தமிழைக் காத்து நிற்கும் திராவிட பண்பாடு! காசி தமிழ் சங்கமம் உணர்த்தும் உண்மை!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

தமிழ் என்பது மொழி. திராவிடம் என்பது பண்பாடு; ஆரியப் பண்பாட்டுக்கு எதிரானது.

திராவிட கவசம் அணிந்துதான் தமிழ் உடல் தன்னை ஆரியத்தின் தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள முடியும். ஆரியம் எதிர் நின்றும் தாக்கும் அல்லது பாசம் கொண்டது போல பூதகி வேடம் போட்டு நஞ்சூட்டவும் பார்க்கவும்.

அதனால்தான் தமிழை எப்போதும் திராவிட அடையாளத்துடன் இணைத்துப் பேசிக் காக்க வேண்டும். அதுவே இருபதாம் நூற்றாண்டில் பெரியாராலும், அண்ணாவாலும் உருவாக்கப்பட்ட திராவிட அரசியல் கருத்தியல். கலைஞர் அரை நூற்றாண்டுக்காலம் கட்டிக் காத்த அரசியல்.  

இந்த உண்மை தெரிந்த ஆரியம், பல கேள்விகளை தந்திரமாக எழுப்பும். திராவிடம் என்றால் இனமா? உயிரியல் அடையாளமா? ஜெனடிக் அடையாளமா? இனவாதம் பேசுகிறீர்களா? தூய இனம் என்பது கிடையாதே? எல்லா இனங்களும் கலந்து விட்டனவே … என்றெல்லாம் கேட்பார்கள்.

இனவாதம் பேசி பார்ப்பனர்கள் வேறு யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்று மக்களை பிரிப்பது அவர்கள்தான் என்றாலும் அதை திராவிடத்துக்கு எதிராக வைப்பார்கள். இல்லை, ஐயா, இல்லை. இது உயிரணு சமாச்சாரமில்லை. பண்பாடு. பார்ப்பனர்களை இரு பிறப்பாளர்கள் என்று ஏற்காத, வர்ண தர்மத்தை ஏற்காத திராவிட பண்பாடு என்று கூற வேண்டும்.

அடுத்து திராவிடம் என்றால் தென்னிந்திய நிலப்பகுதியா என்பார்கள். திராவிட நாடு என்று தென்னிந்தியாவைத்தானே குறிப்பீட்டீர்கள். அதில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலங்களில் திராவிட அடையாளம் குறித்து பேசுவதில்லையே என்பார்கள். அந்த மாநிலங்கள் மட்டுமல்ல. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திராவிட பண்பாட்டை ஏற்பதுதான் நாட்டுக்கு நல்லது என்று கூற வேண்டும்.

அடுத்து திராவிடமும், தமிழும் ஒன்று என்றால் ஏன் தனித்தனியாக இரண்டு அடையாளம் என்று கேட்பார்கள். அப்போது தமிழ் மொழி அடையாளத்தினுள் ஆரியம் புகாமல் காக்கவும், புகுந்த ஆரியத்தை வெளியேற்றவும்தான் திராவிட அடையாளம் என்று கூற வேண்டும்.

Dravidian culture that protects Tamil Rajan Kurai

தமிழில் ஊடுருவிய ஆரியம்  

பக்தி இலக்கியம் மூலமாகவும், சைவ, வைணவ மத இலக்கியங்கள் மூலமாகவும் ஆரிய பார்ப்பனீயம் தமிழுக்குள் புகுந்தது. தமிழகக் கோயில்கள் பார்ப்பனர்களின் கூடாரமானது.

சைவம், வைணவம் ஆகிய இரண்டிலும் திராவிட சார்பு கொண்ட தமிழுக்கும், ஆரிய சமஸ்கிருதத்துக்கும் முரண்பாடு நிலவினாலும், பல்வேறு காரணங்களால் வரலாற்றுப் போக்கில் பார்ப்பனீய ஆரிய கருத்தியல் கணிசமாக ஊடுருவியது.

இதன் விளைவாகத்தான் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கம்ப ராமாயணமும், பெரிய புராணமும் எழுதப்பட்டன. அவை இரண்டும் ஆரிய கருத்தியலை உள்வாங்கியிருந்ததால்தான் இரண்டு நூல்களையும் தீக்கிரையாக்க முடிவு செய்தது திராவிடர் கழகம்.

அப்போது அண்ணாவுக்கும் சோமசுந்தர பாரதியார், ரா.பி.சேதுப்பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்களுக்கும் நிகழ்ந்த வாதங்கள் புகழ்பெற்றவை. அவை “தீ பரவட்டும்!” என்ற பெயரிலே வெளியிடப்பட்டு இன்றளவும் படிக்கப்படுகின்றன.

அது தவிரவும் ஆரிய மாயை நூலிலே அண்ணா தமிழில் எப்படி ஆரியம் ஊடுருவியது என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார். இவற்றில் பல அம்சங்களை Rule of the Commoner: DMK and the Formations of the Political, 1949-1967 என்ற நூலிலே விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளோம்.

அதனால்தான் திராவிட பண்பாட்டு உணர்வுடன், அடையாளத்துடன் தமிழ் அடையாளத்தை இணைத்தால்தான் தமிழின் சீரிளமைத்திறம் தொடர்ந்து காக்கப்படும். இல்லையேல் ஆரியம் அதை கபளீகரம் செய்யவே துடிக்கும்.

இந்த முயற்சியை வரதராஜுலு நாயுடு துணையுடன் மூஞ்சேவும், சாவர்க்காரும் செய்ய முனைந்தபோதுதான் அண்ணா “ஆரிய மாயை” நூலினை தீட்டினார் என்பதை மறக்க முடியாது! அன்று இந்து மஹாசபா மதுரையில் மாநாடு நட த்தி தமிழை இந்து அடையாளம் என்ற சிமிழுக்குள் அடைக்கப் பார்த்தது! இன்று காசியிலே தமிழ் சங்கமம் நடத்தி தமிழை இந்து கூஜாவிலே அடைக்கப் பார்க்கிறது!

இந்த ஆரிய சூழ்ச்சிகளை நன்கு அறிந்த திராவிட மண் ஒரு போதும் இந்து போர்வைக்குள் பார்ப்பனீயம் மீண்டும் மேலாதிக்கம் செலுத்திட அனுமதிக்காது! எத்தனை எட்டப்பர்கள் வந்தாலும் இந்தி-இந்து-இந்தியா வலைக்குள் புகாது!

இங்கு சைவம் சித்தர் வழியிலும், ராமலிங்கர் வழியிலும் பூசக அதிகாரத்தை எதிர்த்து நிற்கும்! வைணவமும் ராமானுஜர் வழியிலே ஜாதி வேற்றுமையை எதிர்த்து நிற்கும்! எல்லாவற்றையும் இந்துவாகச் சேர்த்துக்கட்டி இஸ்லாமிய வெறுப்பரசியல் செய்வதை நாட்டார் மரபுகள் மறுத்து நிற்கும்!

Dravidian culture that protects Tamil Rajan Kurai

மராத்தியம் புகட்டும் படிப்பினை என்ன?

மராத்திய அடையாளத்தின், சத்ரபதி சிவாஜியின் அடையாளத்தின் அரசியலாக நிற்க விரும்பும் சிவசேனா, தான் இந்து அடையாளமாகவும் விளங்க விரும்புகிறது. இந்து அடையாளம் பார்ப்பனீயத்தின் முகமூடி என்பதை அறியவிடாமல் அவர்களது மராத்திய சாம்ராஜ்யத்தின் பேஷ்வா ஆட்சிக்கால வரலாறு தடுக்கிறது.

இங்கேதான் சமகால இந்திய அரசியலின் நுட்பம் இருக்கிறது. பார்ப்பனீயம் தனியாக எந்த மாநிலத்திலும் தன் அதிகாரத்தை நிலை நிறுத்த முடியாது. காரணம் மாநில அடையாளங்கள், மொழி அடையாளங்கள். அந்தந்த மொழி சமூகங்களுக்குள் பெரும்பான்மை என்பது பார்ப்பனரல்லாதோர் சமூகங்களே.

எனவே பார்ப்பனர்கள் தங்கள் கருத்தியல் மேலாதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசிடம் குவித்தால்தான் முடியும். அதைத்தான் பார்ப்பன-பனியா கூட்டணி செய்ய விரும்புகிறது. பாரதீய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றுவதன் மூலம் ஒன்றியத்தின் முழு கட்டுப்பாட்டில் மாநிலங்களைக் கொண்டுவர நினைக்கிறது.

சிவசேனா தன்னை பாஜக உட்செரிக்கப் பார்ப்பதை உணர்ந்துதான் அதன் உறவை கத்திரித்துவிட்டு, தேசியவாத காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸுடன் கூட்டணி கண்டு அரசமைத்தது. பாஜக அங்கே எட்டப்பர்களை உருவாக்கி, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்தது.

இந்த  நிலையிலும் உத்தவ் தாக்கரே அணி, முழுமையாக பார்ப்பனரல்லாதோர் மராத்திய அடையாளத்தை எடுத்துக்கொள்ள தயங்குகிறது. அவருடைய பாட்டனார் கேஷவ் தாக்கரே அவர்களுடைய சந்திரசேனீய காயஸ்த பிரபு குலத்தின் சத்திரிய தகுதிக்காக பார்ப்பனர்களுடன் வாதாட வேண்டியிருந்தது.

கேஷவ் தாக்கரே மராத்திய சாம்ராஜ்யத்தில் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதோரை ஒடுக்கியது குறித்து எழுதினார். ஒன்றுபட்ட மராத்திய அடையாளத்தை, மாநில உருவாக்கத்தை வலியுறுத்தினார்.  

இப்படியான வரலாறு இருந்தும், சிவசேனா தனக்கு பார்ப்பனீய இந்து அடையாளம் தேவை என்று நினைக்கிறது. ராகுல் காந்தி சாவர்க்காரை விமர்சித்து பேசினால் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் பதறுகிறார். அதைச் சமன் செய்ய, பாஜக ஏன் சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது தரவில்லை என்று கேட்கிறார்.

Dravidian culture that protects Tamil Rajan Kurai

அண்ணாவின் நாடகம்

தி.மு.க தொடங்குவதற்கு முன்பே அண்ணா “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்” என்ற நாடகத்தை எழுதினார். அதன் மையக்கருத்து என்னவென்றால் தன் வாளின் வலிமையால் பல கோட்டைகளைக் கைப்பற்றி மராத்திய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார் மாவீரர் சிவாஜி. ஆனால் அவர் சத்ரபதியாக முடி சூட தடை எழுகிறது.

ஏனெனில் அவர் விவசாய குலத்தில், அதாவது பார்ப்பனர்களின் தர்ம சாஸ்திரப்படி சூத்திர குலத்தில் பிறந்தவர். அவர் சத்திரியர் இல்லை. சத்திரியர் மட்டுமே சத்ரபதியாக முடி சூடலாம்.  

அதற்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்து அவருக்கு சத்திரிய தகுதியை அளித்து முடி சூட்ட காசியிலிருந்து காக பட்டர் என்ற பார்ப்பனர் வரவழைக்கப்படுகிறார். அவர் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறார். ஏராளமான பொன்னையும் பொருளையும் பார்ப்பனர்களுக்கு தானமாக தரச் சொல்கிறார்.

இப்படி வாளின் வலிமையால் உருவாக்கிய சாம்ராஜ்யத்தின் சத்ரபதியாக முடி சூட, தர்ப்பைப் புல்லை ஏந்தும் பார்ப்பனர்களின் தயவை நாடி நிற்பது சிவாஜியின் தளபதியான சந்திரமோகனுக்குப் பிடிக்கவில்லை. சிவாஜி அவனை நாடு கடத்துகிறார்.

பின்னர் அவனை தனிமையில் சந்தித்து மக்கள் மனதை மாற்றும் வரை, பார்ப்பனர்களின் ஆதிக்கம் ஒழியாது என்று கூறி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டத்தைத் தொடங்கச் சொல்கிறார்.

சந்திரமோகன் என்ற தளபதி கதாபாத்திரம் கற்பனையாலும், இந்த காக பட்டர் சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது உண்மைதான். காக பட்டர் என்பவர் காசியிலிருந்து வந்ததும், சிவாஜி சத்திரியர் என்று ஏற்றுக்கொண்டதும், அதற்காக பார்ப்பனர்களுக்கு ஏராளமான பொன்னும் பொருளும் தானம் தரச்செய்ததும் வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ள உண்மை.

மராத்தியத்தில் இந்து என்ற போர்வையில் அன்று தொடங்கிய பார்ப்பனீய ஆதிக்கம், இன்றும் தொடர்கிறது. அன்று சிவாஜியால் மீற முடியாத மேலாதிக்கத்தை இன்று சிவசேனாவும் முறியடிக்க திணறுகிறது.

அண்ணா மராத்திய வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்று தமிழகத்தில் நாடகம் போட்டு விழிப்புணர்வை உருவாக்கினார். தமிழக அரசியலிலிருந்து மராத்தியம் படிப்பினை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

திராவிடம் என்ற கேடயம்

திராவிடப் பண்பாடு ஆரியப் பண்பாட்டுக்கு முந்தையது. ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் கருத்தியல் ஆதிக்கத்தை இங்கு ஊடுருவி நிறுவும் முன்பே தழைத்தோங்கிய பண்பாடு, இதற்கு இலக்கியச் சான்றுகள், தொல்லியல் சான்றுகள் அனைத்தும் உள்ளன. கணியன் பூங்குன்றனும், வள்ளுவனும் ஆரியக் கோட்பாட்டுக்கான மாற்றுக்களை தங்கள் அற்புதமான வரிகளில் யாத்து வைத்துள்ளார்கள்.

திராவிடச் சான்று என்பதில் தமிழின் தொன்மை முக்கியமானது. ஆனால் தமிழ் மொழிக்குள் ஊடுருவிய ஆரிய கருத்துகளால் திராவிட பண்பாட்டை நாம் தமிழுக்கு கேடயமாக அணிவிக்க வேண்டியுள்ளது.

உதாரணமாக, ராஜராஜ சோழனை தமிழ் மன்னன், தமிழ் சைவ மதத்தை பின்பற்றியவன் என்போம். ஆரியம் அவனை இப்போது இந்து மன்னன் என்று கூறுகிறது. கேட்டால் சைவம், வைணவம் எல்லாவற்றையும் இப்போது நாங்கள் இணைத்து இந்து என்று பெயரிட்டுவிட்டோம். அதனால் அவனும் இந்து மன்னன் என்று சொல்கிறார்கள்.

இதன் பொருள் என்ன? மெள்ள, மெள்ள தமிழ் அடையாளத்தை இந்து அடையாளத்தினுள் செரிக்க வேண்டும். அதன் மூலம் சமஸ்கிருத, இந்தி மேலாதிக்கத்தையும் காலப்போக்கில் புகுத்தி தமிழினை பார்ப்பனர்கள் வசமுள்ள கோயில்களில் இருப்பது போல இரண்டாம் நிலை மொழியாக மாற்றிவிட வேண்டும்.

மாநிலத்தின் அதிகாரங்களைக் குறைத்து ஒன்றிய அரசிடம் அதிகாரங்களைக் குவிக்க வேண்டும். அதன் மூலம் மக்களாட்சியை மெள்ள மெள்ள வலுவிழக்கச் செய்ய வேண்டும்.

இதுதான் இந்துத்துவ பாசிசத்தின் வேலை திட்டம். அதை முறியடிக்க இன்றியமையாத வழி என்பது பார்ப்பனீய எதிர்ப்பு; அதன் சரியான பொருளில் ஆரிய எதிர்ப்பு. அதற்கான ஆயுதம், கேடயம் எல்லாமே திராவிட அடையாளம் என்னும் கேடயம்தான். கவசம்தான். ஆயுதம்தான்.  

திராவிடம் என்றால் பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்க எதிர்ப்பு; திராவிடம் என்றால் சமூக நீதி; திராவிடம் என்றால் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி – திராவிட மாடல்; திராவிடம் என்றால் தமிழின் தனித்துவம்; தமிழின் நவீனத்துவம்; தமிழின் மதச்சார்பின்மை; “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மகத்தான தத்துவங்கள்.

திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை காசியில் எத்தனை தமிழ் சங்கமங்கள் நடத்தினாலும், தமிழை ஆரியம் கைப்பற்ற முடியாது. எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று திராவிடச் சங்கு முழங்கும்.

கட்டுரையாளர் குறிப்பு:

Rajan Kurai Keishnan

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கீடு என்னும் சமூக அநீதி!

டேன்டீ நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த தயார்: அண்ணாமலை

+1
0
+1
0
+1
0
+1
10
+1
1
+1
0
+1
1

1 thought on “தமிழைக் காத்து நிற்கும் திராவிட பண்பாடு! காசி தமிழ் சங்கமம் உணர்த்தும் உண்மை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *