தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கு அடிப்படையாக இருப்பது போதைக் கலாச்சாரம்தான். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் போதைப் பொருளை ஒழிக்க அரசு முழு முனைப்பு காட்டி வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றிலும் தடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி வருகிறார்.
அதேபோன்று போதைப் பொருள் இல்லாத மாநிலமாக இருக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி அதற்கான நடவடிக்கைகளும் எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இருந்தாலும் அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தப்பட்டு வருகின்றன.
இதைத் தடுப்பது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று(ஜனவரி 3) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்யமிஸ்ரா,
போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், அரசின் காவல்துறை உயர் அதிகாரிகள், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்களுடன் பேசிய முதலமைச்சர், போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இளைய சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கலை.ரா
டெல்லி இளம்பெண் விபத்து: எஸ்கேப்பான தோழி?
நடுவில் மாட்டிய கார்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!