ஸ்ரீராம் சர்மா
என்ன செய்கிறோம், எது செய்கிறோம், யாரை நோக்கி செய்கிறோம், எவரைக் கொண்டு செய்கிறோம் எனும் எந்தவிதமான தெளிவும், நியாயமும் இல்லாமல் சிறுமனம் கொண்ட சிலர் பலவிதமாய் உறுமிக் களித்த காட்சிகளையெல்லாம் கடந்த சில நாட்களில் கண்டு வலி கொண்டதால் எழுதுகிறேன்.
கொள்வோர் கொள்க!
*******
திராவிடம் எனும் தத்துவத்துக்கு ஆதாரமாக நின்றிலங்குபவர்கள் மூவர்!
திராவிடத் தத்துவத்தை முன் மொழிந்தவர் பேரறிஞர் அண்ணா எனில், அதனை ஆட்சி வழி நின்று ஒருங்கே செலுத்தி செழிக்கச் செய்தவர் கலைஞர் எனில், அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செலுத்தும் ஆளுமை படைத்தவராக நின்றமைபவர் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் என்பது எனது துணிபு!
*******
கவனியுங்கள்…
விடுதலைக்கு முன்னும் பின்னுமான நாட்கள் எப்படியானதாக இருந்தது என்பதை இன்றைய தலைமுறை அறியாது.
வெள்ளையனுக்கு அருகாமையில் இருந்தவர்கள் மட்டுமே ஆண்டான் என்றும் மற்றெல்லோரும் அடிமைகளே எனவும் ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்டு இந்திய அரசியல் நகர்ந்த ஆபத்தான காலம் அது. எல்லாம் வல்ல ஜமீன்தாரிகளின் சொல்லே எடுபடும், ஏழை ஜனங்களின் சொல் அம்பலம் ஏறாது எனக் கொள்ளப்பட்ட காலம் அது.
அன்றந்த நாளில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் திருவள்ளுவ வாக்கினை வழிமொழிந்தபடி தகதகவென தோன்றியதுதான் திராவிட இயக்கம்.
எளிய பின்புலத்தில் இருந்து புறப்பட்ட புரட்சிக் குரல்களுக்கு சொந்தக்காரத் தலைவர்களான பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கருணாநிதி போன்றவர்கள் சமூக நீதிக் கொள்கையை முன்வைத்தவர்களாய், “மக்களுக்கு மிக நெருக்கமான எங்களைக் கடந்து உங்களது பொருளாதார ஆதிக்கங்களை நிரூபிக்க முடியும் எனில், முயன்றுதான் பாருங்களேன்” என்றபடி சுற்றிச் சுழன்றார்கள்.
ஆம், “எல்லோரும் சமம் என்பதை எவர் மறுத்தாலும் அதை எதிர்ப்போம்” என்பதுதான் திராவிட இயக்கத்தின் தத்துவமாகும். அன்றைய பெருந்தலைவர்களின் உரை வீச்சுகளின் பங்களிப்பு அற்புதமானது. அதிமதுரமானது.
தோழர் ஜீவா உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளின் அன்றைய பங்களிப்பு பெரிய காரியம் செய்தன. ஊன்றி, உரம் கூட்டின!
சுற்றிச் சுழன்ற அன்றைய தலைவர்களின் பேருழைப்பு சாதாரணப்பட்டதல்ல. அது யுக யுகாந்தர உழைப்புக்கு ஈடானதாகும்.
ஆம், மக்களின் நல்வாழ்வே நல்லரசியல் என முன்வைத்து போராடி எழுந்த இயக்கமே திராவிட இயக்கமாகும்!
அதனை விரித்துப் பேச அதிகம் உண்டு எனினும் இந்தளவில் முடித்துக்கொண்டு எனது கட்டுரையின் நோக்கத்தை தொடர்கிறேன்…
திராவிடம் என்பது பிராமணர்களுக்கு எதிரானதா?
அன்றொரு நாள் முத்தமிழறிஞர் கலைஞர் தனது முரசொலியில் மனம் வெதும்பியபடி இவ்வாறு எழுதினார்…
“பிராமணர்களுக்கு நான் எதிரானவன் என சிலர் சித்தரிக்கின்றார்கள். சாவியும், திருவள்ளுவர் ஓவியத்தை நமக்குத் தந்த வேணுகோபால் சர்மாவும் எனது இரு கண்கள் எனக் கொண்டவன் நான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்…”
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் இந்தக் கூற்றுக்கும், அவருக்கு இணையானவர்தான் அவரது வழித்தோன்றலான முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும் என்பதற்கும் சத்திய சாட்சிகள் பற்பல உள்ளன இங்கே!
அதனை எடுத்துரைப்பது எனது கடமையாகிறது.
*******
“அக்கரகாரத்து அதிசய மனிதர்” என பேரறிஞர் அண்ணா அவர்களால் அழைத்து அரவணைக்கப்பட்டவர் வ.ராமசாமி ஐய்யங்கார்!
“விழுந்தது ஆங்கிலக் கொடி; எழுந்ததே மணிக்கொடி!” எனச் சூளுரைத்தபடி மணிக்கொடி எழுத்தாளர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய பேராளர் அவர்.
மணிக்கொடி எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி போன்ற இன்னும் பலர்.
பாரதியாரின் அருமை சீடராம் வ.ரா அவர்களின் இலக்கிய தொண்டுள்ளத்தின்பால் மிகுந்த மரியாதை வைத்து ஆர அரவணைத்தவர் கலைஞர்.
அவரது மறைவுக்குப் பின் அவரது மனைவியார் துயர் கொள்கிறார் என கல்கியின் வழியே அறிந்ததும், உடனடியாக அந்த காலத்திலேயே ஆயிரம் ரூபாய் பென்ஷன் தர உத்தரவிட்டவர் கலைஞர்.
சொல்லுங்கள், திராவிடம் சாதி பார்த்ததா? பிராமணருக்கு எதிரானதா?
*******
அன்றந்த நாட்களில், சென்னை கலங்கரை விளக்கத்துக்கு அருகே இருக்கும் கடற்கரை மணற் பரப்பில், தனது அமைச்சர் படை சூழ அமர்ந்து நாட்டு நடப்பு குறித்து விவாதிக்கும் வழக்கம் கொண்டவர் கலைஞர்.
பத்திரிகையாளர் குரலும் அதில் ஒலித்தால் நன்று எனும்படியாக சாவி அவர்களையும் அந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து சொல்லச் செய்வது கலைஞரது வழக்கம்.
அன்று, சாவி அவர்களின் மகனாரின் திருமணம்.
அதில் கலந்து கொண்ட கலைஞர் மணமக்களை வாழ்த்திய பின் தனக்கே உரிய நகைச்சுவையோடு “பாச்சா, உனது பாச்சா இனி பலிக்காது” என பஞ்ச் வைத்து பேசியவர் சாவி அவர்களிடம் திரும்பி, “இன்று பீச்சுக்கு வர இயலாது அல்லவா?” எனக் கிண்டலடித்தபடி கிளம்பியிருக்கிறார்.
அன்று மாலை, தன் மனைவியிடத்தில் மட்டும் சொல்லிக் கொண்ட சாவி, கல்யாண மண்டபத்தின் உக்கிராண அறைக்குள் சென்று சீர் முறுக்கு, லட்டு, அதிரசம் போன்ற கல்யாண பட்சணங்களை இரண்டு மூன்று பைகளில் நிரப்பிக் கொண்டு, கலங்கரை மணற்பரப்பை நோக்கி விரைந்திருக்கின்றார்.
“கல்யாண கொண்டாட்டத்தை விட்டு இங்கு எதற்கு வந்தீர்கள்?” எனக் கேட்ட கலைஞரிடம்,
“கலைஞரோடு இருப்பதைவிட கொண்டாட்டம் வேறு ஒன்று உண்டா?” என கேட்டிருக்கிறார் சாவி.
“கலைஞரிடம் இவருக்கு இப்படியும் ஓர் அன்பா?” என சூழ்ந்தவர்கள் வியந்து போனார்களாம்!
சொல்லுங்கள், திராவிடம் சாதி பார்த்ததா? பிராமணருக்கு எதிரானதா?
*******
மைசூர் சமஸ்தானத்தில் தான் கொண்ட கைப்பொருளை எல்லாம் மூன்று திரைப்படங்களை எடுத்து இழந்த பின்பு, தனது பரம்பரை தமிழ் போதனையையும் ஓயாத ஓவிய உழைப்பையும் கொண்டு திருவள்ளுவருக்கு திருவுருவம் கண்டு நின்றவர் ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்கள்.
அவரை வழி நடத்தி அவரது பேருழைப்பை முன் மொழிந்தவர் பேரறிஞர் அண்ணா எனில், அந்த திருவள்ளுவர் திருவுருவத்தை சட்டசபையில் நிலைநாட்டியதோடு, அதனை நாட்டுடைமையாக்கி வைத்த பெருமைக்குரியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
1959-ல் திருவள்ளுவர் திருவுருவ வெளியீட்டு விழாவில் பேசியபோது, “திருக்குறள் – திருவள்ளுவர் – வேணுகோபால சர்மா என்னும் மூன்று பெயர்களுக்கும் இந்த தமிழக மண் நன்றிக் கடன்பட்டுவிட்டது” எனப் பிரகடனம் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
தனது குறளோவியம் புத்தகத்தின் ராயல்டி தொகையின் முன்பணத்தை ஓவியப்பெருந்தகைக்கு “இது எனது காணிக்கை” என அளித்து பெருமைப்படுத்தி அதனை முரசொலியில் எழுதிப் பதித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
வேணுகோபால் சர்மா மறைந்தபோது அவரது வீடேறி வந்த பேராசிரியப் பெருந்தகை க.அன்பழகனார் அவர்கள் “ஐயகோ, எங்கள் திராவிடச் சூரியனை பறிகொடுத்தோமே…” எனத் தந்தி பத்திரிகைக்குப் பேட்டி அளித்தபடி ஆறடி உயரத்திலிருந்து கண்ணீரை சொறிந்தபடி நின்றார்.
சொல்லுங்கள், திராவிடம் சாதி பார்த்ததா? பிராமணருக்கு எதிரானதா?
*******
வேலுநாச்சியார் வரலாற்றை கலை வடிவில் மீட்டெடுக்க பல்லாண்டுகளாக தியேட்டர் நிகழ்வை அரும்பாடுபட்டு நிகழ்த்தி வருகிறேன் என்பதை அறிந்ததும்,
தனது ஓயாத வேலைப்பளுவுக்கு இடையே நமது மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது பொன்னான இரண்டு மணி நேரத்தை ஒதுக்கி கலைவாணர் அரங்கத்துக்கு வந்திருந்து முழுவதுமாக எனது படைப்பை கண்டதோடு மட்டுமல்லாமல், தன்னந்தனியாக மீண்டும் மேடையேறி வந்து என்னையும், எங்கள் தியேட்டர் கலைஞர்களையும் தனிப்பட்ட முறையில் வாழ்த்திப் பெருமைப்படுத்தினார்.
“இந்த வீர தியாக வரலாற்று நிகழ்வை தமிழகமெங்கும் நிகழ்த்துங்கள். குறிப்பாக, ராணி வேலுநாச்சியார் ஊன்றி வாழ்ந்த சிவகங்கை அரண்மனையிலேயே இதனை நீங்கள் நிகழ்த்த வேண்டும்” என உள்ளன்போடு உத்தரவிட்டார். இன்றளவும் என்னை ஆதூரத்தோடு அரவணைத்து பேரன்பு செலுத்துகிறார்.
எனது தந்தையார் வேணுகோபால் சர்மா கண்டடைந்த, மத்திய – மாநில அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்ட, உலக மாந்தர்கள் எல்லோருக்கும் பொதுவான அந்தத் திருவள்ளுவர் திருவுருவத்தை இன்றைய அரசாங்க பேருந்துகளில் எல்லாம் அமைக்க உத்தரவிட்டவர் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்.
மேலும், எனது தந்தையார் வாழ்ந்து மறைந்த அந்த சாலைக்கு “ஓவியப் பெருந்தகை வேணுகோபால் சர்மா சாலை” எனும் பெயரை சூட்ட முடிவெடுத்ததும் மாண்புமிகு முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அரசாங்கம்தான்.
சொல்லுங்கள், திராவிடம் சாதி பார்த்ததா? பிராமணருக்கு எதிரானதா?
*******
ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே
எனும் பாரதியாரின் வாக்கிற்கிணங்க செங்கோல் செலுத்தும் நமது முதல்வரின் இந்த ஆட்சியை முழுமையாக உணர்ந்து கொள்ளாமல்,
ஏதேனும் ஒரு குறை சொல்ல வேண்டுமே என மேடை போட்டவரே… அவசரக்காரர்களே… வக்கிழந்து போனீரே, வகையிழந்து போனீரே!
உங்களது திண்ணைப் பேச்சும் – சினிமா வசனங்களும் அரசியலுக்கு ஆகாது என்பதை இனியேனும் உணர்வீரா?
பத்துப் பதினைந்து சுற்றத்தைக் கொண்டதொரு குடும்பத்தை வழி நடத்தவே நமக்கு நாக்கு தள்ளுகிறதே! ஏழெட்டு கோடி மக்களைக் கொண்ட இந்த ஒட்டுமொத்த தமிழ்நாட்டை ஒருங்கிணைந்து வழி நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதை கிஞ்சித்தும் உணர்வீரா?
உங்களுக்கு ஓர் குறையுள்ளது எனில், அரசாங்கத்திடம் முறையாக எடுத்துச் சொன்னால், அதை செவிமடுத்து செய்ய இந்த அரசாங்கம் தயாராக உள்ளது எனும் போது மேடை போட்டு தூற்றுவதில் என்ன பயன்?
தயவுசெய்து கவனியுங்கள்…
ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஆன்மிக செம்மலான ஸ்ரீலரூப கோஸ்வாமி அவர்களால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பதினோரு ஸ்லோகங்கள் ஆன்மிக ஞானத்தின் சாரமாக உச்சமாக திகழ்கின்றன.
“உபதேசாம்ருதம்” என்னும் அதன் முதல் வசனத்தில்…
“உலக பக்தி செய்யும் ப்ராமண மக்களுக்கு தைரியமும் பொறுமையும் மிகவும் அவசியமாகிறது. தைரிய குணம் உடையவர்கள் தீரா நிதானம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். நிதான குணம் இல்லாதவர்கள்தான் அமைதியற்றவர்களாக மாறுகிறார்கள். பொறுமை இல்லாதவர்களால் எதையும் சாதிக்க முடியாது” என ஆழ்ந்து போதிக்கிறார்.
ஸ்ரீமத் பாகவதம் (7.1.32) இவ்வாறு அறிவுறுத்துகிறது…
“பேச்சை ஒழுங்குபடுத்தாமல், பிறரைப் பற்றி பேசுவதால் பகை ஏற்படுகிறது. பயனின்றி பேசுவது முட்டாள்தனமான காரியம் ஆகும். தேவையில்லாத பேச்சில் ஈடுபடும் பொருள்முதல்வாதிகள் எப்போதும் நேரத்தை வீணடித்து பற்பல துன்பங்களை எதிர்கொள்கிறார்கள். அந்த இடையூறுகளில் இருந்து விடுபடுவதற்குத்தான் பக்தியுள்ள புத்திசாலிகள் மௌன விரதத்தை கடை பிடிக்கிறார்கள்…”
*******
மேலோரே…
நான் வைதீக பிராமணன் அல்லன். நியோகி பிராமணன்!
நல்லவை, அல்லவைகளை எடுத்துச் சொல்வதும் வைதீக பிராமணர்களை ஆபத்தில் இருந்து காப்பதும் எனது நியோகி ப்ராமணக் குலக் கடமையாகிறது என்பதால் என்னளவில் எடுத்துரைத்து விட்டேன்.
தயவுசெய்து உணர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் !
இதோ, பட்டினத்தாரின் பாடல் ஒன்றோடு முடிக்கிறேன்.
கையொன்று செய்ய,
விழியொன்று நாடக்
கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக
நாவொன்று பேசப்
புலால் கமழும்
மெய்யொன்று சாரச்
செவியொன்று கேட்க
விரும்பும் யான்
செய்கின்ற பூசை
எவ்வாறு கொள்வாய்?
வினை தீர்த்தவனே !
கட்டுரையாளர் குறிப்பு
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.
300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசாங்கப் பள்ளிக்குள் ஆலகாலம் விற்பதா?
மழைக்கால பரிதாபங்கள்… அப்டேட் குமாரு
பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? – எடப்பாடி பதில்!