அன்பின் வழியது திராவிடவியம்! வெறுப்பரசியலின் நிழலும் அதன் மேல்படியாது!

Published On:

| By Minnambalam

ராஜன் குறை

திராவிடம் என்ற குறிச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு உருவான அரசியல் தத்துவம் திராவிடவியம். திராவிடம் என்ற குறிச்சொல் மொழி அடிப்படையில் அமைந்த பண்பாட்டு மூலங்களை குறிப்பதாகும். ஆரியம் என்ற சமஸ்கிருத மொழி சார்ந்த இந்தோ-ஐரோப்பிய மொழி வேர்களிலிருந்து வேறுபட்ட மூல வேர்களைக் கொண்ட மொழிக் குடும்பமே திராவிடம் என்று சொல்லப்படுவது. இதன் முக்கிய மொழி தமிழ் என்றாலும் அதன் ஆதி வடிவிலிருந்து கிளைத்த மொழிகள் பல.

இந்த திராவிடம் என்ற மொழி சார்ந்த பண்பாட்டின் குறிச்சொல்லை அரசியல் கருத்தியலுக்கு எடுத்தாள வேண்டிய தேவை எதனால் ஏற்பட்டது என்றால் சமஸ்கிருதம் சார்ந்த ஆரிய பண்பாடு வர்ண தர்மத்தை உருவாக்கி நவீன காலனீய அரசாட்சிக் காலத்தில் அனைத்து இந்துக்களுக்குமான சட்டமாக நிலைநிறுத்தியதால் உருவானது என்பதே மிக எளிமையான, வெளிப்படையான வரலாற்று உண்மை.

வர்ண தர்மத்தை சமஸ்கிருத மொழியில் தொடர்ந்து பல்வேறு சுமிருதி, சாத்திர நூல்களில் எழுதி பரவலாக்கி வந்தது ஆரிய பண்பாடு. வர்ண தர்மத்தில் பிறப்பின் அடிப்படையில் ஒரு பிரிவினர் பிறரை விட உயர்ந்தவர்களாக கூறப்பட்டார்கள். வர்ண அமைப்பு பிறப்பின் அடிப்படையில் உருவாகவில்லை, தொழில் பிரிவினையால் உருவானது என்று பலரும் கூறுவதைக் கேட்கலாம். இது முற்றிலும் ஆதாரமற்ற கூற்று என்பதை மிக முக்கிய நூலான மனு சுமிருதி என்ற மனு தர்ம சாத்திரத்தைப் படித்து அறியலாம்.

மனு தர்மத்தில் மிக விரிவாக ஒரு பிறவியில் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, அதாவது அவரவர் வர்ண தர்மத்திற்கு உட்படுவதற்கு ஏற்ப, அடுத்த பிறவி அமையும், ஒரு குறிப்பிட்ட வர்ணத்தில் பிறப்பார்கள் என்றுதான் விதிமுறைகளே எழுதப்பட்டுள்ளன. இதை யார் வேண்டுமானால் சரி பார்க்கலாம். பேராசிரியர் பேட்ரிக் ஆலிவல்  விரிவான ஆய்வின் அடிப்படையில் தொகுத்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து 2005-ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிடி பிரஸ் வெளியிட்டுள்ள மனு தர்ம சாத்திர நூலை இணையத்தில் யாரும் படித்துப் பார்க்கலாம்

இந்த வர்ண தர்மம் தமிழ்நாட்டிலும் காலூன்ற தமிழ் மன்னர்கள் உதவினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு சமூக ஒழுங்கை உருவாக்க இத்தகைய விதிமுறைகள் மன்னர்களுக்கும், பேரரசுகளை உருவாக்க நினைத்தவர்களுக்கும் உதவியாக இருந்திருக்கலாம். ஆனால் வர்ண தர்ம சாத்திர நூல்கள் எவையும் தமிழ் மொழியிலோ, பிற திராவிட மொழிகளிலோ எழுதப்படவில்லை. ஆங்கிலேயர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்துக்களின் தனி வாழ்க்கை குறித்த வழக்குகளில் தீர்ப்பளிக்க வர்ண தர்ம நூல்களைப் பயன்படுத்த நேர்ந்தபோது சமஸ்கிருத நூல்களிலிருந்துதான் ஆங்கிலத்தில் விதிமுறைகளை மொழியாக்கம் செய்து தொகுத்துக் கொண்டார்கள். இதனால் தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதோர் அரசியல் தன்னுணர்வு பெற்று, தாங்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று அடையாளப்படுத்தப்படுவதை மறுத்தபோது, அவர்கள் திராவிடம் என்ற ஆரியத்திற்கு மாற்றான பண்பாட்டு அடையாளத்தை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

பிறப்பில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் பண்பாட்டை மறுப்பதற்காக உருவானதுதான் திராவிடவியல் கருத்தியலே தவிர, இது யாரையும் இன அடையாளம் சார்ந்து எதிர்ப்பதற்கோ, வெறுப்பதற்கோ உருவானதல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முளைவிடத் தொடங்கிய இந்த திராவிட பண்பாட்டுத் தன்னுணர்வு, இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வெகுஜன அரசியலை உருவாக்குவதில் பெரு வெற்றி கண்டபோதும், ஒருபோதும் வெறுப்பரசியலை கைக்கொள்ளவில்லை.

மாறாக திராவிடவிய சிந்தனைதான் பலரது வெறுப்பிற்கு ஆளாகியுள்ளது. இதற்குக் காரணம் வெறுப்பாளர்களின் பிழை நோக்குதான் என உறுதியாகக் கூற முடியும். உதாரணமாக ஒரு சில அம்சங்களை விரிவாக ஆராய்வோம். இதையெல்லாம் எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் சிலர் புரிந்துகொள்வதில்லை என்றாலும், கூறுவது நம் கடமை.

பிராமணர்களை பார்ப்பனர் என்று அழைப்பது வெறுப்பரசியலா?  

பிராமணர் என்பது வர்ண அடையாளம். அது ஒரு ஜாதியோ, மக்கள் தொகுதியோ அல்ல. தமிழ்நாட்டில் அய்யர், அய்யங்கார் என பல ஜாதிகள் உள்ளன. அவற்றிற்குள்ளேயே அகமண முறை கடைப்பிடிக்கும் ஜாதிக் குழுக்கள் உள்ளன. அய்யர்கள் சைவர்கள்; சிவனை வழிபடுபவர்கள், அய்யங்கார்கள் வைணவர்கள்; விஷ்ணுவை வழிபடுபவர்கள். இந்த பிரிவினர்கள் யாருமே பிரம்மனை வழிபடுவதில்லை என்றாலும் பிராமணர்கள் என்ற வர்ண அடையாளத்தை ஏற்கின்றனர். ஒரு சில ஜாதிகள் சத்திரியர்கள், வைசியர்கள் என்ற பிற வர்ண அடையாளத்தைக் கூறிக்கொண்டாலும் பொதுவான ஒரு சத்திரிய சங்கமோ, வைசிய சங்கமோ இல்லை. ஆனால் பிராமண சங்கம் இருக்கிறது.

இதில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் நாலாவது வர்ணமான சூத்திர வர்ணத்தை யாருமே ஏற்க முன்வர மாட்டார்கள் என்பதுதான். ஏனெனில் தர்ம சாத்திரத்தில் அவர்கள் பிறருக்கு ஏவல் செய்பவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அம்பேத்கர் 1946-ம் ஆண்டு எழுதிய “சூத்திரர்கள் யார்?” என்ற நூலில், எதனால் தர்ம சாத்திரங்கள் அவர்களை அவ்வளவு கடுமையான வர்ணணைக்கும், விதிமுறைகளுக்கும் ஆட்படுத்துகின்றன, அவர்கள் ஆரியர்களே இல்லையா என்று கேட்கிறார்.

தர்ம சாத்திரங்கள் முதலில் யாரை சூத்திரர்கள் என்று குறிப்பிட்டாலும் காலப்போக்கில் பிராமணர் அல்லாதவர்கள் அனைவரும் சூத்திரர்கள் என்று பிற்காலத்தில் எழுதிய சாத்திரங்களில் வரையறுத்தார்கள் என்பதும் மிக முக்கியமானது. பரசுராமர் சத்திரியர்கள் அனைவரையும் கொன்றுவிட்டதால் யாரும் சத்திரியர்கள் இல்லை என்றார்கள். வைசியர்களும் சூத்திரர்களுடன் கலந்துவிட்டார்கள் என்றார்கள். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பல்வேறு ஜாதியினர் நாங்கள் சத்திரியர்கள் என்று பிராமணர்களுடன் வாதங்களில் ஈடுபட்டார்கள்.  

உதாரணமாக மராத்திய மாநில சிவசேனா பிரிவு ஒன்றின் தலைவரான உத்தவ் தாக்கரேவின் தந்தை பால் தாக்கரேதான் சிவசேனாவை நிறுவியவர். அந்த பால் தாக்கரேவின் தந்தை கேசவ் தாக்கரே, அவரது சந்திரசேனிய காயஸ்த பிரபு ஜாதியினர் சத்திரியர்கள் அல்ல என்று பிராமண அறிஞர் ராஜுவாடே கூறியதை எதிர்த்து கடுமையாக வாதம் புரிந்தார். எப்படி மராத்திய சாம்ராஜ்யத்தில் பிராமணர்கள் பிறரை ஒடுக்கினார்கள் என்பதை விரிவாக எழுதினார். இப்படி பல மாநிலங்களிலும் பல்வேறு ஜாதியினர் பதினெட்டாம் நூற்றாண்டு முதலே நாங்கள் சூத்திரர்கள் அல்ல சத்திரியர்கள் என்பதும், பிராமணர்கள் ஏற்க மறுப்பதும் நிகழ்ந்து வந்துள்ளது.

அண்ணாவின் நாடகமான “சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” இதே பிரச்சினை பதினேழாம் நூற்றாண்டு மராத்திய வரலாற்றில் நிகழ்ந்ததை விளக்குகிறது. சிவாஜி போன்ஸ்லே தன் படை நடத்தும் ஆற்றலால் பல போர்களில் வெற்றி பெற்று, பல கோட்டைகளை கைப்பற்றிய பின் மராத்திய அரசுக்கு அரசனாக விரும்பியபோது பிராமண அதிகாரிகள் ஏற்க மறுக்கிறார்கள். சிவாஜி சத்திரியரல்ல; விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சூத்திரர் என்று கூறுகிறார்கள். பின்னர் காசியைச் சேர்ந்த காகபட்டர் என்ற பிராமண வேத விற்பன்னர் சிவாஜிக்கு ஒரு சத்திரிய வம்சாவழி இருப்பதாகக் கூறிய பிறகுதான் அவர் சத்திரபதியாக முடிசூட்டிக்கொள்ள முடிகிறது.

சூத்திர அடையாளம் என்பது ஏற்றுக்கொள்ள சாத்தியமற்றது என்றால், அதைவிட தீவிரமாக மறுதலிக்கப்பட வேண்டியது பஞ்சமர் என்ற அடையாளம். ஏனெனில் அந்த அடையாளம் ஒரு இழிசொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசரை கோபத்துடன் சாடும் வாஞ்சி நாதன் அவரை “ஜார்ஜ் பஞ்சமன்” என்று அழைத்ததை எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே கடுமையான தீண்டாமைக்கு ஆளாகிய அவர்ணர்கள், இன்று தலித் என்ற அரசியல் அடையாளத்தை ஏற்பவர்கள், வர்ண சமூகத்தை மறுத்தேயாக வேண்டியவர்கள்தான்.

பிராமணர்களை பார்ப்பனர் என்று கூறியது ஏன்?

இந்த பின்னணியில்தான் வர்ண சமூகத்தை மாற்றியமைக்க விரும்பிய திராவிட இயக்கம் பிராமணர் என்ற வர்ண அடையாளத்தை பயன்படுத்துவதை தவிர்த்தது. அதற்குப் பதில் தமிழ் இலக்கியத்தில் பயின்ற பார்ப்பனர் என்ற சொல்லை பயன்படுத்தியது. இந்த சொல்லுக்கான பொருள் விளக்கத்தை சுப.வீரபாண்டியன் உள்பட பல திராவிட இயக்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள். பழந்தமிழ் இலக்கியத்தில் இதன் பயன்பாட்டைக் கூறியுள்ளார்கள். பார்ப்பு என்பது பறவையைக் குறிக்கும். பறவைக் குஞ்சு முட்டையிலும், பின்னர் முட்டையை உடைத்து வெளியே வரும்போதும் இரு பிறப்பு எடுப்பதால், இரு பிறப்பாளர்கள் என்று தங்களை கூறிக்கொள்பவர்களை பார்ப்பனர் என்று கூறியதாகவும் ஒரு பொருளை அவர் சுட்டிக் காட்டுகிறார். எப்படியானாலும் இது பண்டைய தமிழ் இலக்கியத்தில் புழங்கிய சொல்தான்.  

தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏன் அவர்கள் மட்டும் ஆரிய வர்ண அடையாளத்தை பின்பற்ற வேண்டும்? பார்ப்பனர் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளலாமே? பார்ப்பனர் என்று சொல்வதை இழிசொல் என்று கருதக் காரணம் தங்கள் வர்ண அடையாளத்தை மறுப்பதை தங்களை இழிவுபடுத்துவதாக பார்ப்பனர் உணர்ந்ததேயாகும். இந்த மனோபாவத்தை திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள், வெறுப்பாளர்கள் தொடர்ந்து தூண்டி வந்துள்ளார்கள். இப்போது இந்துத்துவர்கள் அதனை செய்கிறார்கள்.  

இதிலும் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிராமணர்கள் தங்களை அவ்வாறு அழைத்துக்கொள்வதைக் கூட பார்ப்பனரல்லாதோர் எதிர்க்கவில்லை. பார்ப்பனரல்லாதோர் பிராமணர்கள் என்று தங்களை அழைத்து வர்ண அடையாளத்தை ஏற்க வேண்டும் என்று பிராமணர்கள் வற்புறுத்துவதைத்தான் எதிர்க்கிறார்கள். பிராமணர் என்பது வர்ண அடையாளம் இல்லையென்றால் அந்த சொல்லுக்கு வேறு என்ன பொருள் என்பதைக் கூற வேண்டும். பிரம்மனிலிருந்து பிறந்தவர்கள் என்றால் மற்றவர்கள் யாரிலிருந்து பிறந்தார்கள் என்ற கேள்வி எழும்.

நான் முதலில் குறிப்பிட்ட மனு தர்ம சாத்திரத்தை படித்துப் பார்த்துவிட்டு எது வெறுப்பின் வெளிப்பாடு என்பதை பார்ப்பனர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிறப்பின் அடிப்படையில் ஒரு பகுதியினரை சூத்திரர்கள் என்று அழைத்து அவர்களை தீண்டாமைக்கு ஆளாக்குவது வெறுப்பா, அல்லது அப்படி செய்த பிராமண வர்ண அடையாளத்தை அங்கீகரிக்க மறுப்பது வெறுப்பா என்பதை சிந்திக்க வேண்டும். பிராமணர்கள் சூத்திரர்களுக்கு எதிராகவும் பல தீண்டாமை வடிவங்களை கடைப்பிடித்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.  

குறைந்தபட்சம், பிராமண சங்கங்கள் “வர்ண தர்மம் தற்காலத்தில் தேவையற்றது. நால் வர்ண சமூகமோ, அவர்ணர்களோ இன்றைக்குக் கிடையாது. நாங்கள் அதனை முற்றாக மறுக்கிறோம். காலத்தால் அழியாத சனாதனம் என்று நாங்கள் வர்ண தர்மத்தைக் கூறமாட்டோம்” என்பதை அறிவிக்கலாமே? இது குறித்து சமஸ்கிருத அறிஞர்களை அழைத்து மாநாடு போடலாமே?

சமஸ்கிருதம் அறிந்தவர்களைக் கொண்டு 21-ம் நூற்றாண்டுக்கான சமத்துவ தர்ம சாத்திரத்தை ஆரிய மொழியில் எழுதலாம். எல்லா மனிதர்களும் ஒரே வர்ணமே என்ற ஏகவர்ண கோட்பாட்டை அறிவிக்கலாம். அத்துடன் அகமணமுறை என்பதும் தற்காலத்திற்கு தேவையில்லாதது என்பதை ஏற்கலாம். மனமொப்பிய எந்த இருவரும் இணைந்து வாழலாம் என்பதை புதிய சாத்திரமாக அறிவிக்கலாம். இதையெல்லாம் செய்தால் பெயரில் என்ன இருக்கிறது என்று அனைவருமே கருதும் சூழல் ஏற்படுமல்லவா?  

பெரியாரின் போராட்டம்

பெரியாரின் திராவிடர் கழகம் “பிராமணாள் காபி ஹோட்டல்” என்று உணவகங்களில் எழுதியிருப்பதை அழிக்க வேண்டும் என்று நடத்திய போராட்டம் புகழ் பெற்றது. இந்த போராட்டத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், திராவிடர் கழகம் பிராமணர்கள் உணவகம் நடத்தக் கூடாது என்று போராடவில்லை. அவர்கள் தொழிலை பாதிக்கும்படி எதுவுமே செய்யவில்லை. பெயர்ப் பலகையில் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சொல் இருக்கக் கூடாது என்றுதான் கூறினார்கள்.

அந்தப் போராட்டம் நடந்த இடங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி முரளீஸ் கஃபே இன்றுவரை சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பார்ப்பனர்கள் நடத்தும் தொழில்கள் பல சிறப்பாகத்தான் இயங்கி வருகிறது. வெறுப்போ, வன்முறையோ திராவிடவிய அரசியலில் கிடையாது. திராவிடப் பண்பாட்டிலும் கிடையாது.

இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினாலும் அதில் தங்களை தீயிட்டுக் கொண்டு உயிரை ஈந்ததான் அதிகமே தவிர பிறரை கொல்ல நினைத்ததில்லை. அடையாளம் தெரியாத கும்பல்கள் உணர்ச்சிவசப்பட்டு தங்களைத் தாக்கிய சில தமிழ்நாட்டு காவலர்களை கொன்றது தவிர இந்தி மொழி பேசுபவர்கள் மீது எந்த வன்முறையும் ஏவப்படவில்லை. இன்றளவும் இந்தி பாடல்களை ரசிக்கிறார்கள்; இந்தி படங்களை பார்க்கிறார்கள்.

வட நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வரும் இந்தி பேசும் தொழிலாளர்களை அவர்கள் குடும்பங்களை அன்புடன் அரவணைக்கிறார்கள். எப்படி அவர்களை நேயத்துடன் அணுக வேண்டும் என்று ஒரு அழகான திரைப்படத்தை எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் இயக்கத்தில் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் தயாரித்துள்ளார். திராவிட இயக்கம் அன்பினை அடிப்படையாகக் கொள்ளாவிட்டால் இந்த பண்பாடு இப்படி உயிர்ப்புடன் இருக்குமா என்று யோசிக்க வேண்டும்.

அதே போல தி.மு.க பெருவெற்றி பெற்று அரசமைத்த காலத்தில் வெளியான சில படங்களை நினைவுகூர வேண்டும். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிராமண பாத்திரங்களை ஏற்று நடித்த வியட்நாம் வீடு (1970), கெளரவம் (1973) போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்ற படங்களாகும். ஒரு சமூகத்தின் மீது வெறுப்பு இருந்தால், அந்த வெறுப்பை உருவாக்கியிருந்தால் இந்தப் படங்கள் இப்படி வெற்றி பெற்றிருக்குமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் திருமால் பெருமை, திருவருட்செல்வர் போன்ற படங்களில் பக்திப் பழமாகவே மாறிவிடுவார் சிவாஜி கணேசன். அவருக்கு எவ்வளவு உள்ளார்ந்த அன்புடன் சிலை எடுத்தார் கலைஞர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். உள்ளத்தில் வெறுப்பிருந்தால் இதெல்லாம் சாத்தியமாகுமா?

இயக்குநர் கே.பாலசந்தர், கவிஞர் வாலி, புரட்சித்தலைவி ஜெயலலிதா, கலைஞானி கமலஹாசன் என தமிழ்நாட்டு மக்களும், திராவிட இயக்கத்தவரும் அங்கீகரித்து மகிழ்ந்த பிராமண சமூகத்தினர் எண்ணிக்கை மிக அதிகமானது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறனாளர்கள், முற்போக்கான சிந்தனையை, அரசியலை ஏற்பவர்கள் என நான் உட்பட பல பிராமண சமூகத்தவர்களை திராவிட இயக்கத்தினர் மிகுந்த மகிழ்வுடன் அங்கீகரித்துள்ளனர். இல்லாத வெறுப்பரசியலை உருவாக்கிட திராவிட இயக்க எதிரிகள் உருவாக்கும் சதித் திட்டத்தை தமிழக முற்போக்காளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். 

கட்டுரையாளர் குறிப்பு:  

Dravidianism is a Federalism of Varna dharma denial - Article in Tamil by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: குடல் இறக்கத்தை அலட்சியப்படுத்தாதீர்கள்!

டாப் 10 நியூஸ்: விழுப்புரத்தில் முதல்வர் ஆய்வு முதல் கனமழை விடுமுறை வரை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel