”திராவிட மாடல் அரசு எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு. கே.என்.நேரு, மேயர் பிரியா, தவத்திரு பொன்னம்பல அடிகளார், பேராசிரியர் பர்வீன் சுல்தானா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த கிறிஸ்துமஸ் விழாவை நாம் தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். உங்களோடு இப்படிப்பட்ட ஒரு விழாவில் கலந்துகொள்வது என்பது எனக்கு புதிதல்ல.
ஆண்டுக்கொரு முறை வரக்கூடிய கிறிஸ்துமஸ் விழாவிலே நான் கலந்து கொள்வதுண்டு. இது ஆண்டாண்டுதான் வரவேண்டுமா? அடிக்கடி வரக்கூடாதா என்ற ஏக்கம் கூட எனக்கு வருவதுண்டு. அந்த அளவிற்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய விழாவாக இந்த விழா அமைந்து கொண்டிருக்கிறது.

இதை ஒரு மதத்தின் விழாவாக நாம் நினைக்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து மதத்திற்கும் நல்லிணக்கமாக நடைபெறக்கூடிய விழாவாக இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்படித்தான் எல்லோரும் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தினுடைய நம்பிக்கைகளுக்கும் எதிரானது அல்ல.
இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் நடத்திப் பிழைக்கலாம் என்று நினைக்கக்கூடியவர்களுக்கு மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டி அதிலே லாபம் பெறலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கக்கூடியவர்களுக்கு எதிரான அரசுதான் இன்றைக்கு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மனிதநேயத்தை வளர்ப்பது தான் திராவிடத்தினுடைய கொள்கை.
திமுகவைப் பொறுத்தவரை, ’ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்கிற தத்துவத்தை எடுத்துவைத்த அண்ணா வழியைப் பின்பற்றி இன்றைக்கு திராவிட மாடல் அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இயேசுநாதராக இருந்தாலும், முகமது நபியாக இருந்தாலும், வள்ளலாராக இருந்தாலும் ஏழையின் பசியைப் போக்கிட வேண்டும், அவர்களின் துன்பங்களைக் களைந்திட வேண்டும் என்பதையே அருள்நெறியாக முன்வைத்தார்கள்.
சமய மார்க்கங்கள் சொன்னதை அரசியல் இயக்கமாக வழிநடத்தி, வெற்றிகரமாக அதனை செயல்படுத்தி வரக்கூடிய ஆட்சிதான் உங்கள் ஆட்சி, இந்த திராவிட மாடல் ஆட்சி. ஒரு துளி கண்ணீர் ஏழையிடமிருந்து வெளிப்பட்டாலும், அதனை துடைக்க வேண்டிய கைகளாக திராவிட மாடல் அரசின் கைகள் இருக்க வேண்டும்.
அதுதான் என்னுடைய நோக்கம்.

சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் ஆதிக்கத்தை நிலைநாட்டி, ஏழை எளிய மக்களை ஏமாற்றிட யார் நினைத்தாலும் அதனை அனுமதிக்காமல், எளிய மக்களின் உரிமைகளைக் காத்திடும் இயக்கமாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நலிந்தோர் வாழ்வு நிமிர்ந்திட, அவர்கள் மகிழும்போது, கடவுளின் புன்னகையை நம்மால் கண்டுணர முடியும். அந்தப் புன்னகை எல்லாத் தரப்பிலும் வெளிப்பட வேண்டும் என்ற இலக்குடன்தான் திராவிட மாடல் அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொருவரும் அவர்களுடைய கடவுளை வணங்கக்கூடியவர்கள்தான், அடுத்தவர்களின் நம்பிக்கையை மதிப்பவர்கள்தான். ஆனால் அதே நேரத்தில், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது திருமூலர் வாக்கு. அதைத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பார்வையாகப் பேரறிஞர் அண்ணா முன்வைத்து, சமத்துவ சமுதாயத்திற்கான சகோதரத்துவ உணர்வை வளர்த்து, சமூகநீதிப் பாதையில் பயணிக்கச் செய்தார்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
வாடிவாசலில் சூர்யா உறுதி: தயாரிப்பாளர் எஸ்.தாணு
முதல் இஸ்லாமிய பெண் போர் விமானி: இந்தியாவின் இன்னொரு சானியா மிர்சா