நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இன்று (ஜூலை 25) காலை 10.15. மணியளவில் பதவி ஏற்றார்.
கடந்த ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் ஒடிசாவைச் சேர்ந்த திரௌபதி முர்மு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டு நாடாளுமன்ற மைய வளாகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று பதவி ஏற்பதை முன்னிட்டு காலை ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினார் முர்மு. பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று ராம்நாத் கோவிந்தையும் அவரது மனைவியையும் சந்தித்தார்.
பின்னர் அங்கிருந்து ராம்நாத் கோவிந்தும், திரௌபதி முர்முவும் குதிரைப்படை சூழ நாடாளுமன்றத்துக்கு வந்தனர். முர்முவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து விழா நடைபெறும் மேடைக்குச் சென்றார் முர்மு. இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ஒன்றிய அமைச்சர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்துகொண்டார்.
சரியாக 10.15 மணியளவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா திரௌபதி முர்முவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிரியா