திராவிட வரலாற்று மறுமலர்ச்சி நாயகர் மு.க.ஸ்டாலின்
ராஜன் குறை
தனது எழுபதாவது அகவையை மார்ச் மாதம் முதல் நாள் நிறைவு செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட வரலாற்றின் மறுமலர்ச்சி நாயகராகக் காட்சி தருகிறார் என்றால் மிகையாகாது.
இந்திய வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் இந்தியாவை திராவிட இந்தியாவாக வடிவமைப்பதில் முன்னணி பங்கு வகிக்கும் தலைவராக வடிவெடுத்திருக்கும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதிலும், ஆதரவைக் கூறுவதிலும் தமிழ் மக்களுடன் இணைகிறேன்.
அவருடைய வரலாற்றுப் பங்களிப்பு தமிழ்நாட்டு எல்லைகளைக் கடந்து, இந்திய அளவிலானது என்பதைத் தெளிவாக்கும் விதமாகவே அவருடைய பிறந்த நாள் அமைகிறது.
இந்தியாவின் அரசியல் வரலாற்றுத் தருணம்
இந்தியாவின் நீண்ட கால வரலாற்றை ஆராய்பவர்கள் ஒரு முக்கிய அம்சத்தைக் காணலாம். அது என்னவென்றால் ஆரியம் என்று அழைக்கப்படும் சமஸ்கிருத, பார்ப்பனீய கருத்தியலுக்கும், அதற்கு மாற்றான வெகுஜன வாழ்வியல் நெறிகளின், சிரமண மதங்களின், அதாவது பெளத்த, ஜைன, அஜீவக மதங்களின் கருத்தியல்களுக்கும் உள்ள முரண் என்பதே அந்த முக்கிய அம்சம்.
ஆரிய பார்ப்பனீய கருத்தியல் என்பது ஒரு பிரமிட் வடிவத்தில் சமூக படி நிலையைக் கட்டமைப்பது. அதன் உச்சியில் பிராமணர்கள், அடுத்து சத்திரியர்கள், அடுத்து வைசியர்கள், அதற்கெல்லாம் அடித்தளமாக பெருமளவிலான விவசாயிகளான, உழைப்பாளர்களான சூத்திரர்கள், அவர்களுக்கும் கீழே அவர்ணர்கள் அல்லது பஞ்சமர்கள், விலக்கப்பட்ட ஆதிவாசிகள் என்பதே இந்த பிரமிட் வடிவிலான சமூக, அரசியல் அதிகாரக் கட்டமைப்பு.
இதற்கு மாற்றான வாழ்க்கை முறைகள், சிந்தனை முறைகளில் பண்டைய திராவிடமும் ஒன்றாக இருந்துள்ளது. தமிழ் மொழியின் தொல் இலக்கியங்களில் வெளிப்படும் கூற்றுக்கள் சமத்துவ சிந்தனைகளை வலியுறுத்துவையாக உள்ளன. தமிழகத்தில் புத்த, ஜைன மதங்களும் செல்வாக்குடன் விளங்கியுள்ளன.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவம், பிறப்பிலேயே வர்ணத்தைத் தீர்மானிக்கும் ஆரிய வாழ்முறைக்கு எதிரான குரலாகவே அமைகிறது. அதனால் இந்தியா முழுவதிலும் ஆரிய சமூக அமைப்பை, அதற்கான கருத்தியலை ஏற்காதவர்களை திராவிட இந்தியர்கள் என்றழைப்பதில் தவறில்லை.
அதாவது ஆரியத்துக்கு மாற்றான கருத்தியல் அடிப்படையில் அமையக் கூடியது திராவிட இந்தியா. புவியியல் அடிப்படையில் திராவிட மொழிகளைப் பேசும் தென்னிந்தியாவை திராவிட இந்தியா என்று அழைத்தாலும், கருத்தியல் அடிப்படையில் மொத்த இந்தியாவும் திராவிட இந்தியாவாக, வர்ண தர்மத்தை, பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை மறுத்த இந்தியாவாக உருவாவது மக்களாட்சியை மேன்மையுறச் செய்ய அவசியமானது.
வர்ண தர்ம சிந்தனைக்கும், சமத்துவ சிந்தனைக்குமான முரணே இன்று மக்களாட்சி அரசியலில் கூர்மையடைந்துள்ளது. ராஷ்டிரிய சுயம்சேவக் சங் என்னும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினால் வழி நடத்தப்படும் பாரதீய ஜனதா கட்சி வெளிப்படையாகவே சனாதன தர்மம் எனப்படும் வர்ண தர்மத்தை ஆதரித்து பேசி, பரப்பி வருகிறது.
பொருளாதார வளர்ச்சி, தேச பக்தி என்பதையெல்லாம் தங்களது முக்கிய அரசியலாக அவர்கள் பேசினாலும் அவர்களது இந்துத்துவ அடையாளவாத கருத்தியல் வர்ண தர்மம் இல்லாமல் இயங்க முடியாது. இந்த உண்மையைத்தான் தனது “ஆரிய மாயை” நூலிலே தெளிவுபடுத்தினார் அறிஞர் அண்ணா.
பாஜக கட்சியின் வர்ண தர்ம ஆதரவாலேயே பார்ப்பன வகுப்பினரில் பிற்போக்காளர்கள் பலரால் அந்தக் கட்சி தமிழகத்தில் தீவிரமாக ஆதரிக்கப்படுவதைக் காண முடிகிறது. இவர்களில் பலர் வெளிப்படையாகவே ஜாதீய சிந்தனையை இன்று பொதுவெளியில் பேசுகிறார்கள். அவை காணொலியாக சமூக ஊடகங்களில் பரவுகின்றன.
அதற்கு எதிர்வினையாக இன்று இளைஞர்களிடையே, பொது மக்களிடையே திராவிட இயக்க மறுமலர்ச்சி ஒன்று உருவாகி வருகிறது. அந்த மறுமலர்ச்சியின் நாயகராகவே மு.க.ஸ்டாலின் காட்சி தருகிறார். அதற்கான காரணங்களாக மூன்று அம்சங்களை சொல்ல வேண்டும். கொள்கை பிடிப்பு, அயரா உழைப்பு, ஆட்சியின் சிறப்பு ஆகிய மூன்றுமே அவரை இன்று வரலாற்று நாயகராக மாற்றியுள்ளன.
![Dravidian Model Historical Hero MKStalin](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/hxM1nZlY-image-1024x768.jpg)
கொள்கை பிடிப்பு
கலைஞர் மறைவுக்குப்பின் 2018ஆம் ஆண்டு கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, மத்தியில் ஆளும் பாஜக ஆதரவுடன் தமிழ் நாட்டில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். அந்த நிலையில் ஸ்டாலின் பாஜக-வுடன் அணுக்கம் காட்டி, பழனிசாமி ஆட்சியைக் கவிழ்ப்பாரா என்றெல்லாம் சில குறுக்குப் புத்திக்காரர்கள் யூகங்களைப் பேசினார்கள். ஆனால் அவர்கள் வாய்களை அடைக்கும்படி, அவர் தலைவராகப் பொறுப்பேற்ற தருணத்திலேயே மதவாத அரசியலுடன் எந்த சமரசமும் கிடையாது என்பதை உறுதிப்படத் தெரிவித்தார்.
அன்றிலிருந்து எள்ளளவும் மாற்றமின்றி திராவிட இயக்கத்தின் அடிப்படை தத்துவங்களை தாங்கிப் பிடிப்பவராக, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் பயணம் செய்த நூறாண்டு கண்ட வரலாற்றுப் பாதையில் தொடர்பவராக, மாநில சுயாட்சியை அடிப்படையாகக் கொண்ட திராவிட இந்தியா என்ற லட்சியத்தை நோக்கி உறுதிப்படக் கட்சியை வழி நடத்துபவராக விளங்குகிறார்.
உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி தலைவராக்கி புது ரத்தம் பாய்ச்சியதுடன், தமிழ்நாடெங்கும் பயிற்சி வகுப்புகள், பாசறைகள் எனக் கட்சியின் கருத்தியல் விழிப்புணர்வை மேம்படுத்தும் பணிகளை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்தக் கருத்தியல் தெளிவின் அடிப்படையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திமுக அடங்கிய முற்போக்குக் கூட்டணியை மிக உறுதியான கொள்கைக் கூட்டணியாக வடிவமைத்துள்ளார். தான் கட்சிப் பொறுப்பேற்ற மறு ஆண்டிலேயே நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்தார்.
மாநிலத்தில் அ.இ.அ.தி.மு.க, ஒன்றியத்தில் பாஜக என்ற இரண்டு ஆளும் கட்சிகளின் அதிகார பலத்தை, பணபலத்தை முறியடித்து முப்பத்தொன்பது தொகுதிகளில் முப்பத்தெட்டில் வெற்றியை ஈட்டியது சாதாரணமான சாதனையல்ல. துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டில் ஏற்பட்ட விழிப்புணர்வு வட மாநிலங்களில் ஏற்படாததால், பாஜக மீண்டும் ஒன்றிய அரசில் ஆட்சிக் கட்டிலில் ஏறியது.
இருப்பினும் தமிழில் உறுதிமொழியேற்ற தருணத்திலிருந்து முப்பத்தெட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் இந்திய ஒன்றியத்தை தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்வதாக அமைந்துள்ளதைக் காண முடிகிறது. அந்த திசையில் உறுதிப்பட உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்.
அயரா உழைப்பு!
நாடாளுமன்றத் தேர்தலில் ஈட்டிய வெற்றி என்பது எளிதில் கிடைத்ததாகக் கருத முடியாது. தேர்தல் பிரச்சாரம் என்று வந்தால் பம்பரமாகச் சுற்றிச் சூழலும் தி.மு.க பாரம்பர்யத்தில் உருவானவர் ஸ்டாலின். கலைஞரைப் போலவே அயராத சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதில் வல்லவர்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிட்டிவிட்டதே என அயர்ந்து விடவில்லை அவர். அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டை அ.இ.அ.தி.மு.க-வின் அவல ஆட்சி, எடப்பாடி பழனிசாமியின் எடுபிடி ஆட்சியிலிருந்து மீட்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த அவர் ஒருமுறைக்கு மூன்று முறை மாநிலமெங்கும் வலம் வந்தார்.
செல்லுமிடமெல்லாம் கோரிக்கை பெட்டிகளை வைத்தார். மக்களின் கோரிக்கை மனுக்களை அதில் இட்டபின் பெட்டியினை சீல் வைத்துப் பூட்டினார். ஆட்சிக்கு வந்தவுடன் அதைத் திறந்து பார்த்து அத்தனை கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவேன் என்றார்.
அன்றைக்கு அதெல்லாம் சாத்தியமில்லை என்று கொக்கரித்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் அதற்கென தனி அதிகாரியை நியமித்து சொன்னபடி செய்து காட்டினார்.
![Dravidian Model Historical Hero MKStalin](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/r8kPnrIU-image.jpg)
கிராம சபை கூட்டங்கள், தொகுதி வாரியாக சிறு மாநாடு போன்ற கூட்டங்கள், வாகனங்களில் நின்றபடி பிரச்சாரம், காலை வேளைகளில் தெருக்களில் மக்களிடையே நடந்து சென்று பிரச்சாரம் என அத்தனை வகையான வழிகளிலும் மாநிலமெங்கும் மக்களைச் சந்தித்தார்.
கேள்விகளுக்கு பதில் சொன்னார். புன்னகை மாறாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அன்புத்தொல்லை அனைத்தையும் இன்முகத்துடன் ஏற்றார். கொரானோ தொற்று முற்றாக நீங்கியிராவிட்டாலும், முகக்கவசம் அணிந்துகொண்டு முகம் சுளிக்காமல் பயணங்களை மேற்கொண்டார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஓராண்டுக் காலமாக அவர் பயணங்களை, செயல்பாடுகளை ஊன்றிக் கவனித்து வந்தவன் என்ற முறையில் அவரது உழைப்பின் தீவிரத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அவரது சோர்வற்ற, எழுச்சிமிக்க பிரச்சாரங்களே தி.மு.க பெற்ற மகத்தான வெற்றியின் அச்சாரம் என்று கூற வேண்டும். “ஸ்டாலின்தான் வராரு, விடியல் தரப் போறாரு” என்ற பிரச்சாரப் பாடலை உண்மையாக்கிக் காட்டினார்.
ஆட்சியின் சிறப்பு!
வெற்றிதான் பெற்றுவிட்டோமே என்று ஓய்ந்துவிடவில்லை ஸ்டாலின் அவர்கள். தனது ஓயாத இயக்கத்தை ஆட்சியின் உந்துவிசையாக மாற்றினார். ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் சுழன்றடித்த கொரோனா தொற்றினை எதிர்கொள்வதில் முனைப்பு காட்டினார். அவரே கவச ஆடை அணிந்து கொரோனா நோயாளிகள் இருந்த வார்டுக்கே சென்று மேற்பார்வையிட்டார்.
அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அவர் ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டுமென உத்தரவு போட்டுவிட்டாரோ என்று எண்ணுமளவு நாள்தோறும் அறிவிப்புகள், திறப்பு விழாக்கள், மேற்பார்வையிடல்கள் என அரசு இயந்திரத்தைப் பரபரக்க வைத்துள்ளார் முதல்வர்.
இல்லம் தோறும் கல்வி என்பார்கள், இலக்கிய விழா என்பார்கள், புதிய நூலகம் என்பார்கள், தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பார்கள், நான் முதல்வன் திட்டம் என்பார்கள், பள்ளிகளில் காலை சிற்றுண்டி என்பார்கள், தகைசால் தமிழர் விருது என்பார்கள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பார்கள், புதிய மருத்துவமனை என்பார்கள், அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரி செல்ல உதவிப்பணம் என்பார்கள், எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் என்பார்கள்; ஏதாவது புதிய திட்டங்களும் அறிவிப்புகளும் இல்லாமல் ஒரு நாளும் கழியாது என்பது போல அரசை நடத்தி வருகிறார் ஸ்டாலின்.
இவ்வளவுக்கும் நிதி ஒதுக்குவதில் கெடுபிடி காட்டும் ஒன்றிய அரசு, திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடும் ஆளுநர், ஒன்றிய அரசு, மாநில அரசின் முக்கிய நிதி ஆதாரமான விற்பனை வரியும் ஜிஎஸ்டி என்ற பெயரில் ஒன்றிய அரசிடம் சென்றுவிட்ட நிலை அனைத்தையும் கடந்துதான் ஆட்சியினை நடத்தி வருகிறார்.
சட்டமன்றத்திலும் சரி, அரசு விழாக்களிலும் சரி வீண் புகழுரைகளுக்கும், அலங்காரப் பேச்சுகளுக்கும் இடமளிப்பதில்லை முதல்வர். அவர் பங்கேற்கும் விழாக்கள் கச்சிதமாகத் திட்டமிடப்பட்டு சுருக்கமான, அர்த்தமுள்ள உரைகளுடன் நிறைவாக நடந்தேறுகின்றன. தான் மட்டுமன்றி, அனைவரும் காலம் கருதி செயல்படும் வண்ணம் நடந்துகொள்கிறார்.
முதலீடுகளை ஈர்ப்பதில், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில், நலத்திட்ட உதவிகள் மக்களைச் சென்றடைவதில் மாநிலம் முன்னணி வகிக்கிறது. இந்தியா டுடே ஏடு இந்தியாவின் சிறந்த முதல்வராக ஸ்டாலின் அவர்களையே கூறுகிறது.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி!
இவையெல்லாவற்றையும் கடந்த ஒரு முக்கியமான தருணமாக அடுத்த ஆண்டு இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மீண்டும் நரேந்திர மோடியின் இந்துத்துவ ஆட்சி ஒன்றிய அரசை கைப்பற்றுமானால், நடிகர் ரஜினிகாந்த் 1996ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா ஆட்சியைக் குறித்து கூறியதுபோல, இந்தியாவை “ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது”.
அந்த சவாலை எதிர்கொள்ள ஸ்டாலின் தயாராக உள்ளார் என்பதையே அவர் பிறந்த நாள் நிகழ்ச்சி நமக்கு உணர்த்தப் போகிறது. இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமல்ல, தமிழகத்தை மீண்டும் திராவிட வரலாற்றுப் பாதையில் செலுத்தியதைப் போல, இந்தியாவையும் சமூக நீதி, சமத்துவப் பாதையில் செலுத்த வேண்டிய வரலாற்றுக் கடமையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார் ஸ்டாலின்.
இந்தியாவின் விடியல் தெற்கிலிருந்து உதயமாகப் போகிறது என்பதே எதிர்பார்ப்பு. வெல்லட்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
கட்டுரையாளர் குறிப்பு:
![Dravidian Model Historical Hero MKStalin by Rajan Kurai](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/image-236.png)
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]
“மணிஷ் சிசோடியா கைது கேவலமான அரசியல்”: அரவிந்த் கெஜ்ரிவால்
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் – கேரட் ரொட்டி!