடி ரூபாய் என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

கைதானவர்களில் ஒருவரான இப்ராஹிம் ராமநாதபுரம் மாவட்டம் திமுக சிறுபான்மை அணி துணைத்தலைவர் என்பதும் தெரியவந்தது.

ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு திமுக நிர்வாகி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால் எதிர்க்கட்சிகள் திமுக தலைமைக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சொல்லாட்சி-செயலாட்சி என்று எதுகை மோனையில் விளம்பர வசனம் மட்டும் பேசும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கடந்த 3 ஆண்டுகளாக புரையோடிப் போயுள்ள போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முற்றிலும் “செயலற்ற ஆட்சி”யாகவே இருப்பதற்கு எனது கடும் கண்டனம்.

தானும் ஒரு குடும்பத் தலைவர் என்பதை மனதிற்கொண்டு, தனக்கு வாக்களித்த மக்கள் மீது கொஞ்சமேனும் அக்கறை இருப்பின், நம் எதிர்கால சந்ததியினரை சீரழிக்கும் போதைப்பொருட்களின் புழக்கத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை, ‘இந்த விஷயத்தை எளிதாக கடந்து செல்ல முடியாது. உண்மையில் இந்தக் கும்பலுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியும், இத்தனை ஆண்டுகளாக இல்லாமல், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதைப் பொருள்கள் புழக்கம் பெருமளவு அதிகரித்திருப்பதும் பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

Image

திமுகவினர் பெருமளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தசூழலில் இன்று (ஜூலை 30) திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைத் தலைவர் செய்யது இப்ராகிமை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

Paris Olympics 2024: இந்தியாவுக்கு 2வது பதக்கம்… மனுபாக்கர் வரலாற்று சாதனை!

வயநாடு நிலச்சரிவு… தேசிய பேரிடராக அறிவிக்க கேரள எம்.பிக்கள் கோரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *