அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முனைப்புடன் செயல்படுவேன் என திரௌபதி முர்மு தனது உரையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் திரௌபதி முர்மு இன்று (ஜூலை 25) பதவியேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திரௌபதி முர்மு, “நாடு சுதந்திரம் அடைந்து 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடப் போகும் முக்கிய தருணத்தில் இந்த நாடு என்னைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கும் என்னைத் தேர்ந்தெடுத்த அனைத்து எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்து, குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் நான். ராணி லட்சுமிபாய், ராணி வேலு நாச்சியார், ராணி காயிதின்ல்யு, ராணி சென்னம்மா போன்ற பல பெண் தலைவர்கள் தேசப் பாதுகாப்பு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
ஏழை வீட்டில் பிறந்த மகள் நான். இந்தியாவின் ஜனாதிபதியானது எனது தனிப்பட்ட சாதனை அல்ல அது ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனையாகும். இந்தியாவில் உள்ள ஏழைகள் கனவு காண்பது மட்டுமின்றி அந்த கனவுகளை நிறைவேற்றவும் முடியும் என்பதற்கு எனது வெற்றியே சான்று.
தலித்துகள், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் என அனைவரும் அவர்களில் ஒருவராக என்னைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வெற்றிக்கும், நியமனத்திற்கும் பின்னால் அவர்களின் ஆசீர்வாதம் உள்ளது.
அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவராகச் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். இந்த பதவியைக் கௌரவிக்கும் வகையில் செயல்படுவேன். குடியரசுத் தலைவர் பொறுப்பு ஏழைகள், பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும். பெண்கள், இளைஞர்களின் நலனில் தனி கவனம் செலுத்துவேன்.
பழங்குடியினத்தைச் சேர்ந்த நான் குடியரசுத் தலைவரானது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவத்தைக் காட்டுகிறது.
பல மொழிகள், மதங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்ட அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முனைப்புடன் செயல்படுவோம்’’ என்று பேசினார்.
க.சீனிவாசன்