திராவிட மாடல் என்பது வெறும் செய்தி அரசியல் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் நேற்று (08/07/2022) இரவு நடந்த இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் கூட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது, முஸ்லீம்கள் குறித்தான ஆர்எஸ்எஸின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதில் அளித்த சீமான், “அவர்கள் முஸ்லிம் வேண்டாம் என்றால் நாங்கள் ஆரியப் பிரமாணர்களே இல்லாத நாட்டை உருவாக்குவோம். காஷ்மீரில் இருக்கும் இஸ்லாமியரை இந்தியாவிற்கு வா என்கிறார்கள். இங்குள்ள இஸ்லாமியர்களைப் பாகிஸ்தானுக்கு போ என்கிறார்கள். ஆர்எஸ்எஸ் இந்திய விடுதலைக்குப் போராடினார்களா?. போராடாமலேயே சாவர்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார். ஆனால் இன்றைக்குப் பாகிஸ்தான், பங்களாதேஷில் இருக்கும் மக்கள் இந்திய விடுதலைக்காக போராடினார்கள். இவர்கள் பாகிஸ்தான் பங்களாதேஷ் வீரர்கள் வேண்டாம் என்கிறார்கள். ஆனால் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளையர்களை விளையாட அனுமதிக்கிறார்கள். இதை வைத்துத்தான் அரசியல் நடக்கிறது. பாகிஸ்தான், பசுமாடு, ஜெய்ஸ்ரீ ராம் தவிர பாஜகவிற்கு வேறு எந்த கொள்கை, கோட்பாடும் தெரியாது” என்று விமர்சித்தார்.
மேலும் திராவிட மாடல் குறித்து பேசுகையில், ”திராவிட மாடல் என்பது செயல் அரசியலோ, சேவை அரசியலோ கிடையாது. அது வெறும் செய்தி அரசியல். இதைத்தான் அவர்கள் அரை நூற்றாண்டு காலமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சொன்னதைச் செய்வதில்லை. ஆனால் கொள்ளை அடிப்பதைச் சொல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.” என்று சீமான் பேசினார்
– கிறிஸ்டோபர் ஜெமா