திராவிடக் கச்சேரி !

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஸ்ரீராம் சர்மா

கவர்னர் என்றால் அதற்கென ஒரு மரியாதை உண்டு.

ஆட்டுக்கு தாடி போல எனச் சிறுநகையாடினாலும் அண்ணா, கலைஞர், இன்றைய முதல்வர் உட்பட திராவிடத் தலைவர்கள் எவரொருவரும் ஆளுநர் எனுமந்தப் பதவியை எந்த நாளிலும் மறுதலித்ததில்லை. அவமதித்ததில்லை.

கோதர்தாஸ் காளிதாஸ் ஷா எனும் புகழுடைய ஆளுனர் ஒருவர் தமிழ்நாட்டில் இருந்தார். கே. கே. ஷா என அவரை அன்பொடு சுருக்கி அழைப்பர். 1971 முதல் ஜூன் 76 வரை தமிழகத்தின் கவர்னராக செயலாற்றிய பெருமகனார் அவர்.

இந்திய விடுதலை வீரராக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றிய மேதகு கே.கே ஷா – ஒன்றியத்தால் நியமிக்கப்பட்டவர்தான் எனினும் அன்றைய முதல்வரான கலைஞருக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தார்.

அது, எமர்ஜென்ஸி காலம். சுதந்திர பூமி நர வேட்டை கண்டதொரு கொடுங் காலம். முதல்வராக இருந்தும் அதனை எதிர்த்துப் போராடினார் கலைஞர். அப்போதும் அவர் பக்கம்தான் நின்றார் கே.கே ஷா.

அவருக்கு புரிந்திருந்தது.

ஆட்சி பறிபோகும் என்றாலும் தன்னை நம்பியிருக்கும் தமிழின மக்களின் எதிர்கால நலனைக் கருதியே ஆளும் மத்திய அரசை எதிர்த்து நிற்கிறார் இந்த முதலமைச்சர். இன்றிந்த நேரத்தில் இவரோடு நிற்பதுதான் நியாயம் என்றே துணிந்து நின்றார்!

இன்றைய கவர்னருக்கு அந்த ஈர வரலாறு தெரிந்திருக்குமா? தெரியவில்லை.

***

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது இரண்டாண்டுக் கால நல்லாட்சியின் முடிவில் தன்னை நம்பி வாக்களித்த பொதுமக்களை ஒன்று திரட்டி மேடையேறி முழங்கினார்.

நல்லதிகாரிகளின் குறிப்புச் சீட்டுகளைக் கடந்து – கனகனவெனும் மனப் போக்கொடு ஆர்த்து முழங்கினார். அவரது அந்த நயத்தகு உரைவீச்சு உலகளாவிய தமிழர்களை ஈர்த்தது ! உள்ளம் நெகிழச் செய்தது !

ஆம், முந்தையரின் ஆட்சியில் அன்னைத் தமிழகத்தில் கிஞ்சித்தும் காணக் கிடைக்காததொரு தன்மானக் காட்சி அது.

அந்த மேடையில்…

“ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் செய்து காட்டியிருக்கிறோம். அதனை பல்லவ மன்னர்கள் உலவிய மண்ணிருந்து நெஞ்சு நிமிர்த்தி கம்பீரமாக சொல்கிறேன்” என்றார் !

அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் கூர்ந்து கவனிக்கத்தக்கன.

சோழ மண் கடந்து சேர, பாண்டிய, பல்லவ மண்ணுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய மண்ணுக்கும் நான் உரியவனாவேன். என்னை நம்பி நிற்பவர் எவரானாலும் அவர்களை கையேந்தியும் காப்பாற்றி வைப்பேன். எனது நல்லாட்சியை தடுப்பவர் எவராக இருந்தாலும் அவர்களை மக்களிடம் அம்பலப்படுத்துவேன் என்பதுதான் ஆழங்காற்பட்ட அவரது அரசியல் குரலாக இருந்தது !

மேலுமவர் பேசுகையில்…

“பாழடைந்த தமிழகக்தின் நிதிநிலையினை சீர்படுத்தி – சட்டம் ஒழுங்கினை  நிலை நிறுத்தி – தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக ஆக்கியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் ! இந்த நல்லாட்சியினை எதிர்க்கட்சிகள் குறை சொல்லலாம். அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.  

ஆனால், அரசாங்கத்தின் அங்கமாக இருக்க வேண்டிய ஆளுநர் அவ்வாறு செயல்படலாமா? அவரது நோக்கம்தான் என்ன?” என வேதனை சுமந்த கேள்வியினை எழுப்பி நின்றார்.

“ஆளுநர், என்னைக் குறித்து சொல்லும்போது முதலமைச்சர் எனது நல்ல நண்பர் என்கிறார். நட்பு பாராட்டுவதில் நானும் குறைந்தவன் அல்லன்.  அதில் இம்மியளவும் விலகிட மாட்டேன். அதற்காக கொண்ட கொள்கையை என்றும் விட்டுக் கொடுத்துவிடவும் மாட்டேன்” என்றார்.

எல்லோரையும் அரவணைத்து ஆள விழையும் மு.க. ஸ்டாலின் எனும் அந்த நல்லோன், தனக்குக் கிட்டிய நட்பை விட்டகன்றகன்று நிற்பதாக சொல்ல வைத்தது யார் ? எது ? ஏன் ?

கவனிப்போம் !

***

மண்ணாளும் அரசியலில் கட்சிக்கு கட்சி கொண்ட கொள்கைகள் வேறுபடும். ஆள்வோருக்கான தத்துவங்கள் மாறுபடும். மக்களிடம் அதனைக் கொண்டு சேர்க்கும் வழிமுறைகளோ  நூறுபடும்.

ஆயினும், மொத்தமும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே அமைந்தாக வேண்டும். அதுதான் இந்திய ஜனநாயகத்தின் ஜனன ஜாதகத்துக்கான மூல விதி.

அன்றந்த நாளில் ஜனநாயக ஜாதகத்துக்கான லக்கின கோணத்தை நிர்ணயித்தவர் – அரசியலமைப்பு சட்டவரைவுக் குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த மகா ஞானப் பண்டிதராம் பாபா சாகேப் அம்பேத்கர்.

அவர் வகுத்த அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது ?

Governors exist in the states, while lieutenant governors exist in union territories including the National Capital Region (NCR) of Delhi. The governor acts as the nominal head whereas the real power lies with the chief ministers of the states and his or her councils of ministers.

அதாவது, என்னதான் ஆளுநர் என்பவர் மாநிலத்தின் தலைமையாளர் என்றாலும், உண்மையில் ஒட்டுமொத்த ஆட்சி உரிமையும் மாநிலத்தின் முதலமைச்சர் பாற்பட்டதே என்கிறது அரசியலமைப்பு சட்டம்.   

இன்றைய ஆளுநரோ தன்னை வானளாவியவராக எண்ணிக் கொண்டு எல்லை மீறி வல்லாடுகிறார். எடுத்ததொரு முடிவில் உறுதியாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. மனம்போன போக்கில் எடுப்பேன் கவிழ்ப்பேன் என்கிறார்.

***

Dravidian model Sriram Sharma about Tamilnadu Governor

தமிழ் மண்ணை சூறையாடும் ஆன் லைன் சூதாட்ட தடை மசோதா !

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி – மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் அது நிறைவேற்றப்பட – அதை  பற்பல மாதங்கள் கழித்து திருப்பி அனுப்பிய ஆளுநர் – அப்படி இப்படியென அழைக்கழித்த பின் ஓராண்டு கழித்து – திடீரென அதற்கு ஒப்புதல் அளித்து ஓய்ந்தார்.

இடைப்பட்ட காலத்தில் தற்கொலை செய்து அம்போவெனப் போன 47 உயிர்களுக்கு யார் பதில் சொல்வது ? தப்பாட்டமாடிய கவர்னரின் விவரமற்ற ஒழுங்கீனமே அதற்கான காரணியென வெகுஜனம் தூற்றினாலதை மறுக்க முடியுமா ? வெகு ஜனப் பகை கொள்ளவா கவர்னராக வந்தார் இங்கே ?  

***

Dravidian model Sriram Sharma about Tamilnadu Governor

அப்படியாகத்தான் சமீபத்தில் சிதம்பர தீட்சிதர்களுக்கு பரிந்து நிற்பதாய் எண்ணிக் கொண்டு அபாண்டமானதொரு குற்றச்சாட்டை வீசி விட்டார் மேதகு கவர்னர். 

சிதம்பரத்தில் குழந்தைத் திருமணம் நடக்கவேயில்லை என்றும், இருவிரல் பரிசோதனை நடந்ததாகவும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை அள்ளி வீசினார். தமிழ்நாட்டின் டிஜிபி அதனைத் தக்க ஆதாரங்களோடு மறுத்தார்.

சிதம்பர தீட்சிதர்களோடு எனக்கு நல்ல நட்பு உண்டு. பூலோக கயிலாயமாம் சிதம்பரக் கோயிலின் கோபுர உச்சியில் எனது தந்தையாருக்காக மோட்ச தீபம் ஏற்ற விழைந்தபோது – கோபுர உச்சிக்கு செல்ல உதவிய தீட்சித நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டேன்.

பொய் சொல்லத் தெரியாத அந்த தீட்சிதர் எங்களுக்குள் பால்ய விவாகம் நடப்பது உண்மைதான் என ஒப்புக் கொண்டார். கூடவே சொன்னார்…

“சிவபெருமானை குருவாகக் கொண்ட எங்களுக்கு ஆதியில் மூவாயிரம் அந்தணர்கள் எனப் பெயர் இருந்தது. அது, பற்பல ஆக்கிரமிப்புகளால் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு இன்று ஏறத்தாழ 500 குடும்பங்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றது.

மாசுபட வளர்ந்துவிட்ட தொழில் நுட்பங்களால் – பெண் குழந்தைகளின் மனம் பாதிக்கப்பட்டு விட்டால் – பருவக் கோளாறால் வழிமாறிப் போய்விட்டால் இருப்பதும் அழிந்து விடுமே ? அதன்பிறகு கோயில் முறைகளை யார் காப்பது என்னும் அச்சத்தின் பாற்பட்டே நாங்கள் பால்ய விவாகம் செய்கிறோம். சொல்லுங்கள், அதில் தவறேதும் உண்டா ?”

அவரது குரலில் இருந்த பதட்டத்தை உள்வாங்கிக் கொண்டபடி மெல்ல எடுத்துச் சொன்னேன்…

“ஐயா, உங்கள் நியாயம் எனக்குப் புரிகிறது. ஆனால் சட்டம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா ? யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டாக வேண்டும் அல்லவா ?

கேளுங்கள் தீட்சிதரே, பால்மணம் மாறாத சின்னஞ் சிறு குழந்தை ஒன்று தாலியோடும் – மெட்டியோடும் – பால் சொம்போடும் நிற்பதைக் கண்டால் நாகரீக உலகம் பதை பதைத்துப் போகாதா ?

அந்தச் சிறுமியின் குழந்தைப் பருவத்தை திருடிக் கொள்வது மகா பாவம் அல்லவா? கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றாற்போல் நம்மை நாம்  தகவமைத்துக் கொள்ள வேண்டாமா? பஞ்ச சபையாளும் நடராசப் பெருமானுக்கு பூசை புரியும் ஞானம் படைத்த நீங்களே சட்டத்தை மீறலாமா ?

சைவப் பெரியோர்களான நால்வரும் – பிரபந்தமும் தொழுதேற்றி நின்ற இறைவனுக்கு அருகில் நிற்கும் உங்களுக்கு எளியவன் நான் எடுத்துச் சொல்லவும் வேண்டுமா?

கடவுளுக்கு அருகில் நிற்பவர்கள் என்பதால் அவர்களுக்கு மட்டும் தனிச் சலுகை அளிப்பீர்களா எனக் கேட்டால் இந்த அரசாங்கத்தால் பதில் சொல்லத் தான் முடியுமா? உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை நீங்களே தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி வைக்கலாமா ?

இது ஒன்றும் புதிதல்ல தீட்சிதரே ! யூத இனத்திலும் பார்ஸி இனத்திலும் கூட இப்படியானதொரு முறை இன்றும் இருக்கிறது. ஆனால் அவர்கள் அதனை திருமணமாக செய்வதில்லை. தங்களுக்குள் ஒரு ஏற்பாடாக செய்து கொள்கிறார்கள்.

நீங்களும் அப்படியானதொரு ஏற்பாட்டை உங்களுக்குள் செய்து கொள்ளலாமே ! ‘தில்லைப் பெண் எல்லை தாண்ட மாட்டாள்’ என்னும் உங்கள் பழமொழியை முறையான வழியில் பாதுகாத்துக் கொள்ளலாமே ! சட்டத்தை மீறினால் சங்கடம்தானே மிச்சம்.  சொல்லுங்கள், எளியவன்  சொல்வதில் தவறேதும் உண்டா ?”

எதிர் முனையில் ஆழமான மௌனத்தோடு கேட்டுக் கொண்டிருந்த அந்த தீட்சித நண்பர் பெருமூச்செடுத்தபடி…

“ஆம், நீங்கள் சொல்வது புரிகிறது. எங்கள் சமூகத்துப் பெரியவர்களிடம்  இது குறித்து பேசுகிறேன். நன்றி “ என்றவர் லைனை நான் கட் செய்யும் வரையில் காத்திருந்தார். அவர் பாணியிலேயே ‘நடராஜர் இஷ்டம்’ என்றபடி பணிந்து லைனை கட் செய்து கொண்டேன்.

இப்படியாக பேசியிருக்க வேண்டிய ஆளுநர் தப்புடுக்கை அடித்தது ஏன் என்னும் கேள்வி நிச்சயம் அந்த தீட்சிதர் மனதில் எழுந்திருக்கும்.

***

Dravidian model Sriram Sharma about Tamilnadu Governor

அடுத்த கந்தாயத்துக்குப் போவோம்.

மரியாதைக்குரிய மேதகு ஆளுநர் சொல்கிறார் திராவிட மாடல் என்பது  காலாவதியான கொள்கையாம்.

உத்திரத்தைப் பார்த்து கலகலவென சிரித்துக் கொண்டேன்.

ஐயா, காலாவதியாக இது என்ன அலோபதி மருந்தா ? பண்பட்டெழுந்த சித்த மருந்தல்லவா? தப்பாட்டம் ஆடி எங்களை நாங்களே அழித்துக் கொண்டால் தான் உண்டு.  வேறெவராலும் எங்களை அழிக்க முடியாது.

குறித்துக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் நசுப்பாட்டம் ஆடிக் கொண்டே இருந்தால் திராவிடக் கொள்கையானது மேலும் வலுப்படத்தான் செய்யும்.

ஒரு சித்தாந்தத்தை எதிர்க்க மறு சித்தாந்தத்தைத் தான் முன் வைக்க வேண்டுமே தவிர அதை விடுத்து இப்படிக் கலக டமாரம் அடிப்பதால் பலனேதும் கிடைத்துவிடாது.

ஐயா, நீங்கள் ஆகச் சிறந்ததொரு விமான பைலட்டாக இருக்கலாம். கேப்டன் பைலட்டாக கூட இருக்கலாம்.

ஆனால், சௌகார்ப்பேட்டையின் குறுகலான சந்தில் மீன்பாடி வண்டியை செலுத்தும் வேலையை உங்களிடம் கொடுத்தால் இப்படித் தான் கண்ட இடத்தில் இடிபட்டு ஊர் மக்களின் வசவை வாங்கிக் கட்டிக் கொள்ள நேரும்.

உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. அரசியல் பழகாத ஒரு அதிகாரியை அறிவில் முதிர்ந்த தமிழ்நாட்டுக்கு ஆளுநராக அனுப்பி வைத்த ஒன்றியப் பெருமக்கள்தான் அதனை உணர வேண்டும். உணர்ந்தால் நலம் !

***

குட்டிக் கதை ஒன்றை சொல்லி முடிக்கிறேன்.

புகழான அந்த ஊரில் மிகப் பிரபலமான பாடகர் அவர். பெயர் சொல்லித்தான் ஆக வேண்டுமென்றால் திருவாரூர் சித்தரஞ்ச பாகவதர் என்று வைத்துக் கொள்ளலாம்.

விஸ்தாரமாக அவர் பாடும் மோகன கல்யாணி ராகத்தைக் கேட்க கூட்டமாக வந்து நின்றார்கள் மக்கள். ஹவுஸ் ஃபுல் !

அந்த கச்சேரிக்கு முன் அனுபவற்ற மைக் செட்காரர் ஒருவரை அவசரத்தில் நியமித்து விட்டார் அந்த வட நாட்டு சபா செகரட்டரி.

மைக் செட் காரரின் வேலை என்ன ? பாடகர் பாடும் ராகத்தை பிசிறில்லாமல் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதானே ? அதை மட்டும் செய்தாரா என்றால் இல்லை.

பாடகருக்கு கிடைக்கும் கைத்தட்டலைக் கண்டு பொறாமை கொண்ட அந்த மைக் செட்காரர் தானும் கூட சேர்ந்து பாடினால் என்ன என்னும் கோரமான முடிவொன்றை எடுத்தார். அவருக்கோ பாட வராது. குயுக்தியோடு ஒரு திட்டம் வகுத்தார்.

தன் எதிரே இருக்கும் ‘சவுண்ட் மிக்ஸர் போர்டை’ வெறித்துப் பார்த்தவர் அதிலிருக்கும் இருக்கும் குமிழி ஒன்றை தன் மனம் போன போக்கில் அவ்வப்போது இடவலமாக மாறி மாறி திருகலானார்.

மைக்கில் அது, “க்கூய்க்… க்கூய்க்…” என நாராசக் கூச்சலெழுப்பும்.

அதுதான் தான் பாடும் பாடல் என மேனி குலுங்க குஷித்துக் கொண்டார். கூடவே, பாடகரின் கவனத்தை கலைத்த பரமானந்தம் வேறு அந்த மைக் செட் காரருக்கு.

பாடகரோ சளைத்தவரில்லை. மாபெரும் அனுபவசாலியான அவர், அந்த “க்கூய்க்… க்கூய்க்…” சப்தத்தையே பஞ்சம ஸ்ருதியாகக் கொண்டு தொடர்ந்து பாடலானார்.

பொறுமையான புத்திசாலித்தனமான தனது அணுகுமுறையின் வழியே தன்னை நம்பி வந்த மக்களை மேலும் மேலும் கவர்ந்து கொண்டே இருந்தார்.

மக்கள்தான் சலித்துக் கொண்டார்கள்.

“ச்சீச்சீ… பொல்லாங்கான ஒரு மைக் செட்காரரை வைத்து அற்புதமான இந்தக் கச்சேரியை இப்படிக் கெடுக்கிறாரே அந்த சபா செகரட்டரி” என வசை மாறி பொழிந்தார்கள்.

போகட்டும். இது காலைக் கச்சேரிதான். தொடர்ந்து மதியக் கச்சேரி உண்டு. அது கடந்து இரவுக் கச்சேரியும் உண்டு.

மைக் செட்காரர் மாற்றப்பட்டு விடுவார்.

ஆனால், கச்சேரி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

புரிந்தால் சுபம்.

புரியாவிட்டால் லாபம் !

கட்டுரையாளர் குறிப்பு:

Dravidian model Sriram Sharma about Tamilnadu Governor

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

அதி தீவிர புயலாக வலுவடைந்தது மோக்கா புயல்!

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவும் கல்லூரிகள்!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

2 thoughts on “திராவிடக் கச்சேரி !

 1. எப்பேர்பட்ட கட்டுரையாளர்..முதல் நாலுவரியில் ஸ்ரீராம் சர்மா தான் உணர்வு உள்ளத்தை மீட்டி விடுகிறது..
  இருந்தாலும் இவருக்கும் ஒன்றியமாம் 😀
  தேச பிதா வேற, தேசத்தில் தமிழர் அடையாளம் வேற..அவர் சமணரா,ஐயரா திராவடியா, இல்ல தமிழரா இதுவா முக்கியம் இல்லாமல் ஒரு வள்ளுவர் முகத்தை உலகெலாம் பரிட்சையமாக்கிய ஷர்மா குடும்பத்துக்கும் வயிறு ஒன்று தானே!
  கிட்னியை விற்று கணவரை அல்லது மனைவியை காப்பாற்றும் இந்த உலகத்தில் தான் எழுத்தை வைத்து வயிறை வளர்த்த எத்தனையோ ஜாம்பவான்களை பார்த்த தமிழ்நாடு இது….பாரதியும், ஏங்கெலும்,
  புலமைபித்தனும்,தி.ஜாவும் விடவையா
  தேசம் என்பது எதனில் எதுவுள்ளில் எதனால் என சொல்லாமலா செத்தார்கள்..
  வயிறு வளர்க்க பேனா கலீஞர்கு உதவியது போல! இந்த குடும்பத்திற்கும் உதவட்டும்..
  வருங்காலம் இளைஞர்கள் காலம்..எத்தனை படங்கள் இளமையாக நீங்க மாற்றி வைத்து புரொ இன்பார்ம் கொடுத்தாலும்….
  சந்தனத்தில் கலந்த ஆஸ்பத்திரி சாக்கடை தான் நீங்க சார்..வாழ்த்துகள் வணக்கம் சார்.. 😡

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *