ராஜன் குறை Dravidianism is a Federalism of Varna dharma denial
இந்தக் கட்டுரை அதிகம் புழக்கத்தில் இல்லாத இரண்டு சொற்களை விவாதிக்க விரும்புகிறது. ஒன்று திராவிடவியம். ஆங்கிலத்தில் சொன்னால் Dravidianism. எந்த ஒரு பெயர் சொல்லோடும் இசம் என்ற பின்னொட்டைச் சேர்த்தால் அது ஒரு கருத்தியலைக் குறிப்பதாகும். தமிழில் இசம் என்ற பின்னொட்டை இயம் என்று எழுதுகிறோம்.
கார்ல் மார்க்ஸ் அவர்களின் சிந்தனைகளின் அடிப்படையில் உருவான கருத்தியல் ஆங்கிலத்தில் Marxism என்றும் தமிழில் மார்க்சியம் அல்லது மார்க்சீயம் என்றும் எழுதப்படுகிறது. அதைப்போல திராவிடம் என்ற சொல்லோடு கருத்தியலைக் குறிக்கும் இயம் என்ற சொல்லைச் சேர்த்தால் அது திராவிடவியம் என்று எழுதப்படுவது பொருத்தம்.
அதேபோல ஆங்கிலத்தில் Federalism என்று கூறுவதை தமிழில் கூட்டாட்சி தத்துவம் என்று பிரித்துச் சொல்கிறோம். அதனை கூட்டாட்சியம் என்று கூறுவது இன்னமும் சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்கும்.
எதனால் இந்தச் சொற்களை பயன்படுத்தத் தோன்றுகிறது என்றால் தொடர்ந்து திராவிடமா, தமிழ் தேசியமா அல்லது இரண்டும் ஒன்றா என்று நடக்கும் விவாதங்கள்தான். திராவிட நாடு கோரிக்கை துவங்கிய காலத்திலிருந்தே இந்திய தேசியவாதிகள், தமிழ் தேசியவாதிகள் ஆகியோர் அந்தக் கோரிக்கையின் தத்துவ அடிப்படைகளைப் புரிந்துகொள்ள இயலாமல்தான் எதிர்த்து வந்துள்ளார்கள். அதனை முழுமையாகப் புரிந்துகொள்ள திராவிடவியம், கூட்டாட்சியம் என்ற இரு கருத்தியல்களைப் புரிந்துகொள்வது அவசியம்.
அரசியல் விவாதங்கள் தேய்வழக்காக சொற்களை மாற்றிவிடும்போது அவை வலுவிழந்து போவதை ‘பகிரப்படும் சொற்களின் இயக்கமின்மை’ (Inertia of shared vocabulary) என்று குறிப்பிடுகிறார் அரசியல் கோட்பாட்டாளர் வில்லியம் கனோலி. அந்த நிலையில் புதிய சொல்லாக்கங்கள் மூலம் சிந்தனையை தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம். அதற்கு திராவிடவியம், கூட்டாட்சியம் ஆகிய சொற்கள் பயன்படும்.
முதலில் தேசியம் என்பது எப்படி, கூட்டாட்சியத்திலிருந்து மாறுபட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தேசம் என்ற அரசியல் அலகை, அடையாளத்தை உருவாக்குவதுதான் தேசியம். தேசம் என்ற சொல்லுடன் இயம் என்ற பின்னொட்டைச் சேர்த்தால் தேசியம் உருவாகிறது. ஆங்கிலத்தில் நேஷன் என்ற சொல்லுடன் இசம் என்பதைச் சேர்த்து நேஷனலிசம் என்று வழங்குவதைப் போல.
உடன்படிக்கையின் பேராலான கூட்டணி அல்லது கூட்டுறவு என்பதைச் சுட்டும் Foedus என்ற இலத்தீன் சொல்லிலிருந்து உருவானது Federalism. இதனை கூட்டாட்சியம் என்று தமிழில் அழைத்துப் பழகினால் அதன் தனித்தன்மை புரியும்.
தேசியமும், கூட்டாட்சியமும். Dravidianism is a Federalism of Varna dharma denial
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தேசியம் வலுப்பெற்றபோது அது மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும் கருத்தியலாகத்தான் பார்க்கப்பட்டது. மக்களை ஒரு தேசிய அடையாளத்தில் ஒன்றுபடுத்தினால் அவர்கள் சுயாட்சிக்கு தயாராகி மக்களாட்சியை நடைமுறைப்படுத்துவார்கள் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. மன்னர்களும், பிரபுக்களும், அவர்களது எதேச்சதிகாரமும், ஆடம்பரங்களும், சூழ்ச்சிகளும், போர்களும் போதும், இனி மக்களிடம் அதிகாரம் செல்ல வேண்டும் என்றால் அதற்கு தேசிய ஒருங்கிணைப்பு கைகொடுக்கும் என்று கருதப்பட்டது.
இத்தாலியும், ஜெர்மனியும் தேசங்களாக ஒருங்கிணைக்கப்பட்டது பெரும் எழுச்சியைத் தந்தது. இவ்வாறு தேசங்களெல்லாம் மக்களாட்சியின் சுயாட்சி ஆகும்போது, மானுடம் உலகப் பொதுவானதாக மாறும், சுதந்திர தனிமனிதர்களின் உரிமைகள் உலகளாவியதாக மாறி, அனைவரும் உலகக் குடிமக்களாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகளும் உருவாயின. அடிப்படையில் இவை உலகக் கூட்டாட்சியை நோக்கிய கனவுகள் என்றால் மிகையாகாது.
உதாரணமாக ஓவியர் ஃபெரடிரிக் சோர்யு (Frederick Sourrieu, 1807-1887) அனைத்து தேசங்களும் அடங்கிய மானுடம் அணிவகுத்து ஊர்வலமாக செல்வதைப் போல 1848-ம் ஆண்டு ஒரு புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்தார் (தேசங்களின் உடன்படிக்கை என்ற இந்த ஓவியம் அவரது “உலக மக்களாட்சி சோஷலிசக் குடியரசு” என்ற ஓவியத் தொகுப்பின் பகுதியாகும்). மன்னரற்று உருவான சுதந்திர அமெரிக்கக் குடியரசும், மன்னரின் தலையை வெட்டிய ஃபிரெஞ்சு புரட்சியும் பல தத்துவவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்களை மானுடம் புதிய சுயாட்சி, மக்களாட்சிக் குடியரசுகளின் கூட்டாட்சியாக மாறப் போவதாக எண்ண வைத்தது.
ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான தேசங்கள் முதலீட்டிய திரட்சிக்கான களங்களாக மாறியதில் அவைகளுக்கிடையில் முன்னெப்போதும் இல்லாத அளவு விரோதங்களே பெருகின. அதன் விளைவாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டு கொடூரமான உலக யுத்தங்கள் நடைபெற்றன. இன அழிப்பும், அணு ஆயுதமும் வன்முறையின் பரிமாணத்தை பன்மடங்கு அதிகரித்தன.
முதல் உலகப்போருக்குப் பிறகும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகும் அனைத்து தேசங்களும் பங்கேற்கும் அவைகள் உருவாக்கப்பட்டன. இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபை என்பது உலக நாடுகள் அனைத்தும் கலந்து பேசி உலகை நிர்வகிக்கும் நோக்கம் கொண்ட அமைப்பாகவே உள்ளது. அதேபோல தனித்தனி தேசங்களாகி தங்களுக்குள் கடுமையாக போரிட்டுக்கொண்ட ஐரோப்பிய தேசங்கள் ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றினை உருவாக்கி கூட்டாட்சிய நோக்கிற்கு வலு சேர்த்துள்ளன.
இன்றைய பகுத்தறிவு சிந்தனையின் முன்னுள்ள முக்கிய கேள்வி எப்படி அணு ஆயுதப்போரை தவிர்ப்பது என்பதுதான். அதுதான் தேசியத்திற்கும், கூட்டாட்சியத்திற்குமான வேறுபாட்டை புரிந்துகொள்ள வலியுறுத்துகிறது.
கூட்டாட்சியத்தின் தத்துவ அடிப்படை என்னவென்றால் இறையாண்மையை ஒவ்வொரு குடிநபரிடமும் கொடுத்துவிட்டு, குடிநபர்களின் பிரதிநிதிகள் மூலம் தலமட்ட அரசாங்கம், மாநில அரசாங்கம், ஒன்றிய அரசாங்கம் என்று பல மட்டங்களில் சுயாட்சி, கூட்டாட்சி அமைப்புகளை உருவாக்குவது.
இதற்கு மாறாக தேசிய வாதம் என்ன செய்கிறது என்றால், தேசம் என்ற மொத்தத்துவ அடையாளத்தை வலுப்படுத்தி, தேசிய அரசிடம் இறையாண்மையை குவித்து அதனை போர் இயந்திர இறையாண்மையாக மாற்றுகிறது.
இன்றளவும் பெரும்பாலான நாடுகள் தேசிய அரசுகளாக ராணுவத்திற்காகவும், ஆயுதங்களுக்காகவும் பெருமளவு செலவு செய்பவையாகவே உள்ளன. மக்களுக்கிடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்காமல் அவர்கள் அனைவர் ஆதரவையும் பெறுவதற்கு தேசபக்தி சொல்லாடல்களே அனைத்து நாடுகளிலும் உதவியாக இருக்கின்றன.
ஆனால், கூட்டாட்சியம் வலியுறுத்தும் சுயாட்சி உரிமைகள் மக்களிடையேயான முரணரசியலை அனுமதிக்கின்றன. மக்களிடையே சமத்துவத்திற்கான பலவகை அணி திரட்டல்களை சுயாட்சி அரசியல் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தேசியம், தேசிய இனம் சார்ந்த சொல்லாடல்கள் ஒற்றை அடையாளத்தை வலியுறுத்தி முரணரசியலை தவிர்க்கவே முற்படுகின்றன. அதுவே மார்க்சீயத்திற்கும், தேசியத்திற்குமான முரணாக இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தது எனலாம்.
இருபதாம் நூற்றாண்டு அனுபவத்தில் தேசிய அரசியல், அனைத்து மக்களுக்கும் விடுதலையை பெற்றுத்தர தவறியதற்குக் காரணம் தேசிய அரசு என்ற வடிவில் இறையாண்மையைத் தேக்கியதுதான். இது ராணுவ வாதமாக, தேசியப் பெருமிதமாக, எதிரிகளை வெளியே கட்டமைப்பதாக மாறியது. இதற்கு மாற்றாகவே மக்களிடையே சமத்துவம், சமநீதியை வலியுறுத்தும் அரசியல் இயக்கங்கள் கூட்டாட்சியப் பார்வையை வலியுறுத்தத் தலைப்பட்டன.
திராவிடவிய கருத்தியலை சமைத்திட்ட தத்துவ தரிசிகளான பெரியாரும், அண்ணாவும் உலகளாவிய மானுட பொதுமையினையும், சமத்துவத்தையுமே அதிகம் கருதினார்கள். அவர்கள் தமிழர்களின் பண்பாட்டு தனித்துவத்தையும், சுயாட்சி உரிமைகளையும் வலியுறுத்தினாலும், அதனை கூட்டாட்சிய வடிவில் சிந்தித்ததால்தான் திராவிட நாடு என்ற கூட்டாட்சிக் குடியரசிற்கான கோரிக்கையை வடிவமைத்தனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை அரை நூற்றாண்டுக் காலம் வழிநடத்திய கலைஞரும் “மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற முழக்கத்தையே முன்னிலைப்படுத்தினார்.
திராவிடவியம் என்பது என்ன?
திராவிடம் என்ற குறிச்சொல்லுடன் இயம் என்பதை இணைத்து உருவாக்கக் கூடிய கருத்தியலே திராவிடவியம். இந்த அரசியல் கருத்தியல் நாற்பதுகளில் பெரியாராலும், அண்ணாவாலும் உருவாக்கப்பட்டது என்று கூறுவதே சரியாக இருக்கும். அவர்கள் திராவிடவியம் என்ற சொல்லைப் பயன்படுத்தாவிட்டாலும் நாம் இன்றைய நிலையில் அரசியல் தெளிவு கருதி அந்த சொல்லை அவர்கள் உருவாக்கிய கருத்தியலுக்கு சூட்டுவது பயனுள்ளதாகவே இருக்கும்.
இந்தக் கருத்தியலுக்கு அடிப்படையான திராவிடம் என்ற சொல் பல காலம் புழங்கி வந்துள்ளது. மொழியாக தமிழையும், நிலப்பரப்பாக தென்னிந்தியாவையும் குறிப்பதாக இருந்திருக்கிறது. ஆங்கில ஆய்வாளர்களான எல்லிஸ், கால்டுவெல் ஆகியோர் ஆரிய மொழியான சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்ட மூலத்தைக் கொண்டது திராவிட மொழிக்குடும்பம் என்று சொன்னது திராவிட தமிழ் அடையாளத்தை வலுப்படுத்த உதவியது. மனோன்மணியம் சுந்தரனார், அயோத்திதாசர் உட்பட பலரும் திராவிட தமிழ் அடையாளங்களை வலுப்படுத்தினர்.
திராவிடம் என்ற சொல் தென்னிந்திய நிலப்பரப்பைக் குறிப்பதாக தாகூர் எழுதிய தேசிய கீதத்தில் இடம்பெற்றுள்ளது. திராவிட நாடு கோரிக்கை என்பதும் தென்னிந்திய நிலப்பரப்பை மனதில் வைத்துதான் எழுப்பப்பட்டது.
ஆனால், ஏன் தென்னிந்திய நிலப்பரப்பிற்கு திராவிடம் என்ற பெயர் என்று கேட்டால் அதற்குக் காரணம் திராவிட மொழிக் குடும்பம், அவற்றின் வேறுபட்ட பண்பாடு என்பதாகும். எதிலிருந்து வேறுபட்டது என்று கேட்டால் சமஸ்கிருத மொழியை அடிப்படையாகக் கொண்ட ஆரிய பண்பாட்டிலிருந்து வேறுபட்டது என்பதாகும். அது முற்றிலும் வேறுபடாவிட்டாலும், மிக முக்கியமான ஓர் அரசியல் அம்சத்தில் வேறுபட்டது என்பதே நாம் கருத்தில்கொள்ள வேண்டியது.
அந்த முக்கியமான அம்சம் வர்ண தர்மம். சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மனு ஸ்மிருதி முதலிய நூல்கள் மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாகப் பிரித்தன. சமஸ்கிருத மொழியை பயின்று பயன்படுத்தி வந்த பிராமணர்களே மிக உயர்ந்த வர்ணமாக கூறப்பட்டனர். அவர்களுக்கு அடுத்து சத்திரியர்களும், மூன்றாவதாக வைசியர்களும் கூறப்பட்டனர்.
இந்த மூன்று வர்ணங்களுக்கும் சேவை செய்பவர்களாக நான்காவது வர்ணமாக சூத்திரர்கள் கூறப்பட்டனர். நான்கு வர்ணங்களுக்கும் வெளியே அவர்ணர்களாக தீண்டப்படாதோர் வைக்கப்பட்டனர்.
சமஸ்கிருத மொழியைத் தொடர்ந்து பிராமணர்களே பயின்று வந்ததால், சமஸ்கிருத மொழி பேசுபவர்களே ஆரியர்கள் என அறியப்பட்டதால், இந்த மனு தர்மத்தை உருவாக்காத மாற்றுப் பண்பாடாக திராவிடர்களையும், அவர்கள் பண்பாட்டையும் கூற முடிந்தது.
திராவிட மொழிகளின் வேர்கள், அவற்றை பேசியவர்கள் இந்தியா முழுவதும் இருந்தார்கள் எனப்படுகிறது. அதேபோல சமஸ்கிருதம் பேசிய ஆரிய பிராமணர்களும் தென்னிந்தியாவில் குடியேறினார்கள். ஆரியர்களும், திராவிடர்களும் தனித்தனி மரபினங்களாக தொடர்ந்து வாழாவிட்டாலும், பல்வேறு பண்பாட்டு அம்சங்களில் வித்தியாசங்கள் நிலவியதால், குறிப்பாக வர்ண தர்மத்தை தமிழ் நூல்கள் முன்மொழியாததால் திராவிட பண்பாட்டை வர்ண தர்ம மறுப்பிற்கான மூலாதாரமாகக் கொள்வது சாத்தியமானது.
திராவிடவியம் உருவாகிய தருணம் என்ன?
காலனீய ஆட்சியில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்த வழிபாட்டு முறைகள், இறையியல் சிந்தனைகள் அனைத்தும் இந்து மதம் என்ற பொது அடையாளத்தில் தொகுக்கப்பட்டது. அவையனைத்தும் ஆரிய வேதங்களை மையமாகக் கொண்ட வைதீக சமயத்தின் கிளைகள், திரிபுகளாகக் கொள்ளப்பட்டன. உதாரணமாக தமிழ்நாட்டில் கடும் முரண்பாடுகளைக் கொண்டிருந்த சைவம், வைணவம், இரண்டிற்கும் தொடர்பற்ற நாட்டார் வழிபாடுகள் எல்லாமே இந்து மதமாக ஒரே அடையாளத்தில் கொண்டுவரப்பட்டது.
அவ்வாறான பொதுவான இந்து மத உருவாக்கத்தினூடாக, வர்ண தர்மமும் இந்துக்கள் அனைவருக்குமான தனி நபர் சட்டங்களுக்கு அடிப்படையாக ஆக்கப்பட்டது. இதன் காரணமாக பிராமணர்களின் சமூக மேலாதிக்கம் வலுப்பட்டது. அவர்கள் வர்ண தர்ம நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து சட்ட புத்தகங்களாக மாற வழி செய்தனர்.
வெகுகாலமாக கல்வியை தங்கள் வர்ணத்தின் உரிமையாக வைத்திருந்த பிராமணர்கள், காலனீய ஆட்சியில் அரசுத் துறையிலும், சட்டம், வர்த்தகம், கல்வி, மருத்துவம் ஆகிய பல்வேறு புதிய துறைகளிலும் பெருமளவில் பங்கேற்றனர். அது அரசியல், சமூகம், பொருளாதாரம் என பலவகையிலும் அவர்களது மேலாதிக்கத்தை அதிகரித்தது.
அதே சமயம் ஜாதீய சமூகமாக வடிவெடுத்திருந்த வர்ண தர்ம சிந்தனை பல்வேறு விலக்கங்களும், தடைகளும் நிரம்பிய படிநிலை சமூகமாக இந்திய சமூகத்தை மாற்றியிருந்தது. பிராமணர்கள் பல நிலைகளில் அனைத்து ஜாதியினரிடமும் விலக்கத்தை, தீண்டாமையை கடைப்பிடித்தனர். அதே போல சமூகத்தில் தங்கள் படிநிலையை உறுதி செய்துகொள்ள அனைத்து ஜாதிகளும் தீண்டாமை வடிவங்களைக் கைக்கொண்டன.
இந்த நிலையில்தான் திராவிட அடையாளத்தைப் பயன்படுத்தி திராவிடவிய கருத்தியல் மூலங்கள் பார்ப்பனீய சமூக அமைப்பிற்கு எதிரான அரசியலைக் கட்டமைக்கத் தொடங்கின. சமஸ்கிருதம் தமிழை விட உயர்ந்ததென்று கூறப்பட்டதால், பன்னெடுங்காலமாக தமிழிற்கும் சமஸ்கிருதத்திற்கும் இருந்த முரணும் திராவிடவிய சிந்தனைக்கு வலுச்சேர்த்தது. நவீன சைவ சிந்தனையும் வைதிக மரபுக்கு மாற்றானதாக தன்னைக் கட்டமைத்துக் கொண்டது.
காங்கிரஸ் கட்சி 1919-ம் ஆண்டு ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பின் காந்தியின் தலைமையில் வெகுமக்கள் இயக்கமாக தன்னை கட்டமைத்துக் கொண்டபோது அதில் இணைந்த பெரியார், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பரவலாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். வைக்கம் சத்தியாகிரகம், சேரன்மாதேவி குருகுல பிரச்சினை ஆகியவற்றினால் வர்ண பாகுபாடு, ஜாதீய ஏற்றத்தாழ்வு ஆகியவற்றின் ஊற்றான பார்ப்பனீய கருத்தியல் எதிர்ப்பினை முதன்மைப்படுத்த வேண்டியதை உணர்ந்தார். காங்கிரஸ் கட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஆதரிக்க முற்படாத நிலையில் 1925-ல் அதிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டார்.
வட இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள்
பெரியார் பார்ப்பனீய எதிர்ப்பினை வலியுறுத்தி சுயமரியாதை இயக்கம் கண்டதற்கு இணை நிகழ்வாக வட இந்தியாவில் இந்து மகா சபை, ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் ஆகியவை தோன்றின. இவை இந்திய அடையாளத்தை இந்து அடையாளமாகக் கட்டமைக்க விரும்பி, முஸ்லிம்களை விலக்க முனைந்தன.
இந்துஸ்தானி மொழியிலிருந்து உருது மொழி வழக்குகளை நீக்கி சமஸ்கிருதமயமான புதிய இந்தி மொழியை உருவாக்குவதற்கு முனைந்தவர்களுடன் இந்த இந்து அடையாளவாதமும் இணைந்தது. கீதையை புனித நூலாக்குவது, ராமனை இந்தியாவை ஒருமைப்படுத்திய அரசன் எனக் கட்டமைப்பது எனப் பல செயல்பாடுகளை இந்துத்துவ இயக்கங்கள் மேற்கொண்டன.
காங்கிரஸ் மத நல்லிணக்கம், பன்மைத்துவம் பேசினாலும் அதனால் பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கத்தை போதுமான அளவு எதிர்த்து நிற்க முடியவில்லை. குறிப்பாக மொழி என்று வந்தபோது இந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு அது இடம் கொடுத்தது. இந்தி மொழியில் நடந்த வந்த மாற்றங்கள், அதன் கருத்தியல் பின்புலம் ஆகியவற்றை எதிர்கொள்ளாமல் இந்தி மொழியை தேசிய மொழியாக்க நினைத்தது.
இந்தச் சூழலில்தான் 1937-ம் ஆண்டு புதிய இந்திய அரசுச் சட்டத்தின்படி சுயாட்சி உரிமைகள் கொண்ட மாகாண அரசுகளுக்கான தேர்தலில் பங்கெடுத்து, மதறாஸ் மாகாணத்திலும் ஆட்சி அமைத்த காங்கிரஸ் தமிழ்நாட்டு பள்ளிகளில் கட்டாய இந்திக் கல்வியை அறிமுகப்படுத்தியது. அதுவரை நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த திராவிடவிய சிந்தனை பெருநெருப்பாக மாறியது.
வட இந்தியாவில் உருவான “இந்து-இந்தி-இந்தியா” என்ற முழக்கமே முஸ்லிம்கள் தனிநாடு கேட்பதற்கும், திராவிடவியம் திராவிட நாடு என்ற தனி கூட்டாட்சிக் குடியரசுக்கான கோரிக்கையை வடிவமைக்கவும் காரணமானது. முஸ்லிக் லீக் மத அடையாள தேசியவாதமாக மாறி பாகிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்திப் பெற்றது.
திராவிடவியம் அப்படி அடையாளவாத தேசியம் பேசாமல், முரணரசியலை அனுமதிக்கும் கூட்டாட்சிய சிந்தனையை முன்னெடுத்தது; முரணரசியலையும், மக்கள் நல அரசையும், உள்ளடக்கிய வளர்ச்சியையும் சாதித்து மாநில சுயாட்சியை வலியுறுத்தி நிற்கிறது. அது மிகச் சரியான தேர்வு என்பதையே உலக வரலாறு நிரூபிக்கிறது.
திராவிடவியத்தின் மேன்மை Dravidianism is a Federalism of Varna dharma denial
திராவிடவியம் இனவாதமல்ல. பிராமணர்களும், சூத்திரர்களும் திருமணம் செய்து கொண்டால் சட்டப்படி செல்லாது என்று கூறியதுதான் ஆரிய இனவாதம். சென்னை உயர்நீதிமன்றம் 1941-ம் ஆண்டு இப்படி ஒரு தீர்ப்பை வர்ண தர்ம சாத்திரங்கள் அடிப்படையில் வழங்கியது என்பதை மறந்துவிடக் கூடாது.
அதனை மறுத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ நெறியை வலியுறுத்தியதே திராவிடவியம். தமிழ் பண்பாட்டிற்கான சுயாட்சி உரிமைகளை ஆரியம் களைந்த சமூக மாண்பினை கூட்டாட்சியத்தின் மூலம் வலியுறுத்துவதே திராவிடவியம். இது தேசியத்தை விட முற்போக்கானது; அனைத்து மக்களின் உரிமைகளையும் முரணரசியல் மூலம் காக்கவல்லது.
இன்று உலக முதலீட்டிய வலைப்பின்னல் முதலீட்டிய திரட்சியை தேசிய அரசுகள் மூலமாகவே ஒவ்வொரு தேசத்திலும் நடத்துகிறது. அது அடையாளவாதத்தையும், ராணுவவாதத்தையும் வளர்த்து எதேச்சதிகாரிகளையும், வன்முறையையும் பெருக்குகிறது.
உலக பொருளாதார, ராணுவ வல்லரசான அமெரிக்காவிலேயே இன அடையாளவாத தேசியம் வலுப்பெற்று வருவது மக்களாட்சி முரணரசியல் விழுமியங்களை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. பெரும்பான்மை அடையாளவாதம் குடியரசு விழுமியங்களை, கூட்டாட்சியத்தை, சோஷலிசத்தை அழிக்க முற்படுகிறது.
இந்த நிலையில் சமநீதி கொண்ட சமூகத்தை உருவாக்க முரணரசியலை அனுமதிக்கும் கூட்டாட்சியம் உதவுமா, அல்லது தேசியம் உதவுமா என்று சிந்தித்துப் பார்ப்பது முற்போக்காளர்களது கடமை. அப்படிச் சிந்திக்கும்போதுதான் வர்ண தர்ம எதிர்ப்பு கூட்டாட்சியமாக திராவிடவியத்தைப் புரிந்துகொண்டு உயர்த்திப் பிடிக்க முடியும்.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரண்களை முடக்குவது பாசிசம், முரணரசியலே மக்களாட்சி!
கட்சிக்குத் தலைவர் அமைந்தால் பாயசம், தலைவரே கட்சி என்றால் பாசிசம்!
ஆரியம் ஏன் இன்று “தமிழ் வேண்டும், திராவிடம் வேண்டாம்” என்று சொல்கிறது?
வெறுப்பேத்துறான் மை லார்ட் : அப்டேட் குமாரு
தருமபுரியில் போட்டியிடுகிறாரா விஜய்? : கட்சி கூட்டத்தில் அறிவித்த தவெக நிர்வாகி!
‘கள்’ இறக்கும் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு!
Dravidianism is a Federalism of Varna dharma denial